தமிழ்நாட்டில் இன்று என்ன நடக்கிறது? தமிழ்க் குடிகளின் அரசியல் புரிதல் என்ன? தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகளின் கள நிலவரம் என்ன? கேள்விக்குறியாகும் இளையோரின் எதிர்காலம்தான் என்ன? என ஆயிரம் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் அண்மைக் காலங்களில் சமூகத் தளம் நோக்கி, நம் சிந்தனை நோக்கி நாளும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் செப்டம்பர் 27-ஆம் நாள் ஒரு கருப்பு நாளாகவே மாறிப்போனது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களாகிப்போன கரூர் துயர நிகழ்வு கூடுதலாக இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகளை முன்வைக்கின்றன.
தமிழக
வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் நடைபெற்றதில்லை என்கின்ற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசு பொருளாகியிருக்கின்றன.
பல்வேறு
அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் சமூகச் செயல்பாட்டாளர்களாலும் இந்நிகழ்வு குறித்துப் பல்வேறு கருத்துகளும் கண்டன அறிக்கைகளும் வெளிவந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் கூற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
“கரூர் கொடுந்துயரத்தில் பா.ச.க
தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது; கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது; இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் உடனடியாக இதுபோன்ற உண்மையைக் கண்டறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்கவேண்டும்; பா.ச.க-வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாகத் தேவைப்படுகிறது” எனத்
தெரிவித்திருக்கிறார்.
இக்கூற்றை,
தொல். திருமாவளவனின் கருத்தாகவும் குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் பார்ப்பதையும் கடந்து, இதை ஒரு முன்னெச்சரிக்கையாகவே நாம் காணவேண்டியிருக்கிறது. “பா.ச.க
தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது...” என்னும் சொற்றொடரில் புதைந்திருக்கிறது ஆயிரம் அர்த்தங்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்; அரசியல் அறிவோர் இதன் ஆழம் உணரட்டும், என்றே நினைவூட்ட விழைகிறேன்.
இந்தியச்
சூழலில், கூட்ட நெரிசலில் விபத்துகள் ஏற்படுவது புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள்,
பேருந்து - இரயில் நிலையங்கள், மக்கள் கூடும் பொதுநிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்ற வரலாறு பல உண்டு. அவ்வாறே,
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சில கூட்ட நெரிசல் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. 1992-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கும்பகோணம் மகாமக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். 2005-ஆம் ஆண்டு, சென்னையில் வியாசர்பாடி பகுதியில் அரசின் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். இத்தகைய நிகழ்வுகள் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திடாத அளவுக்கு கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் இத்துயர நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
இந்தியாவில்
கூட்ட நெரிசல் விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், 2003 முதல் 2025 காலகட்டங்களில் மட்டும் 23 கூட்ட நெரிசல் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 துயர நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2025-இல் மட்டும் ஆறு கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்தேறி இருக்கின்றன; அதில் ஒன்று கரூர் நிகழ்வு என்பது இதயத்தைக் கணக்க வைக்கிறது.
தமிழ்நாட்டின்
அரசியல் சூழலில் நிகழ்ந்த பல்வேறு கட்சிக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் மக்களும் தொண்டர்களும் கூடுவது எதார்த்தமான நிகழ்வு. அன்று முதல் இன்றுவரை, தேர்தல் பரப்புரையின்போது கட்சித்தலைவரைக் காணக் கூடுவதும் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பின்தொடர்வதும் எதார்த்தமான ஒன்றே. ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய அரசியல் கூட்டம் “ஆவேசக் கூட்டமாக”
மாறுவது பெரும் கவலையளிக்கிறது. கொள்கை, கோட்பாட்டு அரசியல் கூட்டங்கள், இன்று “கும்பல் அரசியல்” என விமர்சிக்கப்படும் அளவுக்கு நாகரிகம்
இழந்து நிற்கிறது.
தனக்கு
எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்ற கும்பல் காட்டு மோகம்தான், அதை மீடியாக்களில் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தும் செயல்பாடுகள்தான், இத்தகைய கொடிய துயர நிகழ்விற்குக் காரணமாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் நாம் தவிர்க்க இயலாது.
விஜய்
செல்லும் இடமெல்லாம் கூரையிலும் மரத்திலும் ஏறிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்கு முண்டியடிக்கிற கூட்டம், விடிந்த பொழுதிலிருந்தே காத்துக்கிடக்கும் கூட்டம், அங்கு ஏற்படும் தள்ளு முள்ளு, பொது சொத்துகள் மீது அவரின் தொண்டர்கள் ஏற்படுத்தும் சேதம்... இவையெல்லாம் குறித்து, தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்த போதிலும் கட்சியினரின் ஒழுக்கத்திற்கான கட்டமைப்போ, சீர்திருத்தமோ, ஒழுங்கு நடவடிக்கைகளோ வெளிப்படையாக ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என்ற கருத்தும் இங்குக் கவனிக்கத்தக்கது.
விஜயின்
பரப்புரை நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பாக, விழுப்புரம் - விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேர், மதுரை மாநாட்டில் 14 பேர், திருச்சியில் நடைபெற்ற பரப்புரையின்போது 12 பேர், அரியலூரில் 6 பேர், திருவாரூர் 17 பேர், நாகப்பட்டினத்தில் 5 பேர் என, தவெக-வின் ஒவ்வொரு மாநாட்டிலும், பரப்புரைக் கூட்டத்திலும் காயம் அடைந்தோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பத்தாயிரம்
நபர்கள் மட்டுமே வருவார்கள் எனத் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்ட மனுவில் குறிப்பிட்டிருப்பதாகவும், உளவுத்துறை 20 ஆயிரம் நபர்கள் வருவார்கள் எனக் கணித்ததாகவும் ஆனால், அங்குக் கூடியிருந்தவர்கள் 25,000 லிருந்து 27,000 வரை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது என முதல்கட்டத் தகவல்
அறிக்கையும், நெடுநேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அவதியுற்றனர் என்பதும், தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் கொடுத்து அசாதாரண சூழல்களை ஏற்படுத்தியதாலும், அதனால் நிகழ்ந்த நெரிசலால் மூச்சுத்திணறல், உயிர்ச்சேதம், படுகாயம் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மறுபுறம்,
தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்று ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாணையம் விசாரணைகளையும் கள ஆய்வுகளையும் மேற்கொண்டு
வரும் சூழலில், இந்நிகழ்வில் மிகப்பெரிய சதி வேலை நடந்து இருக்கிறது என்றும் இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது; எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தவெக நிர்வாகம் கேட்டிருப்பதும் இந்நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்க
வைக்கிறது.
“கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்; இதுவரை நடக்காத துயரம்; இனி நடக்கக்கூடாத துயரம்” எனக் கூறியிருக்கும் முதல்வர், நீதிபதியின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இனி கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் பல வந்தாலும்
இந்நிகழ்வு ஒரு சாமானியனான நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல.
41 பேர்
இறந்த இந்தத் துயர நிகழ்வில் ஐவர் மட்டுமே 50 வயதைக் கடந்தவர்கள்; 36 பேர் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள், இளையோர், சிறுவர், சிறுமