வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிற ‘மறைபரப்பு ஞாயிறு’ எந்த அளவுக்கு இறை மக்களின் மறைபரப்பும் கடமையை உணரச் செய்கிறது? அல்லது அதற்கான செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துகிறது? என்பது பெரிய சந்தேகம்தான். ஏதோ அந்த ஞாயிறுக்காகக் கொடுக்கப்படுகிற கவர்களில் கொஞ்சம் போட்டுக் கோவிலில் கொடுப்பது தவிர, வேறு அதிகமாக ஏதாவது ஒரு சில நகர்புறங்களில் மட்டும் சில கேளிக்கை விளையாட்டுகளைக் கொண்டு பணம் சேர்ப்பதுதான் நடக்கிறது. அதுதவிர, மக்களின் உள்ளங்களில் மறைபரப்புப் பற்றிய தேவை, கடமை போன்ற கருத்துகள் அதிகமாகப் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதுதான் நாம் காண்பது. எனவே, மறைபரப்பு, சான்று வாழ்வு, நற்செய்திப் பகிர்வு, பிறரன்புச் செயல்களில் ஈடுபடுதல் போன்றவைகளை மக்களுக்கு நினைவூட்டுவதும் தெளிவூட்டுவதும் பங்குப் பணியாளர்களுடைய கடமையாகிறது.
பங்குத்தளங்கள்
இன்றைய நாள்களில் அன்பியங்கள் வழியாகப் பல இடங்களில் உயிருள்ள (vibrant) குழுமங்களாக இயங்கிவருகின்றன. இருப்பினும்,
அடிப்படையில் அன்பியங்களின் நோக்கம் - குடும்பங்களின் சான்று வாழ்வுக்கு உரமூட்டுவதாகவும்,
அவர்களின் இறைநம்பிக்கை, பிறரன்புச் செயல்களின் வழியாகத் தங்கள் வாழ்க்கைச் சூழலில்
எளிதாகக் காணப்படுவதாகவும் வளர வேண்டும் என்பதே. இதுவேதான் கடந்த ஆண்டு செப்டம்பர்
மாதத்திற்கான திருத்தந்தையின் செபக்கருத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று
பெரும்பாலும் அன்பியங்கள் ஆலயப் பணிகளுக்கு நன்கொடை வசூலிக்கவும், வழிபாடுகளில் வாசகம்
வாசிக்கவும், மன்றாட்டுகள் எழுப்பவும், காணிக்கைப் பவனியில் பழங்கள், காய்கறிகள் தூக்கி
வரவும், மாதம் இருமுறை அன்பிய உறுப்பினர் அனைவரும் என்றில்லாமல் அன்பியத்தைப் ‘பெண்பியம்’ என்று அழைக்கும் அளவுக்குப் பெண்கள் மட்டும் அதிகம் கூடிப்
(புறணி) பேசுகிற ஓர் அமைப்புதானோ என மாறிக்கொண்டிருக்கிறதோ என்றாகிவிட்டது!
இதுதவிர
மற்ற மன்றங்களோ, சபைகளோ கூட அவைகளின் அடிப்படை நோக்கமாகிய சான்று வாழ்வு, மறைபரப்பு
தவிர மற்ற பல வகைகளில் செயல்படுவதே எதார்த்தமாக இருக்கிறது. ஒரு பங்கில் உள்ள கத்தோலிக்கக்
கிறித்தவக் குடும்பங்கள், தாங்கள் நற்செய்தி அறிவிப்பவர்களாக வாழ, பிறரன்புச் சேவைகளின்
வழியாக மறைபரப்பும் தூதர்களாக வாழ என்னென்ன வழிகளில் எப்படிச் செய்யலாம் என்று நற்செய்தியை
வாசித்து, விவாதித்து வழி காண்பதற்குப் பதில், தங்களுக்கு வேண்டியவர் வீட்டில் கூட்டம்
என்றால் பலரும், வேண்டாதவர் வீட்டில் என்றால் ஒருசிலர் மட்டும் என்ற பாணியில் அன்பியக்
கூட்டங்களும் நடைபெறுகின்றன.
மேலும்,
பங்குப்பணியாளர்கள் அன்பியங்களைத் தங்களது திட்டங்களுக்காக நன்கொடை வசூல் செய்து உதவுபவைகளாக
இருந்தால் போதும் என்ற நிலைதான் மேலோங்கி நிற்கிறது. அதாவது, பழைய கோவிலை இடித்துக்கட்ட,
சிறிய கோவிலைப் பெரிதாக்க, கோபுரம், கொடிமரம் புதிதாக அமைக்க, குறைந்தபட்சம் பீடத்தை
மாற்றியமைக்க அல்லது புதிய தளம் போட அல்லது இந்த நவீன காலத்தில் வருடத்தில் ஒருநாள்
பவனிக்காக புதிய தேர்/சப்பரம் செய்ய என்று, மக்களின் கிறித்தவ வாழ்வு முன்னேற்றத்திற்கான
வழிகாட்டுதல் தவிர, விளம்பரத்திற்காகவே புதுப்பிக்கும் கலை நிபுணர்களாகச் செயல்பட பணம்
திரட்டும் ஏஜெண்டுகளாக அன்பிய மக்களைப் பயன்படுத்துவது வெகுசாதாரணமாகிவிட்டது.
பங்குமக்கள்
எல்லாச் செயல்பாடுகளிலும் நற்செய்தியை ஏற்று, ஒருவர் ஒருவரை அன்பு செய்து வாழ்பவர்களாகப்
பயிற்றுவிக்கப்பட வேண்டும். மக்கள் மேற்கொண்டிருக்கிற விண்ணரசை நோக்கிய பயணத்தில்,
பங்கு எனும் குடும்பம் ஒரு நீர்த்தடாகமாக இருந்து, தாகம் தீர்த்து தங்களது மறைபரப்புப்
பணியைத் தொடர உதவ வேண்டும். இதுவே அவர்களது கிறித்தவ வாழ்வின் முழுமுதற்பணியாக உணரச்
செய்ய வேண்டும். ஏனெனில், இயேசுவே நாம் அவரது சீடர்களாயிருப்பதற்குக் (கிறித்தவர் களாக
இருப்பதற்கு) கொடுத்த அடையாளம்: “நீங்கள் ஒருவர், மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” (யோவா 13:35) என்பதுதான். எப்பொழுது இறைமக்கள் இந்த நிலையில்
வளர்ந்துவிட்டார்களோ, அதற்குப் பின் கோவிலை அழகுபடுத்துதல், விரிவுபடுத்துதல் போன்ற
காரியங்களில் அவர்களை ஈடுபடுத்துவது நலமாயிருக்கும். இவ்விதம்தான் நமது பங்குத்தளங்கள்
இறைநம்பிக்கையையும் அன்புச் செயல்களையும் வெளிப்படுத்தும் இடங்களாக அமைய முடியும்;
அன்பியங்களின் வழி மறைபரப்பும் வளரும்!