உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், கலாச்சாரமும் பண்பாடும், இந்த வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் நலிந்து கொண்டிருக்கின்றது. கரடுமுரடாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகில், கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் அர்த்தம் பெறுவதில்லை. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னிறுத்துகின்ற கொண்டாட்டங்கள் இன்று கடமைக்காகக் கொண்டாடப்படும் வெற்றுத் திருவிழாக்களாக மாறிவிட்டன.
இதில்,
தீபாவளிப் பெருவிழாவும் விதிவிலக்கல்ல. தீபாவளிப் பெருவிழா ஒரு மகிழ்ச்சியின் விழா மற்றும் அன்பின் விழா. இது பாரம்பரியமாக இந்து மதத்தைச் சார்ந்த மக்களால் கொண்டாடப்பட்டாலும், இன்று இப்பெருவிழா சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து ஒவ்வோர் இந்தியராலும் கொண்டாடப்படுகிறது. இப்பெருவிழா மக்களோடு மக்களாக எல்லாக் கலாச்சாரங்களிலும் ஊறிவிட்டது. கத்தோலிக்கத் திரு அவையும் கூட தீபாவளி என்னும் இந்த ஒளித் திருவிழாவைக் கிறித்தவத்தின் கடவுளான இயேசு கிறிஸ்துவோடு இணைத்து ‘இயேசு கிறிஸ்து உலகின் ஒளி’ என்னும் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
தீபாவளிப்
பெருவிழா என்பது இராவணனை வீழ்த்தி இராமர் அயோத்திக்குத் திரும்பிய தினமாகவும், நரகாசுரனை வென்று கிருஷ்ண பெருமான் உலகிற்கு மகிழ்ச்சியைப் பரிசளித்த தினமாகவும், விக்ரமாதித்ய மன்னர் முடிசூட்டப்பட்டதன் தினமாகவும் கொண்டாடப்பட்டாலும், இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம், எப்போதும் நன்மையே வெல்லும் மற்றும் எப்போதும் இருளுக்கு ஒளியும்-பொய்மைக்கு மெய்மையும் அடிபணியாது என்பதாகும்.
தீபாவளிப்
பெருவிழா ஒருநாள் கொண்டாட்டம் அல்ல; மாறாக, தீபாவளிப் பெருவிழா ஐந்து தினங்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் ஒரு பெருவிழா!
‘தன்தேரஸ்’
என்ற பெயரில் முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் முன்னிறுத்தி தொடங்குகின்றது. இந்தத் திருநாளில் ஆரோக்கியத்திற்குச் சான்றாக ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்றப்படுகின்றது. செல்வத்திற்குச் சான்றாக மக்கள் இன்றைய நாளில் அணிகலன்கள் முதலிய பொருள்களை வாங்குகிறார்கள்.
அசுரன்
நரகாசுரன் அழிக்கப்பட்ட தினம் எண்ணெய் குளியலோடு தீபமேற்றி நரக சதுர்த்தசி என்னும் பெயரில் இரண்டாம் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
மூன்றாம்
நாளில் முக்கியத் திருநாளான தீபாவளிப் பெருவிழா வீடுகளில் விளக்கேற்றி இனிப்புகள் பரிமாறி பட்டாசுகளோடு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணபெருமான்
கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைப் பாதுகாத்த நாள் அறுசுவை உணவோடு நான்காம் நாள் கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் என்னும் சகோதர-சகோதரிகள் மற்றும் இதர உறவுகளைச் சிறப்பிக்கும் தினமாக ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தோடு இப்பெருவிழா முடிவடைகின்றது. இந்த விஞ்ஞான உலகில் சொத்து முதல் சொந்தங்கள் வரை அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற அருமையான ஒரு திருவிழாவைச் சொத்தை விற்று, சொந்தங்களைத் தொலைத்து வெறும் வெற்றுச்சடங்காக கொண்டாடுவது நாகரிக உலகின் அநாகரிகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
மகிழ்ச்சியின்
பிறப்பிடமாக இருக்கவேண்டிய தீபாவளிப் பெருவிழா, இன்று தீரா வலிகளை வருவிப்பதாக மாறிவிட்டது. ஐந்து தினங்களில் பெயர்கள்தான் மாறவில்லை. ஆனால், அதன் விழுமியங்கள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன. செல்வத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தைச் சேர்க்கின்ற பெயரில் அடமான கடன்களையும், உத்தரவாத கடன்களையும் சேர்த்து விடுகின்றது. சமவட்டித் தவணைகள் (EMI) கூட
இன்று பல குடும்பங்களின் மன
அழுத்த அசலாக மாறிக் கொண்டிருக்கின்றது. புதுப்பொருள்களோடு கடனும் மன அழுத்தமும் அதன்
சலுகைகளாக நம்மோடு சேர்ந்துகொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
நீர்நிலைகளில்
குளிக்கின்ற ஆரவாரமான ஆனந்த எண்ணெய் குளியல்கள் இன்று குளியல் அறைகளோடு முடங்கிவிட்டன. இனிப்புகள் செய்வதற்கான மூலப்பொருள்களையே விளைவிக்கின்ற நம்முடைய சமூகம், இன்று இனிப்பு பலகாரங்களையே இணையதளத்தில் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பாரம்பரிய உணவுகள் இன்று பார்ப்பதற்கே அரிதாகிவிட்டன. ஆரோக்கியமாக வீட்டில் சமைக்கப்பட்டு வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகள், இன்று ஆடம்பரமான கடைகளில் ஆரோக்கியமின்றிச் சமைக்கப்பட்டு இலையின் வடிவில் இருக்கின்ற நெகிழிக்காகிதங்களில் பரிமாறப்படுவது வேதனையைத் தருகின்றது. குடும்பங்களில் உறவினர்கள் ஒன்றுகூடி உண்டு களித்து, அன்போடு பகிர்கின்ற உறவுப் பரிமாற்றம் இன்று முகநூல் இணைய குறுஞ்செய்திகளோடு முடிந்துவிடுகின்றன.
முன்னேற்றம்
என்ற பெயரில் நல்லவற்றைத் தொலைத்துவிட்டு நாளைய சமூகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைய தீபாவளிப் பெருவிழா அர்த்தமுள்ள ஒரு விழாவாக இருக்க வேண்டும் என்றால், அது எதற்காகக் கொண்டாடப்படுகின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து, அதை ஓர் ஆடம்பரத் திருவிழாவாக மட்டுமின்றி, அதை ஒரு கலாச்சாரப் பண்பாட்டின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது சாலச்சிறந்தது.
அறிவியல்
விஞ்ஞான வளர்ச்சி, மூடநம்பிக்கைகளை அழித்து, மனிதனின் வாழ்க்கைமுறையை மேம்படுத்துகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அதே அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கலாச்சாரப் பண்பாடுகளைச் சீரழிக்கின்ற பொழுது, அதைத் தகுந்த முறையில் கையாண்டு நம்முடைய கலாச்சாரப் பண்பாடுகளை அறிவியல் வளர்ச்சியோடு மேம்படுத்தி நம்முடைய வாழ்க்கையைச் சீரமைப்பது நம்முடைய கடமையாக இருக்கின்றது.
எனவே,
இந்தத் தீபாவளி பெருவிழா கலாச்சாரப் பண்பாடுகளைச் சிதறடித்து நம்முடைய வாழ்வில் உடல் மற்றும் உள்ளத்திற்குத் தீராவலி தருகின்ற, கடமைக்குக் கொண்டாடப்படும் விழாவாக இல்லாமல், நம்முடைய வாழ்வில் ஒளி ஏற்றுகின்ற தீப ஒளியாகிய இறைவனின் ஆசிரையும், உறவுகளின் அன்பையும் அள்ளித் தருகின்ற உன்னதத் திருவிழாவாக அமைய ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். தீபாவளி ஒளித் திருவிழா நம்முடைய வாழ்வில் ஒளியேற்றுவதாக!