“எழுந்து ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!” (எசா 60:1). உண்மையான இறைவார்த்தையில் (யோவா 17:17) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒளி வீசி, இறைவனின் மாட்சி தம்மேல் உதித்திருப்பதை உணரமுடியும். உலகின் ஒளியான இயேசுவில் நிறைந்த நம்பிக்கை வைப்போம். இந்த நம்பிக்கை ஒளி எங்கும் ஒளிர வேண்டும் என்றால், நாம் அனைவரும் இயேசுவோடு இணைந்து, அகில உலகக் குடும்பமாக, நல்மனமுடைய மக்களாக, அமைதியின் தூதுவர்களாக, ஒருமனப்பட்ட சமத்துவச் சமுதாயமாக, சகோதர உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்.
இந்த
ஒன்றுபட்ட வாழ்வின் மேன்மையை வெளிப்படுத்தி தந்தையிடம் இயேசு மன்றாடினார். “நாம் ஒன்றாக இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை அவர்களுக்கு அளித்தேன்”
(யோவா 17:22). இந்த மாட்சிதான் ஒவ்வொருவரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி. இறைவார்த்தையே நம் ஆற்றல். எழுச்சியுடன் பணியாற்ற
நம்மைத் தூண்டும் உந்துசக்தி. உயர்ந்த இலக்கினை நோக்கி நம்மை வழிநடத்தும் ஒரே வழி. நமது வாழ்வும் உன்னத வழியும் உண்மையுமான இயேசு கூறுகிறார்: “தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு அண்மையில் உள்ளது”
(லூக் 21:28).
இயேசுவின்
வார்த்தை ஒளிமயமானது. நம்மில் செயலாற்றும் வல்லமை கொண்டது. புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்”
\"(பிலி 3:13). வல்லமையுடன் புரியும் பணி நூறு மடங்குப் பலன் தருவது உறுதி. ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் சவால் நிறைந்த செயல்களும் நம்மை ஒளியாக ஒளிரச்செய்யும். இந்த உண்மையை என் வாழ்வில் நிறைவேற்ற அருள்கூர்ந்த ஆண்டவரின் வியத்தகு செயல்களை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
2000-ஆம் ஆண்டு
தொடங்கி, ஆண்டவரின் மேன்மை மிக்கச் செயலை, அதிசயங்களை அனுபவித்த காலம். சாம்பியா நாட்டின் தலைநகரான லுசாகாவில் அமலவை சகோதரிகளாகிய நாங்கள் மறைமாநில மேய்ப்புப்பணி நிலையத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்தோம். அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த இயேசு சபைக்குரு ஒருவர் “இந்தப் பணி செய்யவா இங்கு வந்தீர்கள்?” என்று சவால் நிறைந்த வார்த்தைகளைக் கூறினார். இந்தச் சவாலை ஏற்று இறையுதவியை நாடினோம். அதே நேரத்தில் அந்த மறைமாநிலத்தின் பேராயர் மேதகு மெடார்டோ மசோம்ப்வே அவர்கள், யூபிலி ஆண்டின் நினைவாக ஆதரவற்ற அனாதைகளாக உள்ள சிறுமிகளுக்கு ஓர் இல்லம் அமைத்து அவர்களைப் பராமரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். நாங்கள் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டோம். இறைவனுடைய பராமரிப்பும் பாதுகாப்பும் மிகத் துரிதமாகச் செயல்பட்டது. மர்ஃபி என்ற ஆங்கிலேயர் உதவிக்கரம் நீட்டினார். தூதரகங்களைச் சந்தித்து உதவிபெற உறுதுணையாய் இருந்தார். நார்வே தூதரகம் ஐந்து வீடுகளை அமைக்க உடனே நிதிஉதவி செய்தது. ஓர் இல்லத்தில் 10 சிறுமிகள் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 5 தாய்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்குத் தேவையான கோழிப்பண்ணை அமைக்க கனடா தூதரகம் உதவியதும், காய்கறித் தோட்டம், மீன் குளம் போன்றவற்றை அமைக்க இந்தியத் தூதரகம் உதவியது.
அனைத்தும்
மிக விரைவிலேயே தயாராகின. பங்குகளைத் தொடர்புகொண்டு சிறுமிகளை இல்லத்திற்கு அழைத்து வந்தோம். இப்படி ஓர் இல்லம் உருவாகி உள்ளதை அறிந்த மக்கள் மிகத் தாராளமாகப் பொருளுதவியும் நிதியுதவியும் அளித்து மகிழ்ந்தனர். “ஆண்டவரே, உம்மைப் போற்றி நன்றிகூறுகிறோம்; ஏனெனில் நீர் நல்லவர்; உமது பேரன்பு என்றென்றும் நிலையாய் உள்ளது” என்று நன்றிப்பா இசைத்து மகிழ்ந்து ஆண்ட வரிடம் சரணடைகின்றோம். இத்தகைய வகையில் தான், நம்மைத் தம் சீடர்களாக, உலகின் ஒளியாக உருமாற்றி, தந்தையை மாட்சிப்படுத்தும் வகையில், இயேசு ஆண்டவர் நம்மோடு இருந்து செயலாற்றுகின்றார். இறையாட்சிக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்ட நாம் வாழ்வைப் பற்றிய வார்த்தையை உலகில் ஏந்தி நின்று உலகில் சுடர்விடும் ஒளியாகத் திகழ்வோம்.