news-details
ஞாயிறு தோழன்
அக்டோபர் 05, 2025, ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) அப 1:2-3; 2:2-4; 2திமொ 1:6-8,13-14; லூக் 17:5-10

திருப்பலி முன்னுரை

நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறி  நம்முடன் பயணிக்கும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்பிக்கை மட்டுமே இந்த உலகத்தையும் உள்ளங்களையும் உயிர்களையும்  நம்மையும்  நகர்த்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை நமது வாழ்வின் அடித்தளமாக இருக்கும்போதுதான் ஆண்டவரையே அனுபவிக்க முடியும். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்கள், நம்பிக்கையோடு அவரது பெயரை உச்சரித்தவர்கள், இயேசு குணம் கொடுப்பார் என்று நம்பியவர்கள், ‘இயேசுவே நீரே வாழும் கடவுளின் மகன்என்று சரணடைந்தவர்கள் அனைவருக்கும் இயேசு வாழ்வு கொடுத்தார். ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தேடிச்சென்று சுகம் கொடுத்து நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம்பிக்கை இருந்தால்தான் கடவுளின் வல்லமையை உணரமுடியும்; நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆண்டவரின் அளவில்லாத அன்பைச் சுவைக்க முடியும். ஆழமான நம்பிக்கை இருந்தால் நம்மாலும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடம் கேட்டது போன்று நாமும்ஆண்டவரே! எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்என்று கேட்போம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ச்சி அடையாது வாழ வரம் வேண்டுவோம். இமைப்பொழுதும் விலகாமல் நம்மோடு வாழும் இயேசுவோடு நாம் வாழ்வோம். நமது தாய் அன்னை மரியாவைப் போன்று ஆண்டவர்மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக்கு, பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். அபக்கூக்கின் இக்கேள்விக்குக் கடவுள், தாம் குறித்த நேரத்தில் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதாகவும், நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையால் வாழ்வர் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் நமக்கு தமது வல்லமையையும் அருளடையாளங்களையும் கொடுத்து வழிநடத்தி வருகின்றார். நாம் சோர்ந்து போகும் நேரங்களில் தூய ஆவியார் வழியாக நம்மைத் திடப்படுத்துகின்றார். நம்பிக்கை வாழ்வில் சோர்வு ஏற்படும்போது, தம்முடைய ஆற்றல் மிக்க வார்த்தையால் நமக்கு நலம் தருகின்றார். நம்மைக் காக்கும் ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்தவும், நம்பிக்கை கொண்டு உறுதியோடு உழைக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது உடனிருப்பை அனுபவித்து வாழும் நாங்கள், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகிற்கு ஒளியான ஆண்டவரே! கல்வி என்ற அறிவொளியை இவ்வுலகில் ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நற்சுகம் தந்து வழிநடத்தவும், கருத்தாய் பணிசெய்வதற்கான விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்;.

4. நலம் கொடுக்கும் நல்லவரான ஆண்டவரே! எம் நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.