அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே!
2025 யூபிலி ஆண்டின்
மையச்செய்தி ‘எதிர்நோக்கு’ என்பதாகும்.
இவ்வாண்டின் தூதுரைப்பணி ஞாயிறுக்கு நான் தேர்ந்துள்ள செயல்நோக்கமும் அதுவே. ‘மக்களிடையே எதிர்நோக்கின் தூதுவர்களாக...… நற்செய்திப் பணியாளர்களாக...’
கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளைப் பின்பற்றி எதிர்நோக்கின் தூதுவர்களாக, அதனைக் கட்டியெழுப்புகிறவர்களாக, ஒவ்வொரு கிறித்தவரும், திருமுழுக்குப் பெற்ற குழுமமாகிற திரு அவையும் பெற்றுள்ள அழைப்பை இது நினைவூட்டுகிறது. இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறும் அருளின் விளைவாக இது சாத்தியமாகும். “அவர்தம் பேரிரக்கத்தின்படி, இறந்தோரிடமிருந்து எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு, குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்” (1பேது
1:3-4).
நம்
கிறித்தவத் தூதுரைப்பணியின் அடையாளத்துடன் தொடர்புடைய சில முக்கியக் கூறுகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தெளிவற்று, அச்சமூட்டும் முறையில் இவ்வுலகைக் கவ்வி நிற்கும் ஒளிமறைவுப் பகுதியில் ஒளிர்ந்து, மக்களின் எதிர்நோக்கிற்குப் புத்துயிரூட்ட திரு அவை பணிக்கப்பட்டுள்ளது. புதிய நற்செய்தி அறிவிக்கும் பணிச் செயல்பாடுகளின் காலத்தைப் பற்றியெரியும் ஊக்கத்துடன் தொடங்கித் தொடர, இறையாவியாரின் தூண்டுதலுக்கு நம்மை உட்படுத்திட இக்கூறுகள் உதவும்.
1. நமது எதிர்நோக்காகிற கிறிஸ்துவின்
அடிச்
சுவடுகளில்...…
கி.பி. 2000-ஆம் புனித ஆண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, மூன்றாம் நூற்றாண்டில் கொண்டாடப்பெறும் இந்தச் சாதாரண யூபிலி ஆண்டில், நம் பார்வையைக் கிறிஸ்துவின்மீது பதியவைப்போம். ஏனெனில், “அவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்”
(எபி 13:8). வரலாற்றின் மையம். வரலாற்றில் என்றும் பிரசன்னமாயிருக்கிற அவர் ‘இன்று’ மறைநூல் வாக்கு நிறைவேறியதாக நாசரேத்துத் தொழுகைக்கூடத்தில் முழங்குகிறார். இவ்வாறு மனித இனம் முழுமைக்கும் இறையாட்சியின் நற்செய்தியை முழக்கமிட்டு அறிவித்து, ‘ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை’ தொடங்கிவைக்க தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பெற்று, இறைத்தந்தையால் அனுப்பிவைக்கப்பெற்றவர் ‘தாமே’ என்பதை வெளிப்படுத்துகிறார் (லூக்கா 4:16-21).
உலகம்
முடிவுவரை நீடிக்கும் ‘இன்று’ என்ற இந்த மறைபொருளில் அனைவருக்கும் குறிப்பாக, ‘இறைவன் ஒருவரே தம் எதிர்நோக்கு’ என்று
நம்பியிருப்போருக்கு,
‘கிறிஸ்துவே மீட்பின் நிறைவு’ என்ற உண்மை நீடிக்கிறது. இவ்வுலகில் வாழ்ந்தபோது, “அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து, அனைவரையும் குணமாக்கி, எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்”
(திப 10:38). இவ்வாறு தேவையில் உழல்வோர் அனைவருக்கும், அவர்கள் இறைவனில் கொண்டிருந்த எதிர்நோக்கை மீட்டுத் தந்தார். கெத்சமெனித் தோட்ட மனப்போராட்டத்தின் கடுந்துயர், சிலுவையில் தொங்கியபோது அனுபவித்த தாங்கொணா வேதனை ஆகிய மனத்தளர்ச்சிக்கும் நம்பிக்கை இழப்பிற்கும் இட்டுச்செல்லும் நெருக்கடியான தருணங்களில்கூட, பாவம் தவிர பிற மனித வலுவின்மைகள் அனைத்தையும் அவர் அனுபவித்தார். மனுக்குலத்தை மீட்கும் இறைத்திட்டத்தை, கீழ்ப்படிதலுடன் நம்பி, அனைத்தையும் இறைத்தந்தையிடம் ஒப்படைத்தார். இறைவன் வாக்களிக்கும் வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டம் அது (எரே 29:11). இவ்வாறு அவர் எதிர்நோக்கின் இறைத்தூதரானார். இறைவன் தந்த தூதுரைப் பணியைத் தீவிர சோதனைகள் நடுவிலும், காலங் காலமாகச் செயல்படுத்திவரும் அனைவருக்கும் சிறந்த மாதிரியானார்.
தமது
மறைமுக உடனிருப்பை உறுதிசெய்து, எல்லா மக்களினத்தார்க்கும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பிய தம் சீடர்கள் வழியாக, மானிடர் அனைவருக்குமான எதிர்நோக்கின் திருப்பணியை ஆண்டவர் இயேசு தொடர்கிறார். ஏழையர், பாதிக்கப்பட்டோர், மனத்தளர்ச்சியுற்றோர், ஒடுக்கப்பட்டோர், நசுக்கப்பட்டோர் ஆகியோர் பக்கம் சாய்ந்து நின்று, அவர்களைத் தூக்கி நிறுத்தி, அவர்களுக்கு ‘ஆறுதல்’ என்னும் மருந்திட்டு, ‘எதிர்நோக்கு’ எனும்
குணமளிக்கும் எண்ணெய் ஊற்றிக் கண்காணிக்கிறார்.
கிறிஸ்துவின்
தூதுரைப் பணியைத் தொடர்ந்தாற்றும் சீடர்களின் குழுமமாகிய திரு அவையும், தம் ஆண்டவரும் தலைவருமான அவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் காட்டிய அதே பணியார்வத்துடன் தன்னை அர்ப்பணித்து, அனைத்து நாடுகளிலும் அந்தத் தூதுரைப் பணியைத் தொடர்கிறது. சமய வதைகள், கொடுந்துன்பங்கள், இன்னல்கள், தம் உறுப்பினர்களின் மனித வலுவின்மையால் விளையும் குறைபாடுகள் மற்றும் தோல்விகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலையிலும் கிறிஸ்துவின் அன்பினால் தொடர்ந்து உந்தப்பட்டு, அவருடன் இணைந்து தம் தூதுரைப்பணியில் பயணிக்கிறது.
இப்பயணத்தில்
அவரைப் போன்று, அவருடன் துன்புறும் மனித இனத்தின் வேண்டுகோளுக்குச் செவிமடுக்க வேண்டும். மீட்பிற்காக உறுதியான எதிர்நோக்கோடு காத்திருக்கும் ஒவ்வொரு படைப்புயிரும் எழுப்பும் ஆழ்ந்த பெருமூச்சின் ஒலியைக் கவனமுடன் செவிமடுத்துக் கேட்க வேண்டும். இத்தகைய “நகர்வற்ற நிலையை விட்டுவிட்ட, தன் ஆண்டவருடன் உலகின் வீதிகளில் நடமாடுகிற, உயிரோட்டத்துடன் தூதுரைப்பணி செய்யும் திரு அவைதான் உண்மைத் திரு அவை”
(ஆயர் மாமன்ற நிறைவுத் திருப்பலியில் மறையுரை, 27.10.2024). இத்தகைய திரு அவையைத்தான், தம் அடிச்சுவடுகளை எப்பொழுதும் என்றென்றும் பின்பற்ற அதன் தலையாகிய கிறிஸ்து அழைக்கிறார்.
நம்
வாழ்விடங்களில், அவற்றின் சூழ்நிலைகளில் அவருடன், அவரில், அனைவருக்கும் எதிர்நோக்கின் அடையாளங்களாகவும் தூதுவர்களாகவும் ஆவதற்கு எழுச்சியூட்டப் பெறுவோமாக! திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் தூதுரைப் பணியாளர்கள் என்ற முறையில் அவர் வாக்களித்த எதிர்நோக்கு உலகெங்கும் ஒளிர்ந்திடச் செய்வோமாக!
2. கிறித்தவர்கள்: மக்களிடையே எதிர்நோக்கை
எடுத்துச்சென்று
அவர்களில்
அதனைக்
கட்டியெழுப்புபவர்கள்...
கிறிஸ்து
ஆண்டவரைப் பின்பற்றும் கிறித்தவர்கள், தாங்கள் வாழும் அன்றாடச் சூழமைவுகளில், எதிர்நோக்கின் நற்செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் எதிர்நோக்கை
மக்களிடையே எடுத்துச் சென்று, அவர்களில் அதனைக்
கட்டியெழுப்புகிறார்கள்.
“மகிழ்வும் எதிர்நோக்கும் இன்றைய மனிதரின் வாழ்வில் குறிப்பாக, ஏழையர் மற்றும் துன்புறுவோர் அனைவரின் வாழ்விலும் உள்ளன. இம்மனிதரின் மகிழ்வும்-எதிர்நோக்கும், ஏக்கமும்-கவலையும் கிறித்தவர்களுக்கும் முற்றிலும் உரியனவே; கிறிஸ்துவைப் பின்பற்றும் இவர்களின் இதயங்களில் உண்மையான மனிதக்கூறுகள் யாவும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன” (இன்றைய
உலகில் திருச்சபை, எண் 1).
கிறித்தவக்
குழுமங்களின் ஒவ்வொரு காலகட்ட உணர்வை வெளிப்படுத்தும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் புகழ்பெற்ற இந்த அறிக்கை, திரு அவையின் உறுப்பினர்களைத் தூண்டியெழுப்பி, அனைத்துச் சகோதரர் - சகோதரிகளோடும் இணைந்து பயணிக்க நமக்கு உதவுகிறது.
(தொடரும்)