நவம்பர் மாதம் என்பது நம் திரு அவையின் பாரம்பரியப்படி, இறந்து போன நம் அன்புக்குரியவர்களின் ஆன்மாக்களை நாம் நினைவுகூர்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அழகான மாதம். இம்மாதத்தில் இறந்தவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பதும், இறந்தோரின் கல்லறைகளுக்குச் சென்று இறைவேண்டல் செய்வதும் பலரது வழக்கம். இந்நாள்களில், நமக்கு முன்னால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களை இறைவன் இறுக அணைத்துக்கொண்டார் என்ற உறுதிப்பாட்டோடு தொடர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது நம் கடமை. இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் நினைவை நாம் கொண்டாடக் கொடுக்கப்பட்டிருக்கிற ஓர் அற்புதமான தினம்தான் நவம்பர் 2.
அண்மையில்
நடந்த ஒரு கருத்தரங்கில் இறந்தோருக்காக இறைவேண்டல் செய்வது மற்றும் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவற்றின் பின்னணியில் இருக்கிற காரணம் குறித்து ஒரு நபர் கேள்வி எழுப்பினார். எனவே, இன்று இந்தச் செபங்களைக் குறித்து அறிந்துகொள்வதும், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற திருப்பலியின் அளப்பரிய பலன்களை உணர்ந்துகொள்வதும், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலை (உத்தரிக்கிற ஸ்தலம்) இருக்கிற ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
இறந்தோருக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கமானது பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலைமீது நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு நபர் இறைவன்மீது நம்பிக்கை கொண்டவராக இறந்திருந்தாலும், அவர் அற்பப் பாவங்களோடு இறந்திருப்பின் கடவுளின் அன்பாலும் இரக்கத்தாலும் தூய்மையாக்கப்படுவார் என்பது நமது நம்பிக்கை. இப்படித் தூய்மையாக்கப்பட்ட ஆன்மா விண்ணகத்தில் இறைவனை முகமுகமாய் காணத் தகுதியான புனித நிலையை அடையும். ஆனால், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலையில் இருக்கிற ஆன்மாக்களைப் பொறுத்தவரை அவர்கள் இத்தகைய எந்த ஒரு பலனையும் நேரடியாக அடைய முடியாது, ஏனெனில், அந்த ஆன்மாக்கள் மெச்சத்தக்க எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய தகுதியோடு இல்லை. இந்த ஆன்மாக்கள் மீட்கப்பட்டிருந்தாலும், அவற்றால் புனிதத்தில் உயர முடியாது. மாறாக, மாட்சி பொருந்திய நிலையை அடைய தடையாய் இருக்கிற குறைகளைக் களைய மட்டுமே முடியும்.
இறந்தவர்களுக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஒன்றும் புதிது இல்லை. திரு அவையின் மறைக்கல்வி நூல் எண் 1032 இதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது: ‘தொடக்கக் காலத்தில் இருந்தே திரு அவை இறந்தோரின் நினைவைக் கொண்டாடியிருக்கின்றது, அவர்களுக்காக இறைவேண்டல்களை ஏறெடுத்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தூய்மையாக்கப்பட்டு இறைவனை முக முகமாய் காணும் பேற்றினைப் பெற திருப்பலி ஒப்புக்கொடுத்திருக்கிறது.’ இது
பழைய ஏற்பாட்டில் வேரூன்றி வளர்ந்த ஒரு பாரம்பரியம். திருச்சட்டம் தடைசெய்திருந்த வேற்றுத் தெய்வங்களின் அடையாளங்களை அணிந்து, இறந்திருந்த யூத படைவீரர்களுக்காக யூதா மக்கபே செபங்களையும் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இதையே மக்கபேயர் இரண்டாம் புத்தகத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்: “அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம் மன்றாட்டில் ஈடுபட்டார்கள்” (12:42); “ஆகவே
இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் (யூத மக்கபே) அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்” (12:45).
தொடக்கத்
திரு அவையின் வரலாற்றிலும் இறந்தோருக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுக்கப்பட்டதற்கான
வலுவான ஆதாரங்களை நாம் காண முடிகின்றது. இது இறந்தவர்களை நினைவுகூர்வது மற்றும் அவர்களுக்காக இறைவேண்டல் பரிந்துரை செய்வது ஆகியவற்றில் திரு அவை கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமை நிலத்தடிக் கல்லறைகளின் மீது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. கல்லறைமீது காணப்பட்ட கல்வெட்டில் ஃபிரிஜியாவில் உள்ள ஹைரோபோலிஸினுடைய ஆயர் அவர்கள், புனித அபேர்சியுஸ் அவர்களுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிக்க வேண்டுகோள் விடுத்தது பொறிக்கப்பட்டிருக்கின்றது
(கி.பி. 180). கி.பி. 211-இல்
புனித தெர்த்துலியன் மரித்தவர்களின் ஆண்டு நினைவானது செபங்களோடு அனுசரிக்கப்பட்டதற்குச் சான்றளித்து இருக்கின்றார். ஹிப்போலிட்டஸ் வகுத்து வழங்கிய சட்டநெறிமுறைகளும் திருப்பலியின் போது இறந்தவர்களுக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுப்பதை வலியுறுத்துகின்றன (கி.பி. 235).
