news-details
ஆன்மிகம்
கொடியும் கொடிமரமும்

ஒருநாள் ஒரு நகர்ப்புற ஆலயத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, கோவிலில் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னிடம் செபிக்கக் கேட்டவர்களுக்காக வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தருணத்தில் ஒருவர் பீடமுற்றத்தில் சோடித்து வைக்கப்பட்டிருந்த இயேசுவின் உயிர்த்த சுரூபத்தின் முன்நின்று பக்தியோடு செபித்துவிட்டு, இயேசுவின் பாதம், கரங்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததால் பராக்குக்கு ஆளானேன். பழைய மனிதனுக்குரிய, பாவ நிலையைக் களைந்துவிட்டு புதிய மனிதனாகப் பாஸ்கா காலத்தில் மாறிய அவர், புது மனிதனாக வாழ முற்பட்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

அவர் வெளியே சென்றபின், நான் மாதா கெபியின் முன்சென்று செபித்துவிட்டுத் திரும்பும்போது, அதே ஆள் கோவிலின் முன்பு நிறுவப்பட்டிருந்த பொன், வெள்ளி, உலோகத் தகடு சுற்றப்பட்டுபளபளஎன மின்னொளியில் மிளிர்ந்த கொடிமரத்தையும் மாறி மாறித் தொட்டுக் கும்பிட்டு விட்டு, தன் பையனையும் அவ்விதம் செய்யும்படி பணித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதை? ஏன்? எதற்காகக் கும்பிடுவது? என்ற விஷயத்தில் இன்னும் பழைய மனிதனாகவே இருக்கிறாரே? என வருந்தினேன். ஆனால், அவரிடம் உடனே என்ன, எப்படிச் சொல்வது? என்று வகையறியாமல் அமைதியாக குருவின் இல்லத்துள் சென்றுவிட்டாலும், இது பற்றிய உண்மை எதுவாக இருக்கும் என்ற சிந்தனை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சிலருக்குவணக்கம்எனக் கூறி வாழ்த்துகிறோம் அல்லது மிகவும் மரியாதைக்குரிய ஒருவராக இருந்தால் கைகூப்பி கும்பிடுகிறோம். நமக்கும் மற்றவர்கள் இவ்விதமே செய்கின்றனர். கும்பிடுகிற செயல் மட்டும் ஏதாவது ஒருவகையில் ஆன்ம வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும் அல்லது மிகவும் எளியவர் ஒருவர் வசதி படைத்தவரிடம் உதவி எதிர்பார்த்துச் செய்கின்ற செயலாக இருக்கும். ஆனால், காலில் விழுந்து கும்பிடுவது தவிர, உயிருள்ள மனிதரை யாரும் தொட்டுக் கும்பிடுவது இல்லை.

ஆனால், ஓர் உயிரற்றப் பொருளுக்கு வணக்கம் செலுத்துவதோ, அதை கைகூப்பிக் கும்பிடுவதோ சில நேரங்களில் மட்டுமே. உதாரணமாக, நமது தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதும், திருவுருவங்களைக் கும்பிடுவதும்! ஒன்று, நாட்டுப்பற்றை, தேசபக்தியை வெளிப்படுத்தும் செயல். மற்றொன்று, புனிதர் அல்லது புனிதைமீது நம் பக்தியைக் காட்டும் செயல். அதுபோல புனித இடங்கள் என நாம் நம்புகிற இடங்களிலிருந்து கொண்டு வருகின்ற பொருள்களை வணக்கத்தோடு, மறையாட்டியோடு வைத்துக் கொள்கிறோம். அவை உணவுப்பொருளாய் இருந்தால் அவைகளை மரியாதையோடு உண்டு மகிழ்கிறோம். (.ம்) திருவிழா - மிட்டாய்.

அதேநேரத்தில் தேசியக் கொடியைக் கம்பத்தில் பறக்கவிட்டால்தான் வணக்கம் செலுத்துவோமே தவிர, அதை மடித்துப் பெட்டிக்குள் வைத்தபின் வணக்கம் செய்வதில்லை. அதுபோல, கொடிக்கு மட்டும்தான் வணக்கமே தவிர, கொடியைத் தாங்கும் கொடிமரத்திற்கோ, கொடிக் கம்பத்திற்கோ யாரும் (salute) வணக்கம் செலுத்துவதில்லை. கொடிமரம்/கம்பம் முக்கியத்துவம் பெறுவது அந்த மரத்திலோ அல்லது கம்பத்திலோ இருந்து கொடி எப்பொழுது பறக்கிறதோ அப்பொழுது மட்டும்தான்! அதுவும் கூட திரு விழாக் கொடியோ, தேசியக் கொடியோ, கட்சிக்கொடியோ, மன்றக்கொடியோ பறக்கின்றது என்றால், அந்தக் கொடிக்கு மட்டும்தான் வணக்கமும் கும்பிடுவதும் இருக்குமே தவிர, கொடிமரத்திற்கோ/கம்பத்திற்கோ அல்ல; ஏறக்குறைய பூவும் நாரும் போலதான்.

அண்மைக்காலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் பிற மதத்தவரைப் பின்பற்றி கொடிமரத்திற்கும் கூட மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, அது பயன்படும் திருவிழா நாள்களில் மட்டுமல்லாமல், மற்ற நாள்களிலும் கொடியில்லாதபோதும் அந்த மரத்திற்கு / கம்பத்திற்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அதைச் சுற்றி வருவதும் கும்பிடுகிற பழக்கமும் நமது மக்களில் சிலரிடையே புகுந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல, வருத்தத்திற்கும் உரியது! அதோடு ஒருவரைப் பார்த்து ஒருவர், ஒவ்வொரு கோவிலிலும் இக்கொடிமரத்தை பொன், வெள்ளி, உலோகத் தகடுகளால் அழகுப்படுத்திப் பெருமை தேடுவதோடு, பரிதாபத்திற்குரிய வகையில் அந்த மரத்தைத் தொட்டு கும்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றித் திரு அவைத் தலைவர்களும் எதுவும் கூற இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான், ஊர் ஊராக இந்த நோய், அதாவது கொடிமரத்தை பொன், வெள்ளி, தகடுகளால் அழகுபடுத்தும் நோய் பரவிக் கொண்டே இருக்கிறது.

கொடி, கொடிமரம் இதைப்பற்றித் திரு அவையின் தெளிவான போதனை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், வாடிக்கை, வழக்கம் என்ற பெயரிலும் அங்கு எப்படி? இங்கு அப்படி? என்ற பிறர் சொல்வதைக் கேட்டும், அநேகச் சடங்கு முறைகள்இவை சரிதானா? அர்த்தமுள்ளவையா?’ எனக் கேட்கக்கூடிய அளவுக்குப் புகுந்துவிட்டன. ஒரு திருவிழாவுக்குரிய நவநாள்களில் ஆரம்ப அடையாளமாக மட்டுமே கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. கொடிமரத்தில் ஏற்ற அக்கொடியைப் பறக்க விடுவதும் ஓர் அடையாளச் செயலே என்பதை குரு அக்கொடியை அர்ச்சிக்கும்போது, ‘இக்கொடி உயர ஏற்றப்படுவதுபோல மக்களுடைய உள்ளங்களும் விண்ணகம் நோக்கி உயர்த்தப்படுவனவாக! இந்த நவநாள்களில் இக்கொடியைக் காண்போர் அனைவரும் தங்கள் பாதுகாவலர் / பாதுகாவலியை நினைவுகூர்ந்து அவர்தம் மாதிரியைப் பின்பற்றி உமக்கு உகந்தவர்கள் ஆவார்களாகஎன்ற செபத்திலிருந்து அறியலாம்.

