news-details
ஆன்மிகம்
சடங்காச்சார திருமுழுக்கு (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 25)

மார்த்தா: “தந்தையே, திருமுழுக்கின்போது குழந்தைகளுக்குப் பெயர் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன?”

அருள்பணி: “பெயர் என்பது பல உண்மைகளைத் தன்னிலே தாங்கியதாக இருக்கிறது. முதலாவதாக, பெயர் என்பது ஒரு நபரைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, பெயர் என்பது ஒரு மனிதரின் சுய அடையாளத்தோடு (self-identity) தொடர்புடையது. மூன்றாவதாக, பெயரைக் கூறிக் கூப்பிடுவது உறவு நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னணியில் பார்க்கும்போது, திருமுழுக்கின்போது ஒரு குழந்தைக்குப் பெயர் வைப்பது கீழ்க்காணும் உண்மைகளைச் சுட்டிநிற்கிறது: அ) திருமுழுக்கு அருளடையாளமானது ஒரு குழந்தை கடவுளின் பிள்ளை என்ற உண்மையைச் சுட்டி நிற்கிறது; ஆ) இதன் காரணமாக ஒரு தனித்தன்மைமிக்க புதிய அடையாளத்தைக் குழந்தை பெற்றுக்கொள்கிறது; இ) இறுதியாக, திருமுழுக்கின் வழியாக ஒரு குழந்தை கடவுளுடனும் கிறித்தவச் சமூகத்துடனும் உறவுக்குள் நுழைகிறது.”

அகஸ்டின்: “தந்தையே! திருமுழுக்கு நிகழ்வின்போது ஞானப்பெற்றோர்கள் நிறுத்தப்படுகிறார்கள். இதன் முக்கியத்துவம் என்ன?”

அருள்பணி: “கடந்த கட்டுரைகளில் நாம் பேசி வந்த அற்புதமான கொடைகள் திருமுழுக்குப் பெறும் குழந்தைகள்மீது பொழியப்பட்டாலும், அக்குழந்தைகளுக்கு அவை பற்றிய விழிப்புணர்வு எதுவும் இல்லை. தாங்கள் பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில் அக்குழந்தைகள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து, வாழ்வைச் சராசரித்தனமாக ஆக்கி தம் வாழ்வையே தொலைத்துவிடுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே, ஞானம் நிறைந்த, கடவுளுடனான உறவில் ஆழம் கண்ட நபர்கள் அக்குழந்தைகளுக்கு ஞானப்பெற்றோராகக் கொடுக்கப்படும்போது, குழந்தைகள் வளர வளர பெற்றுக்கொண்ட கொடைகள் மட்டில் ஞானப்பெற்றோர் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர். குழந்தைகள் கடவுளுடனான உறவிலும் பிறரோடுடனான உறவிலும் நாள்தோறும் வளர்ந்து, தங்களது வாழ்வின் முழுமையைக் கண்டு கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது ஞானப்பெற்றோரின் கடமை.”

அன்புச் செல்வன்: “தந்தையே, நீங்கள் கூறுவதன் பின்னணியில் ஏன் திருமுழுக்கு நிகழ்வின்போது, ஞானப்பெற்றோரின் கையில் எரிகின்ற மெழுகுதிரி கொடுக்கப்படுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எரிகின்ற மெழுகுதிரி கடவுள்மீதான நம்பிக்கைக்கு அடையாளமாக இருக்கிறது. திரு அவையின் பிரதிநிதியாக இருக்கின்ற குருவானவர் கடவுள்மீதான நம்பிக்கையை ஞானப்பெற்றோரிடம் கொடுத்து, அதைக் குழந்தைக்குக் கொடுக்க அறிவுறுத்துகிறார்.”

அகஸ்டின்: “தந்தையே! சிலர் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கப்படுவது குறித்துக் கேள்விகள் எழுப்புவதை நான் கேட்டிருக்கின்றேன். திருமுழுக்குக் குறித்த தெளிவும், அது வழங்கும் அருள்கொடைகள் குறித்த புரிதலும் குழந்தைகளுக்கு இருப்பதில்லை. எனவே, வளர்ந்த பிறகு அவை குறித்த தெளிவுகளை அவர்கள் பெற்றுக்கொள்ளும்போது திருமுழுக்கு பெறலாமே என்கின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அருள்பணி: “நான்கு அல்லது ஐந்து வயதில் எந்தக் குழந்தைக்கும் கல்வியின் தேவை பற்றி விழிப்புணர்வு இருப்பதில்லை. எனவே, கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்ட பின்பு அவர்களாகவே பள்ளியில் சேர்ந்து கொள்ளட்டும் என்று நான் கூறினால், அது எத்தகைய முட்டாள்தனமான வாதம் என்பது நமக்குத் தெரியும். இத்தகைய வாதமே மேற்கண்ட வாதம். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைகின்றவரை, அவர்களுக்குத் தேவையான நல்லவற்றைத் தேர்ந்து கொடுக்கின்ற உரிமையும் கடமையும் பெற்றோர்களுக்கு உண்டு.” 

கிறிஸ்டினா: “திருமுழுக்கு அருளடையாளத்தில் இவ்வளவு அற்புதமான செய்திகள் இருக்கின்றனவா? கேட்கவே ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால், இன்று பல வேளைகளில் திருமுழுக்கு அருளடையாளம் ஒரு வெற்றுச் சடங்காகவும், ஆடம்பரக் கொண்டாட்டமாகவும் மாறிவிட்டதே!”

அன்புச் செல்வன்: “நான் வாசித்த ஒரு நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது. அயர்லாந்து நாட்டில் ஆயராக இருந்தவர் புனித பேட்ரிக் (பத்ரீசியார்). அவர் ஒருமுறை அரசராக இருந்து கிறித்தவ மதத்தைத் தழுவிய ஆங்குஸ் (íngus) என்ற அரசருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். திருமுழுக்கு நிகழ்வின்போது ஆயர் தவறுதலாகத் தனது செங்கோலை மன்னரது பாதத்தின்மீது வைத்துவிட்டார். அந்தச் செங்கோல் மிகவும் எடையுள்ளதாக இருந்தது மட்டுமல்லாமல், அதன் அடிப்பகுதி மிகவும் கூர்மையான நுனியைக் கொண்டாதாகவும் இருந்தது. எனவே, செங்கோல் மன்னரது பாதத்தில் வைக்கப்பட்டபோது, அது அவரது பாதத்தில் காயத்தை ஏற்படுத்தி, அக்காயத்திலிருந்து இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. மிகவும் வலியோடு மன்னர் ஆங்குஸ் திருமுழுக்கு நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். திருமுழுக்கு முடிந்த பின்னர்தான் ஆயர் பேட்ரிக் மன்னரது காயத்தையும், அதிலிருந்து வழிந்தோடிய இரத்தத்தையும் கவனித்தார். தனது கவனமின்மையை நினைத்து வருத்தப்பட்ட ஆயர் மன்னரிடம், ‘இதை ஏன் நீங்கள் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை?’ என்று கேட்க, மன்னர் ‘இதுவும் திருமுழுக்குச் சடங்கின் ஒரு பகுதியென நினைத்தேன் என்று பதில் தந்தாராம்.”

அருள்பணி: “ஆம், இன்றுகூட பலருக்குத் திருமுழுக்குச் சடங்கு குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை. இத்தகைய தெளிவற்றப் புரிதல்கள் காரணமாக, திருமுழுக்கு அருளடையாளம் வெற்றுச் சடங்காகச் சுருங்கி, சடங்காச்சாரமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருமுழுக்கு அடையாளம் வெற்றுச்சடங்காக மாறி வருவதற்கான ஒருசில காரணிகளை நாம் பார்க்கலாம்: அ) குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் இதை ஒரு பெயர் வைக்கும் சடங்காக மட்டுமே கருதுகின்றனர். இதன் ஆன்மிக முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆ) போதுமான அளவு தயாரிப்பு இருப்பதில்லை. பெரும்பாலும், ஞாயிறு அன்று இவ்வருளடையாளம் கொண்டாடப்படுவதன் காரணமாகவும், அன்றைய தினத்தில் குருக்களுக்குப் பல வேலைகள் இருப்பதன் காரணமாகவும் இந்நிகழ்வை அவசரகதியில் நிகழ்த்திவிடுகின்றனர். குழந்தையின் பெற்றோரும் ஞானப்பெற்றோரும் தங்களையே போதுமான அளவிற்குத் தயாரிப்பதில்லை. தயார் நிலையில் உள்ள உள்ளத்தில்தான் கடவுளின் அருள் பொங்கிப் பாயும் என்பது நம் மனத்தில் நிறுத்த வேண்டிய ஒன்று. இ) உறவினர் அல்லது நண்பர்கள் என்பதற்காக ஆன்மிகம் பற்றிய கொஞ்சங்கூட விழிப்புணர்வு இல்லாத நபர்கள் ஞானப்பெற்றோராக நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் குழந்தையின் தொடர் ஆன்மிக வளர்ச்சியில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இதன் காரணமாக, தற்போது ஞானப்பெற்றோர் செயல்பாடு ‘ஒரு திருவழிபாட்டுப் பொய் (a liturgical lie) என்று அழைக்கப்படுகிறது. காரணம் பல ஞானப்பெற்றோர் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுவதில்லை.’

மார்த்தா: “புகைப்படம் எடுப்பதற்கும், வீட்டில் விருந்து கொடுப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பலர் திருமுழுக்கு நிகழ்விற்குக் கொடுப்பதில்லை.”

அருள்பணி: “அண்மைக்காலம் வரை திருமுழுக்கு நிகழ்வை Christening ceremony என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழக்கம். Christen என்றால் ‘கிறிஸ்துவைப்போல் ஆக்குதல் (make it Christ) என்று பொருள்.”

அன்புச் செல்வன்: “தந்தையே, எனக்கு ஓர் ஒப்புமை தோன்றுகிறது. Ligten என்ற ஆங்கில வார்த்தை ‘make it light என்று அர்த்தம் பெறுகிறது. Brighten என்ற ஆங்கில வார்த்தை ‘make it bright என்று அர்த்தம் பெறுகிறது. எனவே, Christen என்ற வார்த்தை ‘make it Christ என்ற அர்த்தம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. எத்துணை அற்புதமான வார்த்தை அது!”

அருள்பணி: “ஆம்! இதன் காரணமாகவே இரெய்மண்ட் ப்ரௌன் (Raymond E. Brown) என்ற இறையியலாளர், ‘ஒருவரது திருமுழுக்கு நாள் அவரது குருத்துவத் திருநிலைப்பாட்டு நாளைவிட முக்கியமானது என்கின்றார்.”         

(தொடரும்)