‘மனிதர்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது’ என்ற தலைப்பை முன்மொழிந்து 2026-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதிக்கான 60-வது உலகச் சமூகத் தொடர்பு தினக் கருப்பொருளை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை லியோ. ‘Preserving human voices and faces’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி, இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள், மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி அதன் ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இது எந்தச் சூழலிலும் மனிதர்களுக்கே உரிய கருணை, நெறிமுறை மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பொறுப்புகளுடன் செயலாற்றாது எனவும், இயந்திரங்கள் மனிதர்களின் வேலையை எளிமையாக்கவே பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி, மனிதர்களை ஓரங்கட்டுவது ஏற்கமுடியாதது என வத்திக்கான் ஊடகப் பேராணையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, சமூகத்திற்கு வழிகாட்டும் முகவராக மனிதகுலம் இருப்பதை உறுதி செய்வதுடன், மனிதத்தின் தனித்துவத்தைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மனித வாழ்க்கையை இணைப்பதுடன் எளிதாக்கக்கூடிய கருவிகளாக, இயந்திரங்கள் செயல்படும் இடமாகத் தகவல்தொடர்பின் எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது.