புனிதர்கள் என்பவர்கள் பழங்காலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது நவீன உலகத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்று பலர் நினைக்கலாம். ஆனால், புனித கார்லோ அக்குதிஸ் அதற்கு முற்றிலும் மாறுபட்டவர். இணைய யுகத்திலும் புனிதர்கள், அசாதாரணமான விசுவாசத்தைக் கொண்ட சாதாரண இளைஞர்களாக இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.
கார்லோ
அக்குதிஸ் மே 3, 1991 அன்று இலண்டனில் பிறந்தார். மதம் சாராதப் பெற்றோருக்குப் பிறந்தாலும், சில வாரங்களிலேயே அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. பின்னர், அவருடைய குடும்பம் இத்தாலியின் மிலான் நகருக்குக் குடிபெயர்ந்தது. பெற்றோர் வேலைக்குச் சென்றதால், கார்லோ பெரும்பாலும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே அவர் கத்தோலிக்க நம்பிக்கையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது பராமரிப்பாளர்களில் ஒருவர் அவரின் கத்தோலிக்க நம்பிக்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்து, அவருடைய இறைநம்பிக்கைக்கு உறுதுணையாக இருந்தார்.
இளம் வயதிலேயே
இறை
நம்பிக்கை
மூன்று
வயதில் கார்லோவின் தாத்தா இறந்தபோது, அவர் கனவில் வந்து தனக்காகச் செபிக்கக் கூறினார். சிறிது காலத்திற்குப் பிறகு, தனது பாட்டியிடம் தனது மேலாடையை அணிந்துகொண்டு ஆலயத்திற்குச் செல்லவேண்டும் என்று கார்லோ கூறினார். காரணம் கேட்டபோது, “தாத்தா
இயேசுவைப் பார்க்கச் சென்றுவிட்டார், அவருக்காகச் செபிக்க வேண்டும்”
எனப் பதில் அளித்திருக்கிறார்.
ஒருமுறை
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் சில குழந்தைகள் அவரைத் துன்புறுத்தியபோது, அவர் கனிவாகவே நடந்துகொண்டார். “கோபப்பட்டால் இயேசு மகிழ்ச்சியடையமாட்டார்” என்று
அவர் கூறினார். இந்தக் கனிவான குணம் அவருடைய அன்றாட வாழ்க்கையிலும் வெளிப்பட்டது.
விடுமுறைக்குப்
பிறகு, உள்ளூர் தேவாலயத்திற்கு வரும் வயதான பெண்களுடன் சேர்ந்து அவர் செபமாலை சொல்வார். பள்ளிக்குச் செல்லும்போது சாலையில் வேலை செய்பவர்களின் பெயர்களைத் தெரிந்துகொண்டு, ஒவ்வொரு காலையிலும் அவர்களை வாழ்த்துவார்; அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகக் கூறுவார்.
ஏழு
வயதில் முதல் நற்கருணை பெற்ற பிறகு, கார்லோ அடிக்கடித் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நற்கருணை முடிவில்லா வாழ்விற்கு வழி எனத் திடமாக நம்பினார். நற்கருணை வழிபாட்டிலும் ஆர்வமாகக் கலந்துகொள்வார். அவருடைய ஆழ்ந்த நம்பிக்கையும் இடைவிடாத கேள்விகளும் அவருடைய தாயாரை மீண்டும் கத்தோலிக்க நம்பிக்கைக்குத் திரும்பச் செய்தது. அவருடைய வீட்டில் பணி செய்த இராஜேஷ் மோகூர் என்பவருடன் கார்லோ நட்புக்கொண்டு, அவருக்குத் திருமுழுக்குப் பெற உதவினார். அக்குதிஸ் பேசியதைக்கேட்டு மோகூரின் நண்பரும் தாயாரும்கூட கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறினர்.
இணைய யுகத்தின்
பயன்பாடு
இளைஞனாக
இருந்த கார்லோவுக்குக் கணினி அறிவியல் மற்றும் நிரலாக்கம்மீது ஆர்வம் இருந்தது. தானாகவே நிரலாக்கம் கற்றுக்கொண்டார். சாக்ஸபோன் வாசிப்பதையும், ஹேலோ, சூப்பர் மாரியோ, போக்கெமான் போன்ற வீடியோ கேம்கள் விளையாடுவதையும் அவர் விரும்பினார். ஆனால், அடிமையாகிவிடக்கூடாது என்பதற்காக, வாரத்திற்கு ஒரு மணிநேரம் மட்டுமே விளையாடுவார்.
பன்னிரண்டாவது
வயதிலிருந்து தனது நண்பர்களுடன் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். புனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. குறிப்பாக, புனித பிரான்ஸிஸ் அசிசியார், புனித பதுவா அந்தோனியார், புனித பிரான்சிஸ்கோ, புனித யசிந்தா மார்டோ மற்றும் புனித டொமினிக் சாவியோ ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினார்.
பதின்மூன்று
வயதில், அற்புதங்களுக்கான இணையப்பக்கத்தையும், பின்னர் தன்னார்வத் தொண்டுக்கான இணையதளத்தையும் உருவாக்கினார். தன்னுடைய நிரலாக்கத் திறமையைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் நடந்த திருவுடல் அற்புதங்கள் மற்றும் அன்னை மரியாவின் காட்சிகள் பற்றிய தகவல்களைப் பட்டியலிட்டு ஓர் இணையதளத்தை உருவாக்கினார். இரண்டாண்டுகள் உழைத்து அந்த இணையதளத்தை 2006 அக்டோபர் 4 அன்று வெளியிட்டார்.
இளவயது மரணம்
மற்றும்
புனிதர்
பட்டம்
இணையதளத்தை
வெளியிடுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு கார்லோவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் பரோடிடிஸ் என்று கண்டறியப்பட்டாலும், அவருடைய நிலைமை மோசமானது. பிறகு
அவருக்குக் கடுமையான இரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் இருந்தபோது, அவர் தனது வலிகளைத் திருத்தந்தை மற்றும் திரு அவைக்காக ஒப்புக்கொடுத்தார்.
தன்னுடைய
வலியைக் குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, ‘என்னைவிடப் பலர் அதிகமாகத் துன்புறுகிறார்கள்’ என்று
பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் தனது தாயாரிடம், அம்மா, பயப்படாதீர்கள். மரணம் முடிவில்லா வாழ்க்கைக்குப் போகும் பாதை. நாம் முடிவில்லா வாழ்வை வாழத் தயாராக வேண்டும் என்று கூறி அவரைத் திடப்படுத்தினார். 2006 அக்டோபர் 12, அன்று, தனது 15 வயதில் அவர் மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்கில், பல இளைஞர்களும், திரு
அவையை விட்டுச் சென்றவர்களும் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்.
அருளாளர் மற்றும்
புனிதர்
பட்டம்
கார்லோ
அக்குதிஸின் இறப்பிற்குப் பிறகு, அவருடைய புனிதர் பட்டத்திற்கான பணிகள் தொடங்கின. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன், கணையப் பிறவிக் குறைபாட்டிலிருந்து குணமடைந்தது, கார்லோவின் பரிந்துரையால் நடந்த அற்புதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த அற்புதம் காரணமாக, 2020-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ், கார்லோவை அருளாளர் என்று அறிவித்தார்.
மேலும்,
2022-ஆம் ஆண்டு கோஸ்டா ரிகாவில் ஒரு பெண்ணின் மூளை இரத்தக்கசிவு, கார்லோவின் பரிந்துரையால் குணமானது. இந்த அற்புதங்கள் திரு அவையால் அங்கீகரிக்கப்பட்டதால் அவரது புனிதர் பட்டத்திற்கான நிகழ்வு 2025 மே மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவு, இந்த நிகழ்வு தள்ளிப் போவதற்குக் காரணமாய் அமைந்தது. சிறு தாமதத்திற்குப் பின், 2025 செப்டம்பர் 7, வத்திக்கானில் திருத்தந்தை லியோ அவரைப் புனிதர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்று,
புனித கார்லோ அக்குதிஸ் இளம் கிறித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.