news-details
சிறப்புக்கட்டுரை
நம் தலைவிதி

மோடி அரசிடம் விலைபோன ஊடகங்களும், வருமானவரி ஏய்ப்பு, பங்குச்சந்தை முறைகேடுகள், அந்நியச் செலவாணி மோசடிகள் போன்ற பல விசாரணை வளையங்களுக்குள் சிக்கியிருக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், பிரதமர் மோடியின் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பை இரவு-பகல் பாராமல் இருபத்து நான்கு மணிநேரமும் போற்றிப் புகழ்ந்து, வாழ்த்தி வணங்கி, பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்து வருகின்றனர். பா... வின் ஒன்றிய அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும், கட்சியின் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் கடைவீதிகளுக்கும், பெருமளவில் மக்கள் கூடுகின்ற வணிக மையங்களுக்கும் நேரில் சென்று வணிகர்கள் புதிய வரிவிகிதங்களுக்கு ஏற்ப பொருள்களின் விலைகளைக் குறைத்துவிட்டார்களா? என்று சரிபார்ப்பதும், பொதுமக்களிடம்விலைகள் குறைந்திருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’ என்று நலன் விசாரிப்பது மட்டுமல்லாமல், அந்த விசாரணைகளை அப்படியே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

முந்தைய காங்கிரஸ் அரசு, கடுமையான வரிகளை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தி கசக்கிப் பிழிந்தது போலவும், மோடி எனும் அவதார புருஷர் ஆபத்பாந்தவனாக வந்து மக்களின் வரிச் சுமையைக் குறைத்ததுபோலவும் இவர்கள் போடுகின்ற திருட்டு நாடகத்தைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக்கொண்டு, தலையில் அடித்து, தனிமையில் இப்படியும் ஒரு மோசடி அரசு நடக்கிறதே என்று பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். ‘உலகப் புகழ்பெற்றநமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகப் பொருளாதார வரலாற்றில் இப்படியொரு வரிக்குறைப்பு நடந்ததே இல்லை என்றும், மோடியைத் தவிர வேறு யாராலும் இதனைச் சாதித்திருக்க முடியாது என்றும் பீற்றிக்கொள்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு பச்சிளம் குழந்தைகளின் உணவான பால் பவுடருக்கும், ஏழை மக்களின் உணவான அரிசி மற்றும் ரொட்டிக்கும், உயிர் காக்கும் மருந்துகளுக்கும், சவப்பெட்டிக்கும்கூட வரிவிதித்தபோது, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் ஊடகங்களும் கண்டனங்களைத் தெரிவித்த வேளையில், அந்த வரிவிதிப்புகளுக்கும் மோடி அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், அது அனைத்தும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சிலின் முடிவு என்றும் வாய்கூசாமல் கூறியவர்தான் இந்த அம்மையார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புக்கு மோடி மட்டுமே காரணம் என்று எப்படி இவர்களால் வெட்கமின்றிப் பேசமுடிகிறது? ‘தன்னெஞ்சறிவது பொய்யற்கஎன்று இவர்களை நினைத்துதான் அன்றே வள்ளுவர் கூறிவிட்டுப் போனார்!

நல்ல, எளிமையான வரிவிதிப்பு (Good & simple tax) என்ற அடிப்படையில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜி.எஸ்.டி. வரியை இந்தியாவில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டது. “என் உயிர் இருக்கும்வரை இந்த வரியை நடைமுறைப்படுத்த உடன்படமாட்டேன்என்று வீரவசனம் பேசியவர்தான் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மோடி. அவர் மட்டுமல்ல, அன்றைக்குப் பா... ஆண்ட அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் ஜி.எஸ்.டி. வரியைக் கடுமையாக எதிர்த்தனர். மாநிலங்களின் ஒத்தக் கருத்தினையும் ஒத்திசைவையும் உருவாக்க முடியாத காரணத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், அது வடிவமைத்திருந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

கூறியதை மாற்றிக் கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ள நமதுஇரட்டை நாக்குபிரதமர், பிரதமரானவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். ஜி.எஸ்.டி. வரியை 2017-இல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தினார். இரண்டு அடுக்கு வரியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை, அநியாயமாக நான்கு அடுக்குகளாக மாற்றி 5,12,18,28 சதவிகிதம் எனப் பொருள்கள் மற்றும் சேவைகள்மீது  வரிவிதித்தார். எதிர்க்கட்சிகளும் தொழில் நிறுவனங்களும் வியாபாரச் சங்கங்களும் பொதுமக்களும், ‘இந்த அநியாய வரிவிதிப்பை மாற்றி அமைக்கவேண்டும்என்று கோரிக்கை வைத்தபோது, பிரதமர் மோடி அதைக் காது கொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை.

இந்த வரிவிதிப்பில் இருக்கிற பல முரண்பாடுகளையும் நடைமுறைச் சிக்கல்களையும் பெரு வணிகர்கள் நமது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து எடுத்துரைத்தபோது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். கோவை மாநகரில், அம்மாநகரத்தின் பெருமைக்குரிய ஒரு மூத்த வணிகர் உணவு விடுதிகளில் ஒவ்வோர் உணவுப்பொருளுக்கும் வெவ்வேறு விதமான வரிகளை விதிப்பதால் ஏற்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை எடுத்துக் கூறியபோது தன்னை அவர் அவமானப்படுத்திவிட்டார் என்று நிதி அமைச்சர் கொக்கரித்ததை எப்படி மறக்கமுடியும்? சம்பந்தப்பட்ட வணிகரின் நிறுவனத்தின்மீது ஒன்றிய நிதி அமைச்சகமே கடுங்கோபத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்ட அந்த வணிகர், நமது  நிதி அமைச்சரைச் சந்தித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதைக்கூட நேரடியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய வக்கிரப் புத்தியை நாம் பார்க்கவில்லையா?

ஒரு பட்டதாரி இளைஞர்  நிர்மலா சீதாராமனின் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், “சிங்கப்பூரைப் போல நம் நாட்டிலும் இரண்டே அடுக்குகளில் வரி விதித்தால் என்ன?” என்று கேட்டபோது, நமது நிதி அமைச்சர் அந்த இளைஞரைப் பார்த்து, “இந்தக் கேள்வியை நீ சிங்கப்பூரில் கேட்க முடியுமா? அப்படிக் கேட்டிருந்தால் ஜெயிலுக்குத்தான் போகவேண்டும். இங்கே அதிகமான சனநாயகம் இருப்பதால் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்என்று எள்ளி நகையாடியதை எப்படி மறக்கமுடியும்?

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பை அறிவித்துவிட்டு  நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர், “இது ஒரு புதிய தொடக்கம். இந்த வரிக்குறைப்பினால் ரூ. 2,50,000 கோடிகளை  மக்கள் சேமிக்க முடியும்என்று தெரிவித்தார். மோடி கூறுவதை ஒரு விவாதத்திற்காக ஒத்துக்கொண்டால்கூட, இந்தப் பணத்தையெல்லாம் கடந்த எட்டாண்டுகளாக இந்த மக்களிடமிருந்து பறித்து, மோடி யாரிடம் கொடுத்தார் என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவேண்டும் அல்லவா? இந்த வழிப்பறிக் கொள்ளையைத்தான்  இராகுல் காந்தி, ‘கப்பார்சிங் டாக்ஸ்என்று வர்ணித்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளாக மோடி அரசு இந்த அநியாய வரிவிதிப்பின் மூலம் அள்ளிக் குவித்த பணம் 55 இலட்சம் கோடி. இதனால் பல சிறு வியாபாரிகளும், சிறு-குறு-நடுத்தரத் தொழில் முனைவோரும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் முடங்கிவிட்டனர். பல்லாயிரக்கணக்கான சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். நடுத்தர வர்க்கம் தனது சேமிப்புகளை இழந்தது. வங்கிகளில் தங்க நகைக்கடன்கள் பல மடங்கு அதிகரித்ததற்கும், மீட்கப்படாத நகைகள் பெருமளவில் ஏலம் விடப்பட்டதற்கும், பல விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன்கள் தவணை தவறிய கடன்களுக்கு மாறி தற்போது வாராக் கடன்களாக நிற்பதற்கும் மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து அவர் விதித்த அநியாய ஜி.எஸ்.டி. வரியும்தான் காரணம்.

அடித்தட்டு மக்களிடமும் நடுத்தட்டு மக்களிடமும் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால், மக்களது வாங்கும் திறன் குறைந்துபோனது. மக்களின் நுகர்தல் குறைந்துபோனதால் உற்பத்தி குறைந்து போனது. நமது பிரதமரின்உயிர்த்தோழர்டிரம்பின் கைங்கரியத்தால் ஏற்றுமதி தொழிலும் சிதைந்து போனது.

எல்லைகளில் பதற்றம், அண்டை நாடுகளில் பெரிய அளவில் போராட்டங்களாக வெடித்துள்ள உள்நாட்டுக் குழப்பங்கள், வேகமாகக் குறைந்து வரும் தனியார் முதலீடுகள், பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், உற்பத்திக் குறைவு, விலைவாசி ஏற்றம்... போன்ற பன்முனைத் தோல்விகளால் நிலைகுலைந்து போயிருக்கிற மோடி அரசு, இனிமேல் தாக்குப்பிடிக்க முடியாது என்று உயிர் பிழைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்த வரிக்குறைப்பு. ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லைஎன்ற வறட்டு ஜம்பம்தான் இந்தப் பாராட்டுகளும் வெற்று விளம்பரங்களும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் பல முரண்பாடுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். பல சில்லறைக் கடைகளில் எந்த விலைக்குறைப்பும் தரப்படவில்லை என்கிறார்கள். வியாபாரிகள் தங்களிடம் பழைய ஸ்டாக் இருப்பதாகவும், அந்தப் பொருள்களுக்கு இந்த வரிக்குறைப்பு கிடையாது என்று கைவிரிக்கிறார்கள். அவர்களதுஸ்டாக்எப்போது தீரும் என்பதற்கு எந்தத் தெளிவான பதிலும் யாரிடமும் இல்லை. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் தங்களது உற்பத்தியில் சில பகுதிகளை வெளியேஜாப் ஒர்க்காககொடுத்து வாங்குவார்கள். 5% ஆக இருந்த அந்த வரிகள் அனைத்தையும் தற்போது 18%  ஆக உயர்த்திவிட்டார்களாம். ஆதலால் அத்தகைய தொழில்களுக்குப் பெரும் நெருக்கடி என்று தெரிகிறது.

கொள்ளு என்றால்  வாயை அகலத் திறப்பதும், சேணம் என்றால் வாயை இறுக மூடிக்கொள்வதும்நமது பிரதமரின் இயல்பான குணம். வரிக்குறைப்புக்கான பெருமை முழுவதும் தனக்கே என்று ஆர்ப்பரிக்கும் பிரதமர், வரிக்குறைப்பினால் ஏற்படும் மொத்தச் சுமையினையும் மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார். இந்தக் கூடுதல் நிதிச் சுமையினால் பல மாநிலங்கள் அன்றாட நடைமுறைச் செலவுக்குக்கூட ஒன்றிய அரசிடம் பிச்சைக் கேட்கும் நிலைமைக்குத் தள்ளப்படும். இதற்கான இழப்பீடு பற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலில் விவாதிக்கவேண்டும் என்ற தமிழ்நாடு, கேரளா போன்ற மாநில அரசுகளின் கோரிக்கைகளைக் காதில் வாங்கக்கூட நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை.

வரி விழுக்காட்டில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னால், அந்த உத்தேச மாற்றங்களைப் பற்றி விவாதித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்குப் பரிந்துரை செய்ய சில மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழு உள்ளது (GST rate rationalisation committee). வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் முதலில் இக்குழுவிற்கு அனுப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு அதன் பரிந்துரைகளுடன்தான் கவுன்சிலின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனால், இம்முறை அந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படாமல் பிரதமர் மோடி, துர்கா பூஜை விழாகாலத்தில் ஜி.எஸ்.டி. வரிகளைப் பெருமளவில் குறைத்து மக்களுக்குதிருவிழா பரிசுவழங்கப் போவதாகச் சுதந்திரதின உரையில் அறிவித்தார். ஒன்றிய அரசின் வேண்டுகோளை மட்டுமே அடிப்படையாக வைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வரிக் குறைப்பினால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் கருத்துகளைக் கேட்கவேண்டும் என்ற அடிப்படையான நடைமுறையினைக்கூட  மோடி அரசு பின்பற்றத் தயாராக இல்லை.

தற்போதைய ஏற்பாட்டின்படி மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஜி.எஸ்.டி. வரியின்மூலம் கிடைக்கும் வருவாய் 41%. ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் கோடி அளவில் இந்த வரிகள் குறைக்கப்பட்டுள்ளதென்றால், அந்த வரி இழப்பினால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்புகளை மாநில அரசுகள் சமாளிக்கக்கூடிய ஏற்பாடுகளையும் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குச் செய்து தரவேண்டும் அல்லவா! ஏனெனில், மாநில அரசுகளுக்குச் சுயமாக வரிவிதிக்கும் அதிகாரம் தற்போது இல்லை.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்குக் குறைந்தபட்சம் ரூபாய் 20,000 கோடி இழப்பு ஏற்படும் என்று அறிவித்துள்ளார். கேரள நிதி அமைச்சர் அவரது மாநிலத்திற்கு ரூபாய் 50,000 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் இதனைப் போன்ற வரியிழப்புகள் தங்களுக்கும் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். சமூக நலன் மற்றும் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்காகப் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திவரும் இந்த மாநில அரசுகள், அந்தத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் பெரும் சிரமங்களைச் சந்திக்கும். இதில் மிகவும் முக்கியமான கோணம் என்னவென்றால், இந்த மாநிலங்கள்தாம் தேசிய வரி வருவாய்க்குப் பெரும் பங்கினைத் தருகின்றன. உத்தரப்பிரதேசமோ, பீகாரோ, ஒடிசாவோ அல்லது பா... ஆளும் மாநிலங்கள் குஜராத் உள்பட ஜி.எஸ்.டி. வசூலில் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. ஆதலால் அவர்களுக்குப் பாதிப்புகள் மிகவும் குறைவு. அப்படியே குறைந்தாலும் ஒன்றிய அரசின் கருணையும் கரிசனமும் அவர்களுக்கு அதிகமாகவே உண்டு.

கடந்த வாரம் ஒன்றிய அரசின் தலைமைக் கணக்காய்வாளர் தெரிவித்துள்ள புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. உபரி வருவாய் (revenue surplus) உள்ள மாநிலங்களாக  16 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், உபரி வருவாயில் முதன்மையாக இருப்பது உத்தரப்பிரதேசம். ஆண்டொன்றுக்கு ரூபாய் 37,000 கோடி உபரி வருமானம் வைத்துள்ளது. உபரியாக வருவாய் பெற்றுள்ள 16 மாநிலங்களில், 10 மாநிலங்கள் பா... ஆளும் மாநிலங்கள் ஒடிசா உள்படதேசத்தின் ஒட்டுமொத்த வருவாய்த் தொகுப்பிற்குத் தங்களது மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரிகள் மூலம் மிகவும் குறைவான பங்களிப்பைத் தரும் உத்தரப் பிரதேசமும் ஒடிசாவும், வரிகளே வசூலிக்காத வட கிழக்கு மாநிலங்களும் உபரி வருவாய் மாநிலங்களாம்! ஆனால், தேசத்தின் வருவாய்த் தொகுப்பிற்கு  (ஏற்றுமதி வரி, கலால் மற்றும் கஸ்டம்ஸ் வரி, வருமான வரி, ஜி.எஸ்.டி.) அறுபது விழுக்காட்டிற்கும் அதிகமாகப் பங்களிக்கும் தென்மாநிலங்கள்வருவாய் பற்றாக்குறை (revenue deficits) மாநிலங்களாக இருப்பது நம் தலைவிதி என்பதைத் தவிர, வேறென்ன கூற முடியும்?

நம் அடிமடியில் கைவைத்துத் தங்களுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு ஓரவஞ்சகமாக ஒன்றிய அரசு அள்ளிக் கொடுக்கும் இந்தப் பாரபட்சமான நடவடிக்கை, நாளை நமது கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டுவைக்கும் என்பதைப் பிரதமர் மோடி உணரவேண்டும்!