இயேசு, தனது இறுதி இராவுணவின்போது, தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவருக்கு ஓர் அப்பத்துண்டை வழங்கும் தருணமானது, தன்னைப் பகிர்வதற்கான ஓர் அடையாளம் மட்டுமல்லாமல், தன்னைச் சீடர்கள் கைவிட்டுவிடாமல் இருப்பதற்கான அன்பின் கடைசி முயற்சியாகும் என்பதை மிகவும் அதிர்ச்சியூட்டுகின்ற மற்றும் ஒளியூட்டுகின்ற அடையாளச் செயல்களில் ஒன்றைக் கருவியாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்டார்.
நற்கருணையின்
மகத்துவத்தில்
மானுடன்
1979-ஆம் ஆண்டு,
தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னதாக, பேராயர் ஃபுல்டன் ஜே ஷீன் ஒரு
தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர் அவரிடம், “பேராயராகிய உங்களின் செயல் மற்றும் வாழ்க்கை பல மில்லியன் மக்களுக்கு
ஊக்கமளித்துள்ளன. அதுபோல் உங்களுக்கு ஊக்கமளித்தவர் யார்? திருத்தந்தையா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராயர், “எனக்கு ஊக்கமளித்தது திருத்தந்தையோ, கர்தினாலோ, ஆயரோ, குருக்களோ அல்லது அருள்சகோதரிகளோ அல்ல; மாறாக அது ஒரு பதினோரு வயது சிறுமி” என்று தனது அனுபவ நிகழ்வினைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
1940-களின் முடிவில்,
சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, கிறித்தவ ஆலயங்களைத் தாக்கிய அவர்கள் ஒரு குருவானவரை அவருடைய அறையிலேயே சிறை வைத்தனர். அக்குருவானவர் சன்னலின் வழியாகப் பார்த்தபோது, ஒரு காவலன் ஆலயத்திற்குள் சென்று, புனித இயேசுவைத் தாங்கிய நற்கருணைப் பேழையைத் தரையிலிட்டு உடைத்துச் சிதைத்தான். அந்த நேரத்தில் ஆலயத்தின் பின்புறம் செபித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, காவலர்கள் உள்ளே வந்ததும் மறைந்துகொண்டாள். அந்த இரவு தொடங்கி ஒவ்வொரு நாளும் அவள் வந்து, ஒருமணி நேரம் செபித்துப் பின், அவள் அந்தச் சிதைக்கப்பட்ட இடத்தில் கிடக்கும் திவ்விய நற்கருணையிலிருந்து ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் உட்கொண்டு வந்தாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் காவலன் ஒருவனிடம் அகப்பட்ட அவளை, காவலன் துப்பாக்கி முனையில் அடித்துக்கொன்றான். இதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த குருவானவரே அதற்குச் சாட்சி என்றும், அதனால் மிகவும் ஆழமாகத் தூண்டப்பட்ட நான் ஒரு முடிவை எடுத்தேன்: “நான் என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது, இயேசுவின் முன், திவ்விய நற்கருணையின் முன் செபிக்க வேண்டும்”
என்பதுதான் என்று கூறினார்.
இதை என்
நினைவாகச்
செய்யுங்கள்:
நற்செய்தியாளர்
யோவான், தனது ஆழ்ந்த ஆன்மிக உணர்திறனுடன், இந்நிகழ்வை நமக்கு விவரிக்கிறார். “இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், அவர்கள் மேல் இறுதிவரை அன்பு செலுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவி “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று
தன்னையே பகிர்ந்து சென்றார் (யோவா 13).
இறுதிவரை
அன்பு செலுத்துதல் என்பது கிறிஸ்துவின் இதயத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல். நிராகரிப்பு, ஏமாற்றம், நன்றியின்மைக்கு முன்னால் நிற்காத நிலையான அன்பு இயேசுவின் அன்பு. இயேசுவுக்கு அவரது நேரம் தெரியும். ஆனால், அவர் அதை எண்ணி வருந்தவில்லை, மாறாக அதனை அவர் தேர்ந்தெடுக்கிறார். தனது அன்பானது, மிகவும் வேதனையான காயத்தை, துரோகத்தின் வழியாகக் கடந்து செல்லவேண்டும் என்ற சூழலை அவர்தான் அங்கீகரிக்கிறார்.
பின்வாங்குதல்,
குற்றம் சாட்டுதல், தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்குப் பதிலாக, அவர் தொடர்ந்து அவர்களை அன்பு செய்கின்றார். அவர்களின் காலடிகளைக் கழுவி தன் துகிலால் துடைக்கிறார், அப்பத்துண்டைத் திராட்சை இரசத்தில் நனைத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்”
(யோவான் 13:26) என்று தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென அறிவிக்கின்றார் இயேசு.
பலியை அல்ல
இரக்கத்தையே
விரும்புகிறேன்:
எளிய
மற்றும் தாழ்மையான செயல்களின் வழியாக, இயேசு தனது அன்பை முன்னோக்கியும் அதன் ஆழத்திற்கும் கொண்டு செல்கிறார். என்ன நடக்கிறது என்பதைப் புறக்கணிப்பதற்காக அல்ல; மாறாக, என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாக, துல்லியமாகக் காண்பதால் அவ்வாறு செய்கின்றார். தீமையில் நாம் தொலைந்து போனாலும், மற்றவரின் சுதந்திரத்தை, மென்மையான அடையாளச் செயல்களின் ஒளியால் அடைய முடியும் என்பதை வலியுறுத்துகிறார். ஏனெனில், உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்காது, மாறாக, ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே, இலவசமாகக் கொடையாக வழங்கப்படுகிறது என்பதைத் தனது செயல்களால் எடுத்துரைக்கின்றார். இயேசுவின் இத்தகைய மனநிலையானது, யூதாசுக்குப் புரியவில்லை. “அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்” (யோவா
13:27) என்று நற்செய்தி கூறுகிறது. அந்த அப்பத்துண்டுதான் நமது மீட்பு.
நமது
வாழ்விலும் கடவுளை நாம் நிராகரிக்கும் நேரத்தில் கூட, கடவுள் நம்மை அடைவதற்காக எல்லாவற்றையும் - முற்றிலும் எல்லாவற்றையும் நமக்காகச் செய்கின்றார் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு நமக்காக நிறைவேற்றும் மறைபொருள் இதுதான், இம்மறைபொருளில் நாமும் சில நேரங்களில் பங்கேற்க ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம்.
தி ஸ்டோல்
அண்ட்
தி
டவல்
“தி ஸ்டோல் அண்ட்
தி டவல்”
(The Stole and the Towel) என்பது
ஒரு புத்தகத்தின் தலைப்பு, இது 58 வயதில் வயிற்றுப் புற்றுநோயால் இறந்த இத்தாலிய ஆயர் டோனினோ பெல்லோவின் செய்தித் தொகுப்பு. 1993-ஆம் ஆண்டு புனித வியாழன் அன்று, தனது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவர் தனது மறைமாவட்டத்தின் குருக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் ‘தி ஸ்டோல் அண்ட்
தி டவல்’ பிணைக்கப்பட வேண்டும் என்று அவர் அவர்களை வலியுறுத்தினார். ‘தி ஸ்டோல்’ என்பது நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது, மேலும் ‘தி டவல்’ என்பது நாம் நமது சேவையின் மூலம் மனிதகுலத்துடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. நற்கருணைப் பிரசன்னத்தில் இறைவனுடன் ஒன்றுபடவும், மக்கள் தங்கள் ஊழியராகக் குருக்கள் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார்.
ஏன் இந்த
உணவு?
ஏன்
இயேசு, தம்மை நினைவுகூர ஓர் உணவினைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில் நாம் ஒருபோதும் சாப்பிடுவதை மறக்கமாட்டோமென்பது உறுதி! உணவின் வழி மகிழ்ச்சி, நட்பு, மற்றும் உணர்வை ஒன்று சேர்க்கிறது. ஆனால், ஒரு நல்ல உணவை உருவாக்க, பலியீடு, பரிவு, கவனம் ஆகியவை தேவைப்படுகிறது. அந்த உணவு நமக்குள் உயிரணுக்களாக உடைந்து, கலந்து, சிதைந்து ஆற்றலை அளிக்கிறது.
நற்கருணை
என்பது, நம்மால் கொண்டாடப்படவும், அவரை நினைவுகூரவும் இறைமகன் இயேசுவால் விட்டுச் சென்ற மிகப்பெரிய தடம். சமாரியாவில் அது தண்ணீர், கானாவில் அது திராட்சை இரசம், நகர்ப்புறத்தில் ஒரு சிறுவனின் அப்பமும் மீனும், கடற்கரையில் மீண்டும் பேதுருவுக்காக, கனானிய பெண்ணுக்கும் இலாசருக்கும், மேலும், எம்மாவு செல்லும் பயணத்தில் என அப்பம் இயேசுவின்
மறு உருவானது. உணவின் மகத்துவம், பங்கேற்பும் நன்றியும் என்பதை மார்த்தாவின் கவனிப்பிலும் பேதுரு மாமியாரின் விருந்திலும், சிமியோனின் வீட்டில், “அவர்களுக்குச் சாப்பிடக் கொடுங்கள்”
என்ற உத்தரவிலும் பிரதிபலிக்கிறது.
உணவான, மனுவான
இறைவன்
2015-ஆம் ஆண்டு
பிலடெல்பியாவில் உள்ள குர்ரான் - ஃப்ரோம்ஹோல்ட்
சீர்திருத்த விடுதிக்குச் சென்ற, மறைந்த நம் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ், “வாழ்க்கை என்பது, நமது வரலாற்றில் கலந்த தூசித்தடங்களில் நம்முடைய கால்களை மாசுபடுத்திக்கொள்வதே. ஆகவே, நாம் அனைவரும் சுத்தம் செய்யப்பட வேண்டியவர்கள், கழுவப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்றார்.
பாவத்தின் கறைபடிந்த நம் வாழ்வின் பக்கங்களை, இயேசுவின் செந்நீர்த்துகில் கொண்டு தூய்மையாக்குவோம்.