இந்தக் கொடியின் ஆயுள், அது கொடிமரத்தில் ஏற்றப்பட்ட நாளிலிருந்து விழா முடிவில் இறக்கப்படும் நாள் வரையில்தான். கொடி ஒரு திருப்பண்டம் (relics) அல்ல; எனவே, அதைத்திருக்கொடிஎன்று குறிப்பிடுவதும் பொருத்தமானதல்ல. அர்ச்சிக்கப்பட்ட எல்லாப் பொருளும் திருப்பொருள் ஆகிவிடுவதில்லை; கொடிமரமும் முக்கியத்துவம் பெறுவது அதில் ஏற்றப்படும் கொடியினால்தானே தவிர, அந்தக் கொடிமரமும், கல்தூணோ, பொன், வெள்ளி, தகடுகளால் சுற்றப்பட்டதோ என்பதெல்லாம் எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல; பொருளற்றதும் கூட (immaterial). ஏனெனில், கொடியும் கொடிமரமும் நமது உள்ளங்களை விண்ணகம் நோக்கி உயர்த்தப்பட தூண்டவும், அதற்கு உதவியாக நடைபெறும் நவநாள் வழிபாடுகளில் தகுதியோடு பங்குபெற்றுப் பயனடையத் தூண்டவுமே!

ஒரு திருவிழா முடிந்து அடுத்த ஆண்டு திருவிழா வரைக்கும் அந்தக் கொடியோ, கொடிமரமோ யாருக்கும் எவ்விதத்திலும் அடையாளமாகவோ, உண்மையாகவோ பயன்படுவதில்லை. எனவே, பல இடங்களிலோ, சில இடங்களிலோ இப்படிச் செய்கிறார்கள் என்பதற்காகக் கொடிமரத்திற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும், இத்தகைய கொடிமரத்தைத் தொட்டுக் கும்பிடுவதும் சரியா? என்ற கேள்வியும் எழும்புகிறது.

மேலும், திருவிழாவை முன்னிட்டு மட்டும் புனிதப்படுத்தப்படுகிற கொடியையோ, கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிடலாம் என்பது சரியென்றால்அதே திருவிழா சமயத்தில் புனிதப்படுத்தப்படுகிற புனிதரோ/புனிதையோ பவனி வருகின்ற தேர், சப்பரம் இவைகளையும் மற்ற நாள்களிலும் அவ்விதம் தொட்டுக் கும்பிட வேண்டுமா? என்ற கேள்வியும் சரிதானே! ஏற்கெனவே பல இடங்களில் கொடிமரத்திற்கு பொன்/வெள்ளி தகடுச் சுற்றி வைத்திருப்பதுபோல இனி சப்பரத்திற்கும் தேருக்கும்... ஏன் கொடிக்கும்கூட அவ்வித முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டியது அந்தந்த இடத்தில் உள்ள அருள்பணியாளரும், அவருடைய ஆயரும்தானே தவிர வேறு யார்?

நமது வேதம், தொட்டுக் கும்பிடுவதில் திருப்தி அடைகிற வேதம் அல்ல; நமது நம்பிக்கையும் கூடத் தொட்டு கும்பிடுவதில் அல்ல; மாறாக, நாம் நம்புகிற உண்மைகளை வாழ்வில் ஏற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதானே உண்மை! எனவே, கொடியோ கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிட்டு அவைகளைக் கறைபடுத்துவதற்குப் பதில், சரியில்லாத (மூட) நம்பிக்கை எனும் கதைகளை இறைவார்த்தைகளைக் கொண்டு நீக்கி, இறைவார்த்தைகளின்படி வாழ்ந்து இயேசு (லூக் 11:28) கூறுவதுபோல பேறுபெற்றோரோடு இணைவோம். லூக்கா 8:21-இன்படி இயேசுவின் தாயும் சகோதரருமாய் திகழ்வோம்.