திரு
அவைத் தந்தையர்களின் சாட்சியங்களும் இந்த அழகான நம்பிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் அமைகின்றன. ஜெருசலேம் நகர் சிரில் அவர்கள் திருப்பலியில் எவ்வாறு உயிரோடு இருப்போரும் இறந்தோரும் நினைவுகூரப்படுகின்றார்கள்?
என்றும், எவ்வாறு இந்தத் திருவிருந்து உயிரோடு இருக்கிற அல்லது பாவத்தோடு இறந்த மனிதர்களுக்குப் பலன்தரக் கூடியதாக அமைகின்றது? என்பதைக் குறித்தும் தனது மறைக்கல்வி போதனையில் விளக்கமளித்திருக்கின்றார்.
கி.பி. 397-இல் புனித அம்புரோஸ் பின்வருமாறு போதிக்கின்றார்: “அவர்கள் வாழ்ந்தபோது அவர்களை நேசித்த நாம், அவர்கள் இறந்த பிறகு நம் செபங்களின் வழியாய் அவர்களை விண்ணக வீட்டில் சென்று சேர்க்கும் வரை அவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது.”
புனித
மோனிகா தன் மகனான புனித அகுஸ்தினிடம் தன் இறப்பிற்குப் பிறகு திருப்பீடத்தில் தன்னை எப்போதும் நினைவுகூரும்படி கேட்டுக் கொண்டார். கி.பி. 407-இல்
புனித ஜான் கிறிஸ்தோஸ்தம் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றார்: “அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவி புரிவோம். யோபுவினுடைய பிள்ளைகள் அவர்களுடைய தந்தை செலுத்திய பலியால் தூய்மையாக்கப்பட்டார்கள் என்றால், இறந்தவர்களுக்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலியும் இறைவேண்டல்களும் அவர்களுக்குத் தேற்றரவாக அமைவதைக் குறித்து நாம் ஏன் சந்தேகிக்கவேண்டும்?”
திருத்தந்தை
புனித கிரகோரி பின்வருமாறு கூறுகின்றார்: “இறந்தவர்களுக்கு உதவி செய்ய, அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய, திருப்பலி ஒப்புக்கொடுக்க நாம் எப்போதும் தயங்கக்கூடாது.”
‘Mirae Caritatis’ என்ற தனது சுற்றுமடலில் திருத்தந்தை 13-ஆம் லியோ, “அற்புதமான திருப்பலி இறைவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்
என்று நம் நம்பிக்கையின் படிப்பினைகள் நமக்கு எடுத்துக் கூறினாலும், நம் பரிந்துரைகளைப் பெற்றுத்தரும் விதத்திலும் மேலும் திருத்தூதர்கள் மரபுப்படி கிறிஸ்துவில் இறந்திருந்தும் இன்னும் தூய்மையாக்கப்படாமல் இருக்கும் சகோதர, சகோதரிகளின் பாவக்கறைகளை அகற்றும் விதத்திலும் இறைவனால் முடிசூட்டப்பட்டிருக்கிற புனிதர்களின் நினைவாகவும் இதை நாம் கொண்டாடலாம்” என்கிறார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்தின் ‘Lumen Gentium’ எனும் ‘உலகின் ஒளி’ என்கிற திரு அவை கொள்கை ஏடு பின்வருமாறு கூறுகின்றது: ‘விண்ணகத்தில் இருப்போர் மற்றும் இறந்து கழுவாய் நிலையில் தூய்மையாக்கப்படாமல் இருப்போர் ஆகியோருக்கும் நமக்கும் இருக்கிற உறவு ஒன்றிப்பின்மீது நம் முன்னோர் கொண்டிருந்த போற்றுதற்குரிய நம்பிக்கையை இந்தத் திருச்சங்கம் பற்றுறுதியோடு ஏற்றுக்கொள்கின்றது.’
நம்பிக்கையாளர்கள்
இறந்து கழுவாய்நிலையில் இருக்கிற ஆன்மாக்களுக்குத் தங்களது இறைவேண்டல்கள், பரிகாரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பலியின் வழியாக அவர்கள் தூய்மையாக்கப்பட உதவி செய்யலாம். ஒவ்வொரு திருப்பலியும் காலம், இடம் போன்ற விசயங்களைக் கடந்து விண்ணகம்-மண்ணகம் மற்றும் கழுவாய்நிலையில் இருக்கிற நம்பிக்கையாளர்கள் யாவரையும் ஒரு புனிதம் மிக்க ஒன்றிப்பில் இணையச் செய்கின்றது. மேலும், நற்கருணை நம் அற்பப் பாவங்களைப் போக்கி, சாவான பாவங்களிலிருந்து நம்மைக் காத்து கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற ஒன்றிப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றது (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி எண். 1391-1396). எனவே, இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாவிற்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலி, இறைவேண்டல்கள் மற்றும் பரிகாரங்கள் யாவும் சரியான மற்றும் தூய செயல்கள் ஆகும்.
(தொடரும்)