ஒருமுறை நண்பன் ஒருவனோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது, “உனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டேன். “மருத்துவரைச் சந்திப்பேன்” எனப் பதிலளித்தான். “சரி, மனம் சரியில்லை என்றால்?” என்றேன்.
அமைதியாய்
என்னை வெறித்துப் பார்த்தான்.
உடல்நிலை
சரியில்லை என்றால், மருந்து கொடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்று நம்மை வளர்த்தவர்கள், மனம் சரியில்லை என்றால், என்ன செய்வது என நமக்குச் சொல்லித்
தரவே இல்லை. அத்தகைய சூழல்களில், நம்மில் பலர் நண்பர்களிடம் பகிர்வோம் அல்லது அமைதியை விரும்புவோம் அல்லது வாழ்வின் ஓட்டத்தில் நம் மனம் இருக்கும் நிலையைக் கூட பொருள்படுத்தும் சொகுசு நம்மில் பலருக்கு அமைவதில்லை. ஆனால், மீண்டும் அதே மனநிலை என்றோ உருவாகும்; மீண்டும் அதே சுழற்சி. நாம் தொடர்ந்த அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்போம். பல நேரங்களில் நிம்மதியின்றி
வாழ்வதுதான் மனித வாழ்வின் இயல்பு என நம்மை நாமே
தேற்றிக் கொண்டு மனசஞ்சலங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
மனிதர்: பன்முகப்
பார்வை
ஒரு
தனிமனிதரை மூன்று முக்கியக் கூறுகளாகப் பிரிக்கலாம்: 1. உடல், 2. மனம், 3. ஆன்மா. உடல்நலனில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது, அதைக் கவனிக்க சிறுவயது முதலே நாம் பயிற்றுவிக்கப்படுகின்றோம்.
மருத்துவம் அதற்கு உதவுகிறது. ஆன்ம நலனைப் பேண, பல நேரங்களில் நாம்
பின்பற்றும் மதங்கள் நமக்கு வழி கூறுகின்றன. சமய நம்பிக்கையற்றவர்களுக்கும் கூட அவர்கள் தாங்கி நிற்கும் கொள்கைகள் உதவுகின்றன. ஆனால், மனநலனைப் பற்றி மிக அரிதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்தைப் (Stress)
பற்றிப் பேசுகின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பல நேரங்களில் மன நலனை, நாம் மனநலம் குன்றியவர்களோடு மட்டும் தொடர்புபடுத்தத் தொடங்கிவிடுகின்றோம். ஆனால், மனநலம் என்பது, மனிதனாய் பிறந்த எவருக்கும் உரியது.
வாழ்வுமுறை மாற்றமும்
மனநலமும்
மனநலம்
பற்றிய நமது புரிதல் மிகவும் குறைவுதான். முந்தைய தலைமுறைக்கு அதைப் பற்றிய அறிவு ஒரு தேவையாகவே இருந்ததில்லை. ஆனால், இன்று அது ஓர் அவசியத் தேவை. அன்றைய வாழ்வுமுறை மனநலனைப் பேணுவதற்கான அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியிருந்தது. பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகள் பெரும்பாலும் நடந்தோ, மிதிவண்டியிலோ பயணித்தனர். நண்பர்களோடு இணைந்த அந்தப் பயணம், மாலை நேர விளையாட்டு எனப் பல்வேறு காரணிகள் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும்
இயற்கைக் காரணிகளாய் அமைந்திருந்தன. பெரியவர்களும், தங்கள் நிலம் சார்ந்த, இயற்கை சார்ந்த பணிகளையே செய்து வந்தனர். குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்களாக, குறைந்தது தாத்தா, பாட்டியுடன் கூடிய குடும்பங்களாக இருந்தன. அங்குப் பணிப்பகிர்வு அதிகம் இருந்தது. அதோடு அன்றைய கிராம அமைப்பு, உறவுப் பரிமாற்றம், முறையான உறக்கச் சுழற்சி (Sleep Cycle), விழாக்கள்,
வழிபாடுகள் எனப் பல கூறுகள் ஒரு
மனிதனின் மனநலனைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றின. ஆனால், இன்றைய காட்சி அதிலிருந்து முற்றும் மாறுபட்டது.
மன
அழுத்தம் மனிதருக்குத் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனால், அன்றைய வாழ்வியல், அந்த மன அழுத்தத்தை இயல்பாக
வெளியேற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடனேயே அன்றைய நாளுக்கான தயாரிப்பு, நாள் முழுவதும் கல்வி அல்லது பணி, மீண்டும் வீட்டிற்கு வந்தபின் பகல் முழுவதும் செய்த பணியின் தொடர்ச்சி... இந்த ஓட்டத்தில் நம்மில் இருக்கும் மன அழுத்தத்தை வெளியேற்ற
வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகின்றது. பணி செய்யும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம். அவர்களின் அன்றாடப் பணிச்சுமையோடு, குடும்பப் பொறுப்பு அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.
ஆழ்மனத்தில் சேரும் அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து நம் இயக்க ஆற்றலை முடக்குகின்றது.
காலத்தின் அறிகுறி
மீண்டும்
பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்புவது மட்டுமே, நல்ல மனநலத்துடன் கூடிய வாழ்வுக்கு ஒரே வழியா? “நாங்க அந்தக் காலத்தில...” எனப் பழைய காலத்தை வளமைப்படுத்தி, துக்கம் கொண்டாடுவது எந்த விதத்திலும் நமக்குப் பயன்தரப் போவதில்லை. ஆனால், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மனிதனுக்கு இணை மனிதன் மட்டுமே. அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞான சாதனைகளும் அதற்குச் சான்று பகரும். ஏன், ஆன்மிகத்தில் கூட காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தங்கள் சித்தாந்தங்களை மாற்ற மனித இனம் தயாராகவே இருக்கின்றது.
உடல்நலனில்
தொய்வு ஏற்படும்போது மருத்துவரைச் சந்திப்பதில் அக்கறை காட்டும் நாம், மனநலனில் தொய்வு ஏற்படும்போது மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்திப்பது நம்மிடையே அதிகம் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. ‘ஆண் அழக்கூடாது’ எனக்
கூறியே வளர்த்த நாம், அவன் அழுவதற்கான காரணம் என்ன எனக் கேட்கத் தயாராகவே இல்லை. அதைப்போன்றே, ஒரு மனிதனின் மன அழுத்தத்திற்குக் காரணமும் நமக்குத்
தெரிவதில்லை.
மனநலத்திற்கான
கசாயம்
தலைவலிக்கு
ஒரு குவளை கசாயமோ, தேநீரோ உதவுவது போல, உளவியலாளர் வில்லியம் கிளாசர் விவரித்த ஒரு வழியைச் சுருக்கமாகக் கூற விழைகின்றேன். கிளாசரின் புரிதலின்படி, எல்லா மனநலன் சார்ந்த பிரச்சினைகளும் அடிப்படையில் உறவுச் சிக்கல்களே! மனிதன் ஐந்து முக்கியத் தேவைகளால் உந்தப்படுகின்றான்: 1. இருப்பு (Survival), 2. அன்பு
மற்றும் சார்ந்திருப்பது (Love & belonging),
3. சக்தி (Power), 4. சுதந்திரம்
(Freedom), 5. மகிழ்ச்சி
(Fun). இவற்றுள்
அன்பு மற்றும் சார்ந்திருப்பதை முதன்மையாகக் கருதுகிறார். ஒருவருக்கு ஓர் ஆழம் மற்றும் அடர்த்தி நிறைந்த உறவு இருக்குமாயின், மற்ற எல்லாச் சவால்களையும் அவரால் எதிர்கொள்ள முடியும். நமக்கு அப்படிப்பட்ட உறவுகள் அல்லது உறவு உண்டா?
இந்தத்
தேவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. இந்தத் தேவைகள் நிறைவு பெறாதபோது ஒரு மனிதன் சலனமடைகிறான். இதற்கு அவர் பரிந்துரைக்கும் கசாயம், தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் (Choice).
மனிதனுக்கு
எல்லாச் சூழலிலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவன் எத்தகைய வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே அவனது செயல்பாடு அமைகிறது. கோபத்தில் கத்தித் தீர்ப்போரைப் பார்த்திருப்போம். அதேநேரத்தில் நிதானமாய் பதிலிருப்புத் தருவோரையும் பார்த்திருப்போம். இருவருமே கோபத்தில் இருந்தாலும், அந்தச் சூழலுக்கு அவர்கள் தரும் பதில் வெவ்வேறு. அவர்களைக் கோபமூட்டிய சூழலை அவர்களால் மாற்ற முடியாவிட்டாலும், அந்தச் சூழலுக்கான அவர்களின் பதிலிருப்பு அவர்களின் விருப்பமே!
அக்கறையோடு பயணிப்போம்
வேகமாய்
இயங்கிக் கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்வில், நம்மை அழுத்தத்திற்கு உட்படுத்தும் சூழலை மாற்ற முடியவில்லை என்றாலும், அந்தச் சூழலுக்கான நமது பதிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமது கைகளில் மட்டுமே!
மனநலனின்
முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 10-ஆம் தேதியை அகில உலக மனநல நாளாக அறிவித்திருக்கின்றது. இந்த நாளைச் சிறப்பிக்கின்ற இந்தத் தருணத்தில், நமது மனநலனில் அக்கறை கொள்வதோடு, பிறர் மனநலனிலும் அக்கறை கொள்ள உறுதி ஏற்போம்! உள்மன அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.