news-details
சிறப்புக்கட்டுரை
இலாபம் செல்வருக்கு! இழப்பு ஏழைக்கு!

இந்தியா, இரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் நன்மை சாதாரண மக்களுக்கு எட்டவில்லை. 2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 110 அமெரிக்க டாலராக இருந்தபோதும், சென்னையில் பெட்ரோல் விலை வெறும் 76 ரூபாய்தான். ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 69 அமெரிக்க டாலருக்குக் குறைந்தும், சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

இதன் பின்னணி, தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அசாதாரண இலாபம் குவிப்பதில்தான் உள்ளன. இந்த அநியாய இலாபத்திற்கு அசாதாரண இலாப வரிவிதித்து, அந்த வருவாயை ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைக் காப்பாற்றப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மேனாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இரகுராம் இராஜன்கூட இதை எச்சரிக்கை மணியாகக் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரை வரிவிதித்துள்ளது. இதில் பாதி பதிலடி வரி, மீதிப்பகுதி தண்டனை வரி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தியா, இரஷ்ய எண்ணெயை மலிவு விலையில் வாங்கி, அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் பெரும் இலாபம் அடைந்ததுதான். ஆனால், இதன் தாக்கம் நேரடியாக தமிழ்நாடு தொழில்களையே சிதைக்கின்றன. திருப்பூரில் மட்டும் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதிப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் கிராமப்புறப் பெண்களும் ஏழைக் குடும்பங்களும் வேலை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ளனர்.

இறால் வளர்ப்புத் துறையில் சுமார் 20 இலட்சம் பேர் வேலை செய்து வருகிறார்கள்; இவர்களில் பாதியளவுக்குமேல் வாழ்க்கை நெருக்கடியில் சிக்கக்கூடும். நகை மற்றும் இரத்தினத் துறையில் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும். சேலம், வேலூர், சென்னை போன்ற இடங்களில் தோல் மற்றும் உதிரிப்பாகத் தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் வேலை இழப்பது குடும்பங்களின் கல்வி, சுகாதாரம், உணவுத் தேவைகளுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். வேலை இழந்தவர்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் குடிசைப்பகுதிகள் பெருகும். ஏற்கெனவே காணப்படும் சமூக அசமத்துவம் மேலும் வலுவாகி, ஒருபுறம் பணக்காரர்களின் செல்வம் குவியும் நிலையில், மறுபுறம் ஏழைகளின் அடிப்படை வாழ்வாதாரமே சிதைந்து போகும் அபாயம் உள்ளது.

இதனால் அரசியல் கேள்விகளும் எழுகின்றன. மேனாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியபடி, அமெரிக்கா 50 விழுக்காடு வரி விதித்த சூழ்நிலையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யைக் குறைத்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு தனியார் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தையே காப்பாற்றப் போகிறதா? அல்லது தொழிலாளர்களின் உயிர் வாழ்வையே காப்பாற்றப் போகிறதா? என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது.

மேலும் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்...

இந்தியாவில் எரிபொருள் விலைகளை மத்திய அரசு இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்த வில்லை. உலகச் சந்தை விலை குறைந்தபோதும், பொதுமக்களுக்கு அதற்கான நன்மை வழங்கப்படவில்லை.

தனியார் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தை அதிகரிக்க அரசின் மௌனம், ‘சந்தை சுதந்திரம் என்ற பெயரில் அரசின் பொறுப்பை விலக்குகிறது.

அநியாய இலாப வருவாய் பொதுமக்களுக்குத் திரும்பாத சூழலில், வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படுவது, இந்தியப் பொருளாதாரத்தை நேரடியாகப் பலவீனப்படுத்தும்.

இந்தச் சிக்கல்களிலிருந்து வெளியேற அரசின் பொருளாதார முடிவுகள் பொதுமக்களின் பக்கம் திரும்ப வேண்டும். எண்ணெய் நிறுவனங்களின் அநியாய இலாபத்திற்கு அசாதாரண இலாப வரி விதித்து, அந்த வருவாயைச் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் காப்புநிதியாக மாற்றவேண்டும். ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு வரிச்சலுகை, வட்டி குறைப்பு, புதிய சந்தைத் திறப்புகள் மற்றும் அரசின் நேரடி ஆதரவு தேவை. தமிழ்நாடு அரசும் தனியே ‘ஏற்றுமதி பாதுகாப்பு நிதி அமைத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் இன்று ஒரு முக்கியச் சந்திப்பில் நிற்கிறது. தவறான முடிவுகள் எடுக்கப்பட்டால் வேலைவாய்ப்பு இழப்பு என்ற புள்ளிவிவரம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்படும்.

ஆகவே, தனியார் இலாபத்தைவிட, தொழிலாளர்களின் கண்ணீரை முதலில் துடைப்பதே அரசின் அடிப்படை கடமை.