(சென்ற இதழ் தொடர்ச்சி...)
பிற
இனத்தாரிடையே தூதுரைப் பணியாற்றுவோரை இங்கே சிறப்பாக நினைவுகூர்கிறேன். இயேசு ஆண்டவரின்
அழைப்பை ஏற்று, கிறிஸ்துவில் இறைத்தந்தை வெளிப்படுத்திய அன்பை அறிவிக்க நீங்கள் அனைத்து
நாடுகளுக்கும் பயணித்துள்ளீர்கள். இதற்காக நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன்,
நன்றி கூறுகிறேன். “உயிர்த்த கிறிஸ்து, எல்லா மக்களினத்தார்க்கும் நற்செய்தி அறிவிக்கிற
கட்டளையைத் தம் சீடர்களுக்குத் தந்து அனுப்பியதும்...” (மத் 28:18-20), அவர்கள் அதனை
ஏற்றுச் செயல்பட்டது போன்று, உங்கள் தூதுரைப்பணி ஒரு பதிலிறுப்பே ஆகும். இவ்வாறு தூய
ஆவியாரின் வல்லமையால் உந்தப்பட்டு, எல்லா மக்களினத்தாரிடையேயும் தூதுரைப் பணியாற்றி
இயேசு ஆண்டவர் நமக்குத் தந்துள்ள உயர்ந்த எதிர்நோக்கிற்கு உலகிலே சான்றுபகர அழைப்புப்
பெற்றுள்ள திருமுழுக்குப் பெற்ற அனைவரோடும் நீங்களும் சிறந்த அடையாளங்களாய் விளங்குகிறீர்கள்.
இந்த
எதிர்நோக்கு ‘எட்டக்கூடிய தொலைவு’ என்று இவ்வுலகு காட்டும் நிலையற்றவைகளைத்
தாண்டி, இப்போதே நாம் பங்கேற்கிற தெய்வீக உண்மைகளை நோக்கிய கதவுகளைத் திறந்து வைக்கிறது.
புனித ஆறாம் பவுல் குறிப்பிடுவதுபோல, கிறிஸ்து தரும் மீட்பை இறை இரக்கத்தின் கொடையாக
புனித திரு அவை அனைவருக்கும் வழங்குகிறது. “அம்மீட்பு, பொருள் மற்றும் ஆன்மிகத் தேவைகளை
மட்டும் சார்ந்தது அல்ல; இம்மைக்குரிய ஆசைகள், போராட்டங்கள், எதிர்பார்ப்புகள், செயல்பாடுகள்
ஆகியவற்றையும் உள்ளடக்கியது அல்ல; மாறாக, இத்தகைய எல்லைகளையெல்லாம் தாண்டி, ‘இறைவன்
என்ற முழுமையில் ஒன்றிணைதல்’ என்கிற நிறைவுக்கு இட்டுச்செல்வதாகும்.
ஆக, மீட்பு என்பது நிறைவு காலத்தை நோக்கியது; அனைத்தையும் கடந்தது. அது இம்மை வாழ்வில்
தொடங்கித் தொடர்கிறது; எனினும், அது நிலை வாழ்வில் நிறைவு பெறுகிறது” (இன்றைய உலகில் நற்செய்திப்பணி எண். 27).
உலகின்
பல முன்னேறிய நாடுகளில் பின்வரும் சமூக அவலங்கள் மலிந்து காணப்படுகின்றன: பரவலான குழப்ப
உணர்வு, தனிமை, முதியோரின் நியாயமான தேவைகளைக் கண்டுகொள்ளாமை, தேவையில் உழலும் அடுத்தவர்க்கு
உதவுவதில் காட்டும் தயக்கம் என்பன அவை. இத்தகைய சூழமைவுகளில், கிறித்தவக் குழுமங்கள்
எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, புதிய மானுடத்தை உருவாக்குவதில் முன்னோடிகளாக விளங்க
முடியும். இது உன்னதமான செயல்முறை அல்லவா! தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நாடுகளில்
‘நெருக்கமான உறவு நிலை’ மறைந்து வருகிறது. நாம் அனைவரும் ஒருவர்
ஒருவரோடு தொடர்பில் இருக்கிறோம்; ஆனால், உறவில் இல்லை. செயல்திறன் பற்றிய எண்ணமே நம்மை
ஆட்கொண்டுள்ளது. இவ்வுலகு சார்ந்த பொருள்கள் மேலுள்ள பிடிப்பும் பேரார்வமும் நம்மைச்
சுயநலவாதிகளாக மாற்றி, பிறர்நலம் பேண இயலாதவர்களாய் ஆக்கி விடுகிறது. குழும வாழ்வில்
நாம் பெறும் நற்செய்தி அனுபவம் நம்மில் முழுமைபெற்ற, மீட்படைந்த, நலமான மனிதப் பண்பை
மீட்டெடுக்க இயலும்.
இதற்கு,
யூபிலி பற்றிய அதிகாரப்பூர்வ ஆணை மடலில் 7 முதல் 15 வரையுள்ள எண்களில் குறிப்பிட்டுள்ள
பணிகளைச் செயல்படுத்த மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். அவற்றைச் செயல்படுத்தும்போது
ஏழையரிலும் ஏழையர், வலுவற்றோர், நோயுற்றோர், முதியோர் மற்றும் பொருள் முதன்மையிலும்
நுகர்வுச் செயல்பாடுகளிலும் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டோர்
ஆகியோர்மேல் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டும். இதனைக் ‘கடவுளின் பாணி’யில் செய்யவேண்டும். அதாவது, அவர்களின் வாழ்விடச் சூழல்களில்
அவர்களுடன் நெருக்கமாகவும் மென்மையுடனும் பழகி, பரிவிரக்கம் காட்டி, அவர்களுடன் தனிநபர்
உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்கள் 127-128). நாம் எதிர்நோக்குடன்
வாழ்வது எப்படி என்பதைப் பல சமயங்களில் அவர்கள்தான் கற்றுத்தருகிறார்கள். தனிநபர் உறவுகளின்
வழியாக, இரக்கம் வழிந்தோடும் இறைவனின் பேரன்பை அவர்களுக்குக் கொண்டுசேர்க்க இயலும். அப்போது ‘கிறிஸ்துவின் இதயத்தினின்று பொங்கி வழியும்
அன்பே, தொடக்க நற்செய்திப் போதனையின் மையம்’ என்பதை
நாம் உணர்வோம்.
நாம்
இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட எதிர்நோக்கை, இயேசுவின் அணைகடந்த அன்பு எனும் மூலத்திலிருந்து
பெற்று எளிதாகப் பிறருக்கு வழங்க முடியும் (1பேது 1:21). இவ்வாறு, நாம் கடவுளிடமிருந்து
பெற்றுள்ள அதே ஆறுதலைப் பிறருக்குக் கொண்டுசேர்க்க முடியும் (2பேது 1:3-4). இயேசுவின்
இறை-மனித இதயத்தின் வழியாக இறைவன் அனைவரையும் அவரது அன்பின்பால் ஈர்த்து, ஒவ்வொருவரின்
இதயத்துடன் பேச விரும்புகிறார். “இயேசுவின் இரக்கம் நிறைந்த இதயத்துடன், இறைத்தந்தையின்
அன்புடன் இவ்வுலகம் முழுவதையும் அரவணைத்துக்கொள்ளும் அடையாளங்களாக விளங்கும் தூதுரைப்
பணியைத் தொடரவே நாம் அனுப்பப்பெற்றிருக்கிறோம்”
(திருத்தந்தையின் தூதுரைக் கழகங்களின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ஆற்றிய உரை
3-6-2023).
3. எதிர்நோக்கின் தூதுரைப்
பணியைப் புதுப்பித்துக்கொள்வோம்
எதிர்நோக்கின்
தூதுரைப் பணியின் அவசரத்தை எதிர்கொள்ளும் கிறிஸ்துவின் சீடர்கள், அப்பணியில் ‘நிபுணத்துவம்
பெற்ற சிற்பிகளாவது எப்படி?’ என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மேலும், கவனம் சிதறிய,
மகிழ்ச்சி இழந்த மனித இனத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். இந்த
இலக்கை அடைய ஒவ்வொரு திருப்பலிக் கொண்டாட்டத்திலும் குறிப்பாக, வழிபாட்டு ஆண்டின் உச்சமாகிற
உயிர்ப்புப் பெருவிழாவின் முத்திருநாள்களிலும், நம் உயிர்ப்பு அனுபவத்தைப் புதுப்பித்துக்கொள்ள
வேண்டும். கிறிஸ்துவின் மீட்பளிக்கும் இறப்பு-உயிர்ப்பில் என்றும் நிலைத்திருக்கிற
‘வசந்த கால’ வரலாற்றை அடையாளப்படுத்தும் ஆண்டவரின்
பாஸ்கா கடத்தலில் நாம் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். இதன் விளைவாக அனைவருடனும் பகிர்ந்துகொள்ள
எதிர்நோக்கின் நிறைவினால் நிரம்பி வழியும் ‘வசந்த கால’ மனிதர்களாக
உருவாகிறோம்.
நாம்
கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருப்பதாலும், ‘சாவும் வெறுப்பும் மனித வாழ்வைத் தீர்மானிப்பவை
அல்ல’ என்பதை உணர்ந்திருப்பதாலும் இது சாத்தியமாகிறது.
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களிலும் அருளடையாளங்களிலும் நிகழ்த்தப்படும் மறைபொருள்களிலிருந்து,
உலகளாவிய பாஸ்கா நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றத் தேவைப்படும் ஆர்வம், வேகம், மனவுறுதி,
பொறுமை ஆகியவற்றைத் தூய ஆவியாரின் வல்லமை வழியாகப்
பெற்றுக்கொள்கிறோம். “உயிர்த்து மாட்சியடைந்த இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கின்
ஊற்று; அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ள தூதுரைப் பணியைத் தொடர்ந்தாற்றத் தேவைப்படுகிற
அனைத்தையும் தந்து உதவிடாமலிரார்” (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்
275).
கிறித்தவர்களாகிய
நாம், இறைவனிடமிருந்து பெற்றிருக்கிற கொடையும் பணியுமாகிற எதிர்நோக்கிற்குச் சான்றுபகர
அவருடன் ஒன்றித்து அவரில் வாழ்கிறோம். இறைவேண்டலில் ஊன்றியிருப்போரே எதிர்நோக்கின்
பணியாளர்கள்! ஏனெனில், வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் சேவியர் வான்துவான் கூறுவதுபோல,
“இறைவேண்டல் செய்பவரே எதிர்நோக்குபவர்.” வான்துவான் தன் நீண்ட சிறையிருப்புக் காலத்தில்
இறைவேண்டலில் பிரமாணிக்கமாய் இருந்தார்; நற்கருணை கொண்டாட்டத்தில் உறுதியாக இருந்தார்;
இவ்விரண்டிலிருந்தே உரிய ஆற்றல் பெற்று எதிர்நோக்கில் தொடர்ந்து நிலைத்திருந்தார்.
இறைவேண்டல்தான் தூதுரைப் பணியின் முதன்மைச் செயல்பாடு; அதுவே எதிர்நோக்கின் முதன்மை
ஆற்றலுமாகும். இதனை நாம் மறவாதிருப்போமாக!
எனவே,
ஆண்டவரின் அருள்வாக்கை குறிப்பாக, சிறந்த சுருதி இசைவு கொண்டவையும், தூய ஆவியாரே உருவாக்கியவையுமான
திருப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட இறைவேண்டலில், எதிர்நோக்கின் தூதுரைப் பணியைப்
புதுப்பித்துக்கொள்வோமாக. இடுக்கண்கள் மத்தியில், நம்மைச் சுற்றிக் காணப்படும் எதிர்நோக்கின்
அறிகுறிகளைத் தேர்ந்து தெளிந்திட திருப்பாக்களே நம்மைப் பயிற்றுவிக்கின்றன. மக்களினத்தார்
அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழவேண்டும் என்ற நிலையான தூதுரைப் பணி ஆவலைக் கொண்டிருக்கத்
துணைநிற்கின்றன. இறைவேண்டல் செய்வதன் வழியாக, இறைவன் நமக்குள் ஏற்றி வைத்திருக்கும்
எதிர்நோக்கின் சுடரை உயிரோட்டத்துடன் வைத்திருப்போம். இதனால் அச்சுடர் பெருநெருப்பாக
மாறும். இந்தச் சுடரின் தீ நம்மைச் சுற்றி வாழும் அனைவரிலும் ஒளியேற்றி அவர்களைக் கதகதப்பாக
வைத்திருக்கும். இறைவேண்டல் தூண்டியெழுப்புகிற நமது தெளிவான செயல்பாடுகளும், கருத்துணர்த்தும்
செயற்குறிப்புகளும்கூட அவர்களில் ஒளியேற்ற உதவும்.
நிறைவாக,
கிறித்தவ எதிர்நோக்கு போன்று நற்செய்தி அறிவிப்புப்பணியும் குழுமப் பண்புடையதாகும்.
இப்பணி தொடக்கத்தில் நடைபெறும் நற்செய்திப் போதனை, அதைத் தொடர்ந்து நிகழும் திருமுழுக்கு
வழங்குதலுடன் முடிவுறுவதில்லை; மாறாக, திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவருடனும் இணைந்து
நற்செய்திப் பாதையில் பயணிப்பதன் வழியாகக் கிறித்தவக் குழுமங்களைக் கட்டியெழுப்புவதில்
தொடர்கிறது. இன்றைய சமுதாயத்தில் திரு அவையின் உறுப்பினர் என்ற நிலை, ஒரே முறையில்
அடைந்துவிடக்கூடிய ஒன்றல்ல; அதனால்தான், கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையில் அவர்களை
வளர்த்து முதிர்ச்சியடைய செய்கிற அனைத்துத் தூதுரைப்பணிச் செயல்பாடு “திரு அவையின்
அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஒரு வகைமுறையாக உள்ளது”
(நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 15) என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு ஒன்றிணைந்த இறைவேண்டலும்
செயல்பாடும் தேவை.
திரு
அவையின் தூதுரைப் பணிச் செயல்பாடு, கூட்டொருங்கியக்கமாகச் செயல்வடிவம் பெற வேண்டும்
என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். திருமுழுக்குப் பெற்றவர்களின் ‘தூதுரைப் பணிப்
பொறுப்பு’ மற்றும் ‘புதிய தனித்திரு அவைகளுக்கு
நல்கும் ஆதரவு’ ஆகிய இரண்டிற்கும் திருத்தந்தையின்
திருத்தூதுக் கழகங்கள் செய்து வரும் உதவிகளையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அன்புப்
பிள்ளைகளே, இளையோரே, வயது வந்தோரே, முதியோரே! உங்களை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் சாட்சியவாழ்வு, இறைவேண்டல், தியாகம், தாராளப் பண்பு ஆகியவற்றின் மூலம் திரு
அவையின் நற்செய்தி அறிவிக்கும் பணியில் தீவிரமாகப் பங்குபெறுங்கள். உங்களின் இந்தப்
பங்கேற்பிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புச்
சகோதரிகளே, சகோதரர்களே! எதிர்நோக்கில் ஊன்றி நின்ற இயேசு கிறிஸ்துவின் அன்னையாகிற மரியாவின்பால்
நம் பார்வையைத் திருப்புவோம். இந்த யூபிலி ஆண்டிற்கும் வரவிருக்கும் ஆண்டிற்கும் நாம்
செய்யும் இறைவேண்டல்களை அவரிடம் ஒப்படைப்போம். “கிறித்தவ எதிர்நோக்கின் ஒளி ஒவ்வொருவரையும்
ஒளிர்விப்பதாக! இதுவே அனைவருக்கும் நாம் வழங்கும் இறையன்பின் செய்தி. திரு அவை, மாந்தர்
உலகின் அனைவருக்குமான இறையன்பின் நற்செய்திக்கு, ஒவ்வொரு பகுதியிலும் சான்று பகர்வதாக!”
(யூபிலி பற்றிய ஆணை மடல்: ‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது’. எண்: 6) - திருத்தந்தை
பிரான்சிஸ்