news-details
ஞாயிறு மறையுரை
அக்டோபர் 12, 2025, ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) 2அர 5:14-17; 2திமொ 2:8-13; லூக் 17:11-19 - நன்றி நிறைந்த உள்ளமே கடவுள் வாழும் இல்லம்!

உலகில் இன்றுவரை மிகப்பெரிய அறிவியல் அறிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். ஏறத்தாழ ஈராயிரம் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்து, மனித வாழ்விற்கு வளம் சேர்த்தவர். 1914-ஆம் ஆண்டு அவரது பரிசோதனைக் கூடம் திடீரென தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. அப்போது அவருக்கு வயது 67. அவர் பல்லாண்டுகளாய் எடுத்து வைத்திருந்த குறிப்புகள் அனைத்தும் சாம்பலாயின. மறுநாள் காலையில் சாம்பல் குவியலாய் மாறியிருந்த பரிசோதனைக் கூடத்தைப் பார்த்துவிட்டு எடிசன் கூறினார்: “துன்பத்தில் ஒரு பெரும் பயன் இருக்கிறது. நம் தவறுகள் எல்லாம் எரிந்துவிடுகின்றன. நமது பணிகளை நாம் மீண்டும் புதிதாகத் தொடங்கலாம். அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.”

நன்றியுணர்வு நல்லொழுக்கங்களில் சிறந்தது. நமக்கு இறைவன் செய்த நன்மைகளுக்காகக் கடவுளுக்கு நன்றி பாராட்டுவது அடிப்படையான மானுடப் பண்பு. ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் ஞாயிறு, கடவுள் நம் மீது கொண்டிருக்கும் ஆழமான அன்புக்கும், நாம் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் நன்றிகூற அழைப்புவிடுக்கின்றது.

சிரியா நாட்டுப் படைத்தலைவரும், வலிமைமிக்க வீரருமான நாமான் தொழுநோயிலிருந்து நலம்பெற, இஸ்ரயேலில் கடவுளின் அடியார் எலிசாவைச் சந்தித்து அவர் வாக்கிற்கிணங்க செயல்பட்டதையும், அவர் தோல் நோயிலிருந்து முழுமையாக நலம்பெற்றதையும், “இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை (2அர 5:15) என உறுதியாக அறிக்கையிட்டதையும் நன்றி நிறைந்த உள்ளத்துடன் அவருக்கு அன்பளிப்புக் கொடுக்க முன்வந்ததையும் இன்றைய முதல் வாசகம் எடுத்துக்காட்டுகிறது.

பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப் பெற்ற நிகழ்வில் செய் நன்றி மறவாமல், நலமளித்த இயேசுவுக்கு நன்றி கூறவந்த சமாரியரையும்கடவுளைப் போற்றிப் புகழ அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” (17:18) என இயேசு அவரைப் பாராட்டியதையும் இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. நாம் நம்பத்தகாதவரெனினும் கடவுள் நம்பத்தகுந்தவராக இருக்கிறார் (2திமோ 2:13) என்பதை பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கிறார். “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே (1தெச 5:18) என இன்றைய வாழ்த்தொலியில் பாடுகிறோம்.

மேற்குறிப்பிட்ட இறைவார்த்தைகளின் பின்னணியில் இன்றைய வழிபாடு நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன? முதலில் மனிதர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக, ஏழைகளை, குழந்தைகளை, மாற்றுத்திறனாளிகளை (லேவி 19:14). பொதுவாக, மனிதர் ஆள் பார்த்துச் செயல்படுவது நிதர்சமான உண்மை (யாக் 2:2-3). கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுபவர் அல்லர் (உரோ 2:11; கலா 2:6). கடவுளை மட்டுமே நம்பியவர்கள்யாவேயின் ஏழைகள்என்று அழைக்கப்பட்டனர். அவர்களைக் கடவுள் என்றும் காப்பாற்றுவார் (திபா 35:10; எசா 61:1; மத் 5:3; லூக் 6:20). இன்றைய நற்செய்தி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

தொழுநோய் என்பது ஒரு தோல்நோய். இயேசுவின் காலத்திலும் பழைய ஏற்பாட்டிலும் தோலில் உண்டாகும் பல்வேறு குறைபாடுகளைக் குறிக்க தொழுநோய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த நோயைக் குணமாக்க முடியாது என்பதாலும், இது விரைவாக மற்றவர்களுக்குப் பரவும் என்ற காரணத்தாலும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டனர். மேலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் தண்டனைக்கு உள்ளானவர்கள் (எண்  12:9-10; 2 அர 15:3-5) என்றும் மக்கள் நம்பினர். தொழுநோய் என்ற காரணத்தால் யூதர்களும் சமாரியர்களும் புறக்கணித்த பத்துத் தொழுநோயாளர்களை இயேசு சந்திக்கிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் இயேசு அவர்களை நலப்படுத்துகிறார். இரைச்சல்களுக்கு மத்தியில் நலமளிப்பது ஒன்றும் இயேசுவுக்குப் புதிதல்ல (லூக் 8:42; 18:38). இயேசுவைப்போல நோயுற்றோரை, ஏழைகளை, மாற்றுத்திறனாளிகளை மதிப்புடனும் மாண்புடனும் நடத்தவேண்டும் என்பது இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தரும் முதல் பாடம்.

இரண்டாவது பாடம், இயேசு நலம்பெற்றவரை நோக்கிக் கேட்ட கேள்வியில் தொடங்குகிறது. பத்துப் பேரில் நலம் பெற்ற ஒருவர் தம்மை நோக்கித் திரும்பி வருவதைக் காணும் இயேசு, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?” (லூக் 17:17) எனக் கேட்கின்றார். இந்தக் கேள்வி இயேசுவின் ஒட்டுமொத்த மனநிலையையும் அவரது ஏக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது. தங்களிடையே எவ்விதப் பாகுபாடுமின்றி நோயுற்றிருந்தபோது, பத்துப் பேரும் ஒருசேர வந்ததைக் கண்ட இயேசு, தற்போது ஒருவரை மட்டும் காண்கிறார். இந்தச் சமாரியர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற ஏக்கம்; அவர்களிடம் இயேசு கண்ட அந்த ஒற்றுமை எங்கே போனது என்ற ஏக்கம் போன்றவற்றின் வெளிப்பாடே இயேசுவின் அந்தக் கேள்வி.

சமூகத்தில் துன்பம், பேரழிவு என்று வரும் போது நாம் பல வழிகளில் இணைந்துகொள்கிறோம். நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின்போதும், கலவரங்கள், போர்கள் உருவாக்கும் அழிவுகளின்போதும் ஒருங்கிணையும் நாம், இத்துன்பங்கள் விலகியதும் மீண்டும் நம் சுயநலச் சுவர்களை எழுப்பிவிடுகிறோம். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு பெரும் கோபுரங்கள் விமானங்கள் கொண்டு தகர்க்கப்பட்டபோது, செரில் ஷாயர் என்ற பேராசிரியர் எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் இவை:

கரும்புகையும் புழுதியும் சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது, நாம் ஒரே நிறத்தவரானோம். எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது, நாம் ஒரே இனத்தவரானோம். உதவி வேண்டி முழந்தாள்படியிட்டபோது, நாம் ஒரே மதத்தவரானோம். இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது, நாம் ஒரே உடலானோம். இந்தப் பெரும் அழிவை எண்ணி கூடிவந்து அழுதபோது, நாம் ஒரே குடும்பமானோம்.”

ஒரு கொடூரமான நிகழ்வு, சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. ஒரே இனமாக்கியது; ஒரே மதமாக்கியது; ஒரே குடும்பமாக்கியது. பேரழிவின்போது சாதி, சமயம், மொழி, கலாச்சாரம் என அனைத்தையும் கடந்து வெளிப்படும் மனித நேயம், அனைத்தும் சீரானபிறகு பார்க்கமுடியாமல் போய்விடுகிறது.

மற்ற ஒன்பது பேர் எங்கே?” என்ற இயேசுவின் ஏக்கம் நிறைந்த கேள்விக்கு நாம் இன்றும் பதில் கூறமுடியாமல் தடுமாறுகிறோம். நிறம், பணம், பதவி, சாதி, இனம், மொழி என நமக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள்தான் எத்தனையோ? நாம் இயேசுவுக்குக் கூறவேண்டிய பதிலே இன்று நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இரண்டாவது பாடம்.

நாம் கற்கவேண்டிய மூன்றாவது பாடம், வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றியுணர்வு. நலம் பெற்ற பத்துப் பேரில் ஒருவர் மட்டும் திரும்பி வருவதைப் பார்க்கும்போது, நன்றி யுள்ளவர்களைவிட நன்றி மறந்தவர்கள்தான் அதிகம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நன்றி சொல்லாத தன்மை அல்லது நன்றி மறந்த தன்மையைத் திருவிவிலியம், “நன்றி கொன்றோரின் நம்பிக்கை குளிர்காலத்து உறைபனிபோல் உருகிவிடும்; பயனற்ற தண்ணீர்போல் ஓடிவிடும்  (சாஞா 16:29) என்கிறது. “!… குளிர்காலக் கடும் காற்றே! நீ வீசு! மனிதரின் நன்றி மறந்த செயலைவிட உன் வாட்டும் குளிர் ஒன்றும் கொடியது அல்லஎன்று கவிஞர் ஷேக்ஸ்பியர் பாடுகிறார். “நன்றி என்னும் வார்த்தையே நமது வாழ்வு முழுமைக்கும் போதுமான செபம்என்கிறார் மெய்ஸ்டர் எக்கார்ட்.

நாம் நன்றியுணர்வை இறைவனுக்கு வெளிப்படுத்துவதில் மூன்று படிநிலைகளை உணரலாம். ) தனிப்பட்ட முறையில் இறைவன் நமக்குச் செய்யும் நன்மைகளை எண்ணி அவருக்கு நன்றிகூறல் (திபா 116:12). ) தனக்கென்று இல்லாமல் பிறருக்கும் சமுதாயத்திற்கும் கிடைக்கும் நன்மைகளுக்காக இறைவனுக்கு நன்றிகூறல் (பிலி 1:3; பில 1:4). ) வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நம்மை வருத்துகிற கவலையிலும்கூட இறைவனுக்கு நன்றிகூறல் (யோபு 1:21). திருத்தந்தை பிரான்சிஸ்தொடர்ந்து நன்றியுரைத்தலே நமது நம்பிக்கைப் பயணத்தின் உச்சக்கட்டம்என்கிறார்.

நிறைவாக, நன்றிகூறுதலின் முழுமைநன்றி செய்தல்.’ இது ஓர் அரிதான பதமே. எளிதாக ஒருவர் செய்த நன்மைக்குநன்றிஅல்லதுதேங்க்யூஎன்று கூறி கடந்துசென்றுவிடலாம். ஆனால், நமக்கு நன்மை செய்தோருக்கு ஏதாவது நல்லது செய்வதே நன்றியுணர்வின் முழுமையான வெளிப்பாடு. நன்றியுணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலமே ஒருவர் உள்ள நலனைப் பெறமுடியும். எந்நன்றி செய்வேன் யான்? நன்றி நிறைந்த உள்ளமே கடவுள் வாழும் இல்லம்!