news-details
ஆன்மிகம்
கிறிஸ்துவின் அருளானது மரியாவைப் பாவத்திலிருந்து பாதுகாத்தது! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 22)

மரியாவின்  அமல உற்பவக் கோட்பாட்டு அறிவிப்பின் வழியாகத் திரு அவையானது, கிறிஸ்து பாவத்திலிருந்து நம்மை விடுவிப்பதோடு அதன் சக்தியிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.

1. மரியா தாயின் கருவில் உருவானதிலிருந்தே முற்றிலும் புனிதமானவர் என்ற கோட்பாடானது அது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, புனித பவுல் அடியாரின் முதல் பாவம் மற்றும் பாவத்தின் பொதுத் தன்மையைப் பற்றிய கருத்துகளினாலும், அதன் மீதான புனித அகுஸ்தினாரின் குறிப்பிடத்தக்க விளக்கங்களினாலும் மேற்கத்திய திரு அவையில் ஒருவித எதிர்ப்பைச் சந்தித்தது.

முற்றிலும் புனிதத்துவமிக்க மகனின் தாய் என்கின்ற நிலையை அடைவதற்காக மரியாவிற்கு  முற்றிலும் தூய்மையான மற்றும் சிறப்புமிக்க புனிதத்துவமானது தேவையான ஒன்றாக இருந்தது என புனித அகுஸ்தினார் உணர்ந்தார். இதன் காரணமாகத்தான், பெல்லாஜியுஸ் உடனான கருத்து வேறுபாட்டில் (Pelagius controversy) மரியாவின் புனிதத்துவமானது, சிறப்புமிக்க அருளின் கொடையாக இருக்கிறதென்று வலியுறுத்தி இவ்வாறு கூறுகின்றார்: “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமைக்காக யாரை நான் எந்த வகையிலும் பாவத்தோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடுவதற்கு விரும்பவில்லையோ, அந்தக் கன்னி மரியாவுக்கு  நாங்கள் விலக்களிக்கின்றோம். உண்மையில் பாவமற்றவரைக் கருத்தரித்துப் பெற்றெடுத்தவர், பாவத்தின்மீது முழுமையான வெற்றிகொள்ளும் நிமித்தம் சிறப்பானதோர் அருள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது என்பது நமக்குத் தெரியாதா?” (De natura et gratia, n. 42).

ஆண்டவரின் தாய்என்பதனால் அவருக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பினால் அவரில் எந்தவித தனிப்பட்டதொரு பாவமில்லாத் தன்மையையும் அவருக்குரிய புனிதத்துவத்தையும் புனித அகுஸ்தினார் வலியுறுத்துகின்றார். இருப்பினும், கருத்தரித்தலின் போதான முற்றிலும் பாவமில்லாத் தன்மை பற்றிய கோட்பாட்டுக்கும், ஆதாமின் வழி வந்தோர் அனைவருக்குமான மீட்பு பற்றிய கோட்பாட்டுக்கும் இடையே எவ்வாறு பொருத்தப்பாட்டை உருவாக்குவது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது, மரியா எவ்வாறு அவர் தாயின் கருவில் உருவானபொழுதே கிறிஸ்துவின் மதிப்பினால், மீட்பின் அருளால் பயனடைந்தார் என்பதை விளக்குவதன் வழியாக, பிற்காலத்திய திரு அவையின் மிகச் சரியான புரிதலின் வழியாக முடிவுக்கு வந்தது.

டன்ஸ் ஸ்காட்டஸ்(Duns Scotus) அமல உற் பவம் பற்றிய மறுப்புகளை வெற்றி கொண்டார்

2. 9-வது நூற்றாண்டில் முதலில் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்திலும், பின் இங்கிலாந்திலும் மேற்கத்திய நாடுகளில் அமல உற்பவத் திருவிழாவானது அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி. 1128-ஆம் ஆண்டில் எட்மெர் என்கின்ற கான்டர்பெரி நகரத்துத் துறவிஅமல உற்பவம்பற்றியதொரு கட்டுரையை எழுதும்பொழுது, அமல உற்பவத் திரு விழாவுக்கான திருவழிபாடானது குறிப்பாக, “தூய்மை நிறை எளிமையான மற்றும் மிகவும் தாழ்ச்சி மிகுந்த கடவுளுக்கான பக்தியானது யாரில் காணப்பட்டதோ...” (Tract. De conc. B.M.V., 12) என்கின்ற பகுதியானது ஓரங்கட்டப்பட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகின்றார். இந்த விழாவை மீட்டெடுக்க விரும்பிய அந்தப் பக்திமிகு துறவி மனுக்குலம் அனைத்தின் மீதான முதல் பாவத்தின் கடத்தல் கொள்கையை அடிப்படையாக வைத்து அமல உற்பவத்தின் சிறப்புச் சலுகை பற்றிய புனித அகுஸ்தினாரின் மறுப்புகளைப் புறந்தள்ளினார்இதை விளக்குவதற்காக அவர் ஒரு கஷ் கொட்டையின் உருவத்தை (image of a chestnutபொருத்தமாகப் பயன்படுத்தினார். அதாவது, “அது கருத்தரிக்கப்பட்டு, ஊட்டமளித்து, அதன் துளையின் அடியில் (beneath its bur) உருவாகிறது, இன்னும் அது குத்தப்படாமல் பாதுகாக்கப்படுகிறது(Tract. 10).

முதல் பாவத்தைக் கடத்த வேண்டிய படைப்பு செயலில் கூட, மரியா கடவுளின் வெளிப்படையான விருப்பத்தால் ஒவ்வொரு கறையிலிருந்தும் பாதுகாக்கப்பட்டார், “அவர் வெளிப்படையாக இதைச் செய்ய முடிந்தது மற்றும் அவ்வாறு செய்ய விரும்பினார். அவர் விரும்பியதால் அதைச் செய்தார் (ibid) என்று எட்மெர் வாதிடுகிறார்.

எட்மெர் இவ்வாறு வாதிட்டாலும், 12-வது நூற்றாண்டு இறையியல் வல்லுநர்கள் புனித அகுஸ்தினாரின் கருத்துகளைத் தமதாக்கிக்கொண்டனர். பாவத்தின் நிபந்தனைகள் எல்லா மனிதருக்கும் பொதுவானதொன்றாக இல்லையென்றால், கிறிஸ்துவால் கிடைக்கும் மீட்பானது அனைவருக்குமானதொன்றாக இருக்காது என்று வாதிட்டனர். மேலும், மரியா முதல் பாவம் அறியாதவராக இருந்திருந்ததால், அவர் மீட்கப்பட்டிருக்க மாட்டார் என்றும் கூறினார்கள். உண்மையில், மீட்பு என்பது பாவநிலையில் இருப்பவர்களை அதிலிருந்து விடுவிப்பதில்தான் இருக்கின்றது என்பதே அவர்களின் வாதமாகும்.

3. 12-வது நூற்றாண்டு இறையியல் வல்லுநர்களைப் பின்பற்றி டன்ஸ்காட்டஸ் அமல உற்பவக் கோட்பாடு பற்றிய இந்த மறுப்புகளை வெற்றி கொள்வதற்கான வழியைக் கண்டுபிடித்தார். உண்மையான, நடுநிலையாளரான கிறிஸ்து, மரியாவை முதல் பாவத்திலிருந்து பாதுகாத்ததன் வழியாக  மரியாவில்  அவரின் நடுநிலையாளருக்கான உயர் நிலைச் செயலைச் செய்தார்.

இவ்வாறு, கிறித்தவ இறையியலில் பாதுகாத்தல் வழியாக மீட்பு என்கின்றதொரு கருத்துருவாக்கத்தைப் புகுத்தினார். இதன்படி மரியா இன்னும் கூட மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் மீட்கப்பட்டார். பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டதனால் அல்ல; மாறாக, பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதனால் அவர் மீட்கப்பட்டார்.

இதன் காரணமாகவே டன்ஸ்காட்டஸ் பிற்காலத்தில்அமல உற்பவக் கோட்பாட்டின் வல்லுநர்என்று அழைக்கப்பட்டார். மேலும், இவரின் சிந்தனையானது இறையியல் வல்லுநர்களால் நன்கு வரவேற்கப்பட்டது. குறிப்பாக, 14-வது நூற்றாண்டின் தொடக்கம் முதலே பிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்தவர்கள் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 1477-இல் திருத்தந்தை நான்காவது சிக்ஸ்துஸால் அமல உற்பவ விழாவிற்கான திருப்பலியானது அங்கீகரிக்கப்பட்டபின் இக்கோட்பாடானது பல்வேறுபட்ட இறையியல் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமல உற்பவம் பற்றிய திருவழிபாடு மற்றும் கோட்பாட்டின் இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது திரு அவையின் ஆசிரியம் மரியாவின் சிறப்பு அம்சங்களை வரையறுப்பதற்கான வழியைத் தயார் செய்தது. ஆனால், கோட்பாட்டுப் பிரகடனமானது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் செய்யப்பட்டது. இது திரு அவையின் அடிப்படைச் சிந்தனையின் வழியாக நிகழ்ந்தது. கிறிஸ்துவின் தாயாகிய மரியா, அவரின் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே முற்றிலும் தூயவராக இருக்க வேண்டியிருந்தது.

4. மரியாவுக்கு வழங்கப்பட்ட இந்தச் சிறப்புச் சலுகை, கிறிஸ்துவின் மீட்புச் செயலானது நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், அதிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது என்பதை உறுதி செய்வதையும் யாரும் கவனிக்க மறந்துவிடக்கூடாது. மரியாவில் முற்றிலுமாக இருந்த பாதுகாத்தல் பற்றிய இந்தப் பகுதியானது மனிதனைப் பாவத்திலிருந்து விடுவிப்பதிலும், அவனுடைய வாழ்வில் அதன் தாக்கத்தினை வெற்றி கொள்வதற்கான அருளையும் சக்தியையும் கொடுக்கும் கிறிஸ்துவின் மீட்பிற்கான தலையீட்டிலும் இருக்கின்றது.

அமல உற்பவக் கோட்பாடானது அருளின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றது. இவ்வகையில், மரியாவின் அமல உற்பவக் கோட்பாடானது மீட்பராம் கிறிஸ்துவின் அருளின் தாக்கத்தை மங்கச் செய்யாமல், வியக்கத்தக்க வகையில் வெளிப்படுத்த உதவுகின்றது.

ஆண்டவருடைய அருளின் உதவியினால் கிறித்தவர்களின் வாழ்வில் எதை அடைவதற்கு அழைக்கப்பட்டார்களோ, அந்த முழுமையான புனிதத்துவத்தின் அடையாளமாகவும் (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 65) கிறிஸ்துவினால் முதலில் மீட்கப்பட்டவராகவும், ஒரு நொடி கூட தீமை மற்றும் பாவத்தின் சக்திக்கு உட்படாத சிறப்புச் சலுகையைப் பெற்றவராகவும் மரியாவைப் பார்க்கின்றனர்.

மூலம்: John Paul II, Christ’s grace preserved Mary from sin, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 12 June 1996, p. 11.