news-details
ஆன்மிகம்
இறந்தோருக்கான திருப்பலியும் திரு அவையின் படிப்பினைகளும்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

கிரகோரியன் திருப்பலி என்றால் என்ன?

இறந்தோருக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி, இறந்தோரின் ஆண்டு நினைவு நாள் திருப்பலி ஆகியவற்றோடு முடிவுறுவது இல்லை; மாறாக, இறந்தவர்களுக்காக நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுப்பது மற்றும் கிரகோரியன் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவையும் இதில் அடங்கும். இதில் நவநாள் என்பது தொடர்ச்சியாக ஒன்பது நாள்கள் திருப்பலியை இறந்தவரின் ஆன்மாவிற்காக ஒப்புக்கொடுப்பதாகும்.

கிரகோரியன் திருப்பலி என்பது ஒருவர் இறந்தவுடன் தொடர்ந்து 30 திருப்பலிகளை ஒப்புக்கொடுத்து, கழுவாய்நிலையில் இருக்கிற ஓர் ஆன்மாவை விரைந்து விண்ணகம் சேர்த்திட இறைவனிடம் இறைஞ்சுகிற ஒரு பாரம்பரிய முறையாகும்.

கிரகோரியன் திருப்பலி என்ற இந்தப் பெயரானது கி.பி. 590 முதல் 604 வரை திருத்தந்தையாக இருந்த புனித பெரிய கிரகோரியாரின் நினைவாகவே கொடுக்கப்பட்டது. ஏனெனில், ஆன்மாக்களைக் கழுவாய்நிலையில்  இருந்து மீட்பதற்காக நிறைவேற்றப்படும் இந்தக் கிரகோரியன் திருப்பலி என்ற இந்தப் பக்தி முயற்சி பரவ இவர் பெரும் தொண்டாற்றினார். இவர் உரோமை நகரில் உள்ள புனித ஆண்ட்ரூ இல்லத்தில் இறந்த துறவியான யுஸ்துஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 30 நாள்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். முப்பதாம் நாள் திருப்பலி முடிவில் இறந்த யுஸ்துஸ் தனது சக துறவிக்குத் தோன்றி, தான் கழுவாய்நிலையின் அணையா நெருப்பிலிருந்து மீட்கப்பட்டதை அறிவித்தார் என்பதை புனித பெரிய கிரகோரியார் தனது ‘உரையாடல்கள் (Dialogues)  எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

இறந்தோருக்கான திருப்பலி மற்றும் காணிக்கைகள் குறித்த திரு அவைச் சட்டப் பார்வை

திரு அவைச் சட்ட எண். 945 கிறித்தவ நம்பிக்கையாளர்களின் கருத்துகளுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க அதிலும் குறிப்பாக, காணிக்கை எதுவும் பெறாமல் வறியவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்க மிகவும் அறிவுறுத்துகிறது. இந்த ஆண்டு திருப்பலி குறித்து அருள்பணியாளர்களுக்கான வத்திக்கான் நகரத்திலிருக்கும் திருப்பீடப் பேராயம் வெளியிட்ட ‘secundum Aroatum என்ற ஆவணம்  ஏழைகளுக்காக அவர்களுடைய கருத்துகளுக்காக அவர்களிடம் எந்தவிதத் திருப்பலிக்கான கட்டணமும் பெறாமல் அருள்பணியாளர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையையும் அடிக்கோடிட்டுக்காட்டியுள்ளது. இது ஏழைகள், அவர்கள் குடும்பத்திலிருந்து இறந்துபோன அவர்களுடைய உறவினர்களுக்காக அருள்பணியாளர்கள் திருப்பலி ஒப்புக்கொடுப்பதன் தேவையை உணர்த்துகிறது.

திரு அவைச் சட்ட எண். 948, ‘தனிப்பட்ட காணிக்கைகள் சிறியதாக இருந்தாலும், எத்தனை கருத்துகளுக்காக அளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அத்தனை கருத்துகளுக்காகத் தனிப்பட்ட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்க வேண்டும் எனவும் விளக்குகின்றது. இது ஒரு மேல்வரிச்சட்டம் என்றாலும், திருப்பலியின் விலைமதிப்பற்ற தன்மையினாலும் குறைந்து வரும் அருள்பணியாளர்களின் எண்ணிக்கைக்கு மத்தியில் பெருகிவரும் மக்களது ஆன்மிகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு திரு ஆட்சிப்பீடமானது 1991-ஆம் ஆண்டு ஓர் ஆணையை வெளியிட்டது. Mos iugiter (ííS 83 (1991) 436-446) என்று அழைக்கப்பட்ட திரு ஆட்சிப்பீடத்தின் அந்த ஆணை திரு அவைச் சட்ட எண் 948 வரையறுத்த கடுமையான சட்டத்தைத் திருத்தியமைத்து பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் திருப்பலியில் திரள்தொகுப்பு கருத்துகளுக்கு அனுமதி வழங்கியது:

1. கூட்டுத்திருப்பலி கருத்துகள் (pluri-intentioral mass of collective mass Intentiobs) கொண்டாடப்படுவதற்கு முன்பு நன்கொடையாளர்களுக்கு அவர்களின் திருப்பலிக்கான கருத்துகள் ஒரே திருப்பலியில் இணைக்கப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டு அவர்களது ஒப்புதலைப் பெறுதல் வேண்டும்.

2. இத்தகைய திருப்பலிகள் நடைபெறும் நேரம், இடம் கண்டிப்பாக இத்தகைய திருப்பலியை ஒப்புக்கொடுக்க விரும்புகிறவர்களுக்கு அறிவிக்கப்படல் வேண்டும். அதேபோல இத்தகைய கூட்டுக் கருத்து திருப்பலிகளின் எண்ணிக்கை வாரத்திற்கு இரண்டுக்கு மிகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.

3. திருப்பலியை நிறைவேற்றுபவர் ஒரு திருப்பலிக்கு உரிய காணிக்கையைத் தனக்கென எடுத்துக் கொண்டு மீதமிருக்கிற கருத்துகளை ஆயர் வரையறுத்துள்ள நோக்கத்திற்காக அனுப்புதல் வேண்டும் என்றெல்லாம் வரையறுத்துள்ளது.

இறந்த ஆன்மாக்களுக்கான புகழ்பெற்ற செபம்

புனித ஜெர்த்ரூத் அவர்களின் செபம்தான் இறந்தவர்களுக்காகக் கூறப்படும் செபங்களில் மிகவும் பிரபலமான செபம். புனித ஜெர்த்ரூத் அம்மா 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெனடிக்டைன் சபையைச் சேர்ந்த துறவி மற்றும் இறை உணர்வாளர். இந்த இறைவேண்டலை பக்தியோடு இறைவேண்டல் செய்கிற ஒவ்வொரு முறையும் 1000 ஆன்மாக்கள் கழுவாய்நிலையிலிருந்து விடுவிக்கப்படும் என்று இயேசு கிறிஸ்துவே இவருக்கு வாக்குறுதி தந்ததாகக் கூறப்படுகின்றது.

அந்த இறைவேண்டல் பின்வருமாறு: ‘என்றென்றும் வாழும் கடவுளே! எங்கள் ஆண்டவரும் உமது அன்பு மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிப்பில்லாத் திரு இரத்தத்தை, இந்த நேரத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் எல்லாத் திருப்பலிகளோடும் சேர்த்து, கழுவாய்நிலையில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்காகவும், உலகெங்கும் உள்ள பாவிகளுக்காகவும், திரு அவையில் உள்ள பாவிகளுக்காகவும், எந்தன் இல்லத்திலும் குடும்பத்திலுள்ள பாவிகளுக்காகவும் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.’

குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து ஒரு பத்து மணி செபமாலையாக புனித ஜெர்த்ரூத் அம்மாளின் இந்த அற்புதமான செபத்தை இறைவேண்டல் செய்வது ஓர் அலாதியான அனுபவத்தையும் ஆறுதலையும் நமக்குப் பெற்றுத்தரும்.

இறந்து கழுவாய்நிலையில் இருக்கிற நம் நேசத்துக்குரியவர்களால் எந்த ஒரு பிறரன்புச் செயலும் செய்ய முடியாது. எனவே,  அவர்களின் மீட்புக்காக உயிரோடு இருக்கிற நாம் பிறரன்புச் செயல்களைச் செய்யலாம். நமது செயல்கள் அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். இவர்களுக்காக இறைவேண்டல் செய்வது மிகச் சரியான வழி, கிறிஸ்துவின் தியாகத்தை உள்ளடக்கிய திருப்பலியே ஆகும்.

ஓர் அருள்பணியாளர் திருப்பலியை ஒரு குறிப்பிட்ட கருத்துக்காக ஒப்புக்கொடுக்கிறபோது, அது நாம் அந்த நபர்மீது கொண்டிருக்கிற அன்பில் வேரூன்றி, கடவுளிடம் அளிக்கப்பட்ட கிறஸ்துவின் நிறைவான இறைவேண்டலாக மாற்றம் பெறுகின்றது. இறைவேண்டல், ஒறுத்தல் முயற்சிகள், தானம் செய்தல் போன்ற பல காரியங்களில் நாம் ஈடுபடலாம் என்றாலும், கிறிஸ்துவின் தியாகப்பலிக்கு ஈடாக பலன் தரக்கூடிய ஒன்று இருக்க முடியாது. நம் நேசத்துக்குரியவர்கள் இறந்துபோகிறபோது அவர்களுக்காக ஒப்புக்கொடுக்கிற திருப்பலியையும் இறைவேண்டலையும்விட ஆறுதலையும் அமைதியையும் எந்த ஓர் அனுதாப அட்டையோ அல்லது சூட்டப்படும் மலர்களோ கொடுத்துவிட முடியாது. எனவே, திருப்பலி மற்றும் இறைவேண்டல்களை ஒப்புக்கொடுப்பதன் வழியாக அவர்கள் நிறை வாழ்வைப் பெற நாம் அவர்களுக்கு உதவி செய்வோம்.