news-details
ஆன்மிகம்
பிறந்தவன் இறக்கின்றான்! இறந்தவன் பிறக்கின்றான்! (நீங்கா நினைவுகள் – 6)

இந்தோனேசியாவில் உள்ள டிரோஜா என்னும் பழங்குடியினர், பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி அலங்காரம் செய்து, தங்கள் வீட்டில் வைத்து வாழ்ந்து வருகின்றனர். இறப்பு என்பது, வாழ்க்கையில் நீண்டதொரு பயணம் என்று  நம்புகின்றனர். சிதிலமடைந்த உடல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் சீரமைத்து, புத்தாடை உடுத்தி அழகுபடுத்தி, முக்கியமான விழாக்களின்போது உணவும் படைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் துணை இறக்கும்வரை இல்லங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றனர்.

இறந்தவர்களின் உடல்களுடன் அவ்வப்போது குடும்பமாக உரையாடி தங்கள் உறவைப் புதுப்பித்துக்கொள்கின்றனர். தங்கள் குடும்பத்தில் புதிதாகப் பிறந்தவர்களிடம் அறிமுகம் செய்து, குடும்பத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் எடுத்துக்கூறி, புதிய தலைமுறையினரின் வாழ்வுக்குக் கலங்கரை தீபமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இறந்தோரின் ஆவி, அவரது உடல் ஆடம்பரத்துடன் மறுவாழ்வுக்காகப் புதைக்கப்படும்வரை அவர்களை வழிநடத்துவதாகவும் நம்புகின்றனர். டிரோஜா பழங்குடி மக்களின் சிந்தனைப்படி இறப்பு இழப்புமல்ல; முடிவுமல்ல! நிறைவான, நிலைவாழ்வுக்கான வழியாகும்.

மரணத்தைப் பற்றி வெகுஜன மக்களின் பார்வை: மனித வாழ்வின் நிலையாமையை ஒரு பழமொழி இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகிறது:

கண் திறந்தால் பிறப்பு!

கண் மூடினால் இறப்பு!

கண்ணிமைப் பொழுதுதான் வாழ்வு!’

இரத்தினச் சுருக்கமாக, கருவறையிலிருந்து இறங்கி கல்லறை நோக்கிப் பயணிப்பதுதான் வாழ்க்கை. நம் வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போன்றது; முடியப்போகும் பயணத்தைப் போன்றது; நிழலைப்போல மறைவது. நமக்கும் ஒருநாள் இல்லாத மறுநாள் வரும். ஒவ்வோர் இறப்பு ஊர்வலமும் நமது இறுதி ஊர்வலத்தின் ஒத்திகை என்று எத்தனையோ வகைகளில் விளக்கினாலும், அதை ஏற்றுக்கொள்ள நமது மனது மறுக்கின்றது.

மரணம் மற்றவர்களுக்குத்தானே ஒழிய, நானோ சாகா வரத்துடன் வந்திருக்கிறேன்அல்லதுஇப்போது எனக்கு எதுவும் நடக்காதுஎன்ற மனநிலையில்தான் நாம் வாழ்கின்றோம். வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட தூக்கத்தில் நாம் காண்கிற தொடர் கனவு. மரணம்தான் அதன் விளிம்பு என்கிறது ஜென் தத்துவம். அதனால் பயமெல்லாம் தேவையில்லை. பிறக்கும்போதே மரணம் நிச்சயம் என்பது எழுதப்படாத நியதியாகும். எனவேதான்உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு’… என்கிறார் திருவள்ளுவர்.

எப்போதோ பயின்றது

வாழ்க்கை, மரணத்தைப் பார்த்துக் கேட்டதாம்: ‘என்னை மக்கள் ஏன் நேசிக்கிறார்கள்? உன்னை ஏன் வெறுக்கிறார்கள்?’…அதற்கு மரணம் சொன்னதாம்: ‘ஏனெனில்,‘நீ ஓர் அழகான பொய்; நான் ஒரு கசப்பான உண்மை.’

எவ்வித அச்சமுமின்றி ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் வானில் பறக்கும் மனிதன், ஆறடி ஆழ்குழியைக் கண்டதும் அஞ்சுகிறான். மனித வாழ்வு நிலையற்றது என்று தெரிந்திருந்தும் ஓய்வின்றி ஓடியோடி உழைத்துச் செல்வம் சேர்க்கின்றான். ஏக்கர் ஏக்கராக இடம் வாங்கப்போகிறேன் என்று எண்ணி மகிழ்ந்தவனைப் பார்த்துச் சுடுகாடு சிரித்துக்கொண்டு, ‘உன்னையே வாங்கப்போவது நான்தானே நண்பா!’… என்றதாம். ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா’… என்பது நிதர்சனமான உண்மை.

ஒருவேளை மருத்துவத்தின் அபார வளர்ச்சியால் வாழ்க்கையைக் கொஞ்ச காலம் நீடித்து இறப்பை ஒத்திப்போடலாமே ஒழிய, அதை நாம் தவிர்க்க முடியாது. இதற்காக மரணத்தைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. வாழ்பவர்களைவிட இம்மண்ணில் வாழ்ந்து இறந்தவர்கள்தாம் அதிகம். ஒருநாள்தான் தனது ஆயுள் என்பதால், ஈசல் சோகத்திலும் இருப்பதில்லை. நூறாண்டு காலம் என்பதால் ஆமை தலைக்கனத்துடன் திரிவதுமில்லை.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்ரடீஸ், தான் விஷம் வைத்துக் கொல்லப்படுவதற்கு முன்  தன்னைக் காப்பாற்ற வந்த நண்பன் கிரீட்டோவிடம், “மரணத்தைப் பற்றிக் கவலைப்படாதே; நீ இருக்கும் வரை மரணம் வருவதில்லை; அது வரும்போது நீயே இருக்கப்போவதில்லை. பிறகு ஏன் கவலை? நான் இறந்துவிடப் போகிறேன் என்று எவரும் எனக்காகக் கவலைப்பட வேண்டாம். என் உடலை எரிப்பதா? புதைப்பதா? என்ற குழப்பமும் வேண்டாம். அது வெறும் உணர்வற்ற சடலம்தானே! அதை என்ன செய்தால் என்ன?…” என்று சாக்ரடீஸ் கூறுகின்றார்.

ஓர் உலகப் புகழ்பெற்ற லெபனான் நாட்டு பன்முகத்திறமை வாய்ந்த எழுத்தாளர் கலீல் ஹிப்ரான், “வாழ்க்கையைச் சரியாக வாழத் தெரிந்தவர்கள் மரணத்தையும் சரியாகப் பார்க்கிறார்கள். பகலில் பார்க்கத் தெரியாத ஆந்தைக்கு ஒளியின் உன்னதம் எப்படிப் புரியாதோ, அப்படி வாழ்வையே சரியாக வாழாதவர்களுக்கு மரணத்தின் உன்னதம் எப்படிப் புரியும்?” என்கிறார்.

எதிர்மாறாக, மரணத்தைப் பற்றிச் சிந்திக்கும்போது மோரி என்னும் எழுத்தாளர் மரணத்தின் அர்த்தத்தையும் அவசியத்தையும் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்: “நீ இறப்பதற்குக் கற்றுக் கொண்டாயானால், வாழ்வது எப்படி என்று கற்றுக் கொள்வாய். பிறப்பைப்போல இறப்பும் ஒன்றின் தொடக்கமும் தொடர்ச்சியும் ஆகும். உதிர்ந்த சருகு வழிவிட்ட இடத்திலிருந்து புதிய தளிர் துளிர்ப்பதுபோல, மரணத்திற்குப் பிறகும் மண்ணகத்தில் நமது வாழ்வு தொடர்கின்றது. இறப்பு என்னும் வாயிற்படி வழியாக, அது நிலைவாழ்வில் நிறைவு பெறுகிறது என்பதைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க முயலும்.”

மண்ணகத்தில் தொடர் வாழ்வுக்கான வித்துகள்

1) ஒவ்வொருவரும் இறைவனின் படைப்புத் திட்டத்தில், உடன் படைப்பாளியாகச் செயல்பட்டுக் குழந்தையை உருவாக்குகின்றோம். அதற்கு இரத்தமும் - சதையும், இருதயமும் - எலும்பும் கொண்ட உடலை மட்டும் கொடுப்பதில்லை; அக்குழந்தை பெற்றோரின் பண்புநலன்களையும் உள்வாங்கி, அவர்களின் நகலாக, வாரிசாகத் தோன்றுகின்றது. பெற்றோர் தங்கள் மறைவிற்குப் பிறகும் தங்கள் பண்புகள், குணநலன்களுடன் தங்கள் வாழ்வைத் தங்கள் வாரிசுகள் வழியாகத் தொடர்கின்றனர். பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும் என்கின்றது சீராக்கின் ஞானம் (11:28).

2) ஒருவன் பெயரளவுக்குக் கிறித்தவன் என்பதால், அவனுக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வந்துவிடப் போவதில்லை. நற்செய்தி விழுமியங்களின் அடிப்படையில் இயேசு கூறியது போன்று, அன்புக் கட்டளைக்குச் செயல் வடிவம் கொடுக்கும்போது (லூக் 10:27-28) நாம் இறந்தும் வாழ்கிறோம். இதற்கு அன்னை தெரசா சிறந்த எடுத்துக்காட் டாகும். அதேபோன்று, அண்மையில் மறைந்த ரத்தன் டாட்டா, தான் பெற்ற செல்வத்தை ஏழைகள், அனாதைகளுக்கு விட்டுச்சென்றதால், இறந்தும் இறவாது அவர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திரு அவையின் கண்ணோட்டத்தில்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ஆம் நாள் நம்மை விட்டுப் பிரிந்து சென்ற நமது பாசமிகு சொந்தங்களை எண்ணி அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்து மனித பலவீனத்திலே அவர்கள் செய்த தவறுகளைக் களைந்து, நித்தியப் பேரின் பத்தில் இறைவனுடன் இணைந்து வாழவேண்டுகிறோம். “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் பெருமூச்சுவிடுகிறோம்”… (2கொரி 5:12); “நமக்கோ விண்ணகமே தாய்நாடு (பிலி 3:12); “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. உயிர்நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்பது என் ஆவல் (பிலி 1:21-23).

ஒருவனின் பிறப்பைப் பற்றிக் கணிக்கத் தெரிந்த நமக்கு மரணம் எப்போது வரும் என்று தெரியாது. திருடனைப்போல இரவில் வரும் - மானிட மகனைச் சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் காண்கிறோம். மேலும், புனித யோவான் நற்செய்தியில், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வர் (யோவா 11:25) என்று இயேசு கூறுகிறார். தம் இறப்பின் வழியாக நமது சாவை அழித்து, தம் உயிர்ப்பினால் வாழ்வு அளிப்பவர் (2திமொ 1:10) இயேசு என இறந்தோருக்கான மன்றாட்டில் செபிக்கிறோம்.

எவ்வாறு பாம்பின் விஷத்தைக் கொண்டு விஷத்தை அகற்றுகின்றோமோ, முள்ளை முள்ளால் எடுக்கின்றோமோ அதுபோல கிறிஸ்துவின் மரணம் நம் மரணத்தை அழித்து, நமக்கு நிலைவாழ்வு அளிக்கின்றது. நிலைவாழ்வு என்பது இறைவனை ஏற்று அவருடன் வாழும் அன்புறவாகும். எனவே, “உன்னைப் படைத்தவரை நீ மறவாது, நீ முடிவற்ற ஓய்விற்குச் செல்லும் முன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பும் முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினைஎன்கிறார் சபை உரையாளர் (12:6-7).

முடிவில்லாத தண்டனை என்பது இறைவனின் அன்பைப் புறக்கணித்து, அவருடன் கொண்டிருந்த உறவைத் துண்டித்துக் கொள்வதாகும். இரும்பை அதன் துருவைத் தவிர, வேறு யாரும் அழிக்க இயலாது. அதுபோல, உனது எண்ணம், சிந்தனை, செயலைத் தவிர யாரும் உன்னை அழிக்க முடியாது.

வேறு வார்த்தைகளில் கூறினால், நரகம் என்பது இறைவன் இல்லாத இருளடைந்த உலகமே தவிர வேறில்லை. நிலைவாழ்வை நமதாக்கிக்கொள்வதும் புறக்கணிப்பதும் நம் கையில்தான் உள்ளது.

முடிவாக, இம்மண்ணக வாழ்வும் விண்ணக வாழ்வும் இரட்டைக் குழந்தைகளாகும். ‘நீ பிறந்ததும் அழுதாய் மகனே! ஆனால், பிரபஞ்சம் மகிழ்ந்தது. உன் வாழ்க்கையை நினைத்து மற்றவர் அழ, நீ மகிழ்வோடு சாதல் வேண்டும்’… என்கிறது ஒரு பழமொழி. ஒவ்வொருவருக்கும் இறைவன் பரிசாக வழங்கிய வாழ்வை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்து, நிலைவாழ்வை நோக்கிப் பயணிப்போம்.

ஓர் அருமையான பழமைவாய்ந்த கதையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்: ஒரு மகாராஜா ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் மங்கள இசையுடன் தனது ஈமச்சடங்குகளைத் தானே கொண்டாடுவார். கூடவேநான் இந்த நாளை முழுமையாக வாழ்வேன்என்று செபிப்பாராம்.

இளவரசன் தன் தந்தையிடம், ‘ஏனப்பா நீங்கள் இறக்கும் முன்னே ஒவ்வொரு நாளும் உங்கள் ஈமச்சடங்கை நீங்களே செய்கிறீகள்?’ என்று கேட்டானாம்.

அதற்கு அவர், ‘மகனே, இந்த மகாராஜா செய்வது என்னவென்றால், தன் நிலையாமையை நித்திய வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்கிறார். இதனால் ஒவ்வொரு நாளும் இன்றே அவரது இறுதி நாள் என்பதுபோல வாழ்வார்’… என்றாராம்.

என்ன நேயர்களே, இந்த மகாராஜாவைப்போல நாமும் வாழ்வோமென்றால், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் இறப்பு என்பதே இல்லை.