news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 28 -ஆம் ஞாயிறு, (மூன்றாம் ஆண்டு) (12-10-2025) 2அர 5:14-17; 2திமொ 2:8-13; லூக் 17:11-19

திருப்பலி முன்னுரை

நன்றிகூறும் நல்ல மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. “கடவுளுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம்; மற்றொன்று நன்றி நிறைந்த இதயம்என்கின்றார் வால்ட்சன். இறைவன் நேரிடையாகவும், பல மனிதர்கள் வழியாகவும் பல அருள்செல்வங்களையும் பொருள் செல்வங்களையும் வாரி வழங்குகின்றார். இறைவனிடமிருந்து நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காகவும், குடும்பம் மற்றும் சமூக உறவுகளுக்காகவும், அன்றாடம் நாம் உயிர்வாழ அனைத்தையும் தானமாகக் கொடுக்கும் இந்த உலகிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்காகவும், உறவுகளின் உடனிருப்பிற்காகவும், தக்க நேரத்தில் உதவி செய்து நம்மைத் தாங்கிப்பிடித்த மாமனிதர்களுக்காகவும் நன்றி கூறுவோம். நன்றி என்ற உன்னதமான வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தும் போது இந்த வாழ்க்கையின் அற்புதம் புரியும்; மகத்துவம் தெரியும். ஆண்டவரைத் தேடிவந்து முகங்குப்புற விழுந்து நன்றி கூறிய சமாரியரைப் போன்று இதயத்தால் நன்றி கூறுவோம். இவ்வுலகில் அனுதினமும் எவ்விதக் குறையுமின்றிக் காத்து வருகின்ற இறைவனுக்கு நன்றி கூறி, நன்றி நிறைந்த இதயத்தோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சிரியா நாட்டுப் படைத்தளபதியான நாமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது  தனது நாடான சிரியாவைக் கடந்து, தன் நாட்டின் எல்லையைக் கடந்து, தனது எதிரி நாடான இஸ்ரயேலின் கடவுளையும் இறைவாக்கினர் எலிசாவை அணுக முடிந்தது; ஆண்டவரின் வல்லமையை அனுபவிக்க முடிந்தது. தன்னுடைய நிலையிலிருந்து இறங்கியதால் குணம்பெற்ற நாமானைப் போன்று, நாமும்நான்என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து உடல்நலமும் மனநலனும் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆன்மிக வாழ்விலும் அகவாழ்விலும் அனுதின வாழ்விலும் முதிர்ச்சி பெற்ற மனிதர்களால் மட்டுமே வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்த முடியும். ஆண்டவரை நம்பி நாம் தொடங்கும் அனைத்திலும் வெற்றி காண்போம். தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு கொடுத்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டும், அவரது வார்த்தையில் பற்றுறுதி கொண்டும் பயணிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழி நடத்த நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் வழியாக ஒவ்வொரு நாளும் உமது அன்பையும் பாசத்தையும் அனுபவித்து, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உமக்கு நன்றி கூறும் நல்ல மக்களாக நாங்கள் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! அழகான இந்த உலகில் ஆனந்தமாய் நாங்கள் வாழ நீர் எமக்குக் கொடுத்த  இந்த வாழ்வுக்காகவும், நாங்கள் அனைவரும் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறும் நல்ல மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! நாங்கள் கேட்பது கிடைக்காதபோது மனம் சோர்ந்து போகாது, எங்கள் தேவையறிந்து சரியான நேரத்தில் கொடுப்பீர் என்ற நம்பிக்கையில் நாளும் வளரவும், உள்ள உறுதியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பத்துத் தொழுநோயாளர்களுக்குக் குணம் கொடுத்த ஆண்டவரே! அச்சம் தரும் அனைத்துவிதமான நோய்களினின்று எம்மையும் எமது குடும்பத்தையும் எம் பங்கிலுள்ள மக்களையும் இவ்வுல மக்களையும்  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.