புதுதில்லி மாநகராட்சி ஆணையம் (NDNC), நடப்பு கல்வி ஆண்டின் (2025-26) சிறந்த ஆசிரியருக்கான விருதை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை குளோரி மேரி (வயது 53) என்பவருக்கு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. ஆசிரியர் குளோரி தனது பள்ளிப் படிப்பை விருதுநகரில் PKN பெண்கள் பள்ளியிலும், இளங்கலைப் பட்டத்தை (B.Sc.,) V.V.V. கல்லூரியிலும், ஆசிரியர் பயிற்சியை (B.Ed.,) மதுரை, காமராசர் பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்தவர். 1995-இல் தில்லியில் உள்ள IIT-இல் பணியாற்றிய இவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1999 முதல் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றினார். ஆசிரியர் பணியில் அர்ப்பணமும் ஆர்வமும் நிறைந்தவராக விளங்கிய இவர், தொடர்ந்து மாணவர்களின் பல்வகைக் கல்வித் திறனை வளர்த்து வந்தார். மாநகராட்சிப் பள்ளிகளில் அதிகமான மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றார். மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி கொடுத்து NMMS தேர்வு எழுதச் சொல்லி பலருக்கு அரசு உதவித் தொகை பெறத் துணைநின்றவர்.
விருது
பெற்றது குறித்து இவர் கூறும்போது, “நான் நேர்மையாகவும் கடவுள் பக்தி உள்ளவராகவும் எனது ஆசிரியப் பணியைச் செய்தேன். உடல்நலம் குன்றிய நிலையிலும் கடமையில் தவறியதில்லை. நான் இன்னும் உயிருடனும் நிறைவுடனும் வாழ்கிறேன் என்றால், அதற்கு என் பள்ளிக் குழந்தைகளின் அன்பும் பாசமும் பரிவும்தான் காரணம். இந்த விருதைக் கேட்டு
நான் விண்ணப்பிக்கவில்லை. மாறாக, என் தலைமையாசிரியரும் சக ஆசிரியர்களும் விண்ணப்பித்து
இதை எனக்கு வழங்கியுள்ளார்கள்” என்றார்.
புதுதில்லி தமிழ்க் கிறித்தவக் கத்தோலிக்க அமைப்பின் சார்பாக அருள்முனைவர் சிரில் சே.ச. அவர்கள்
நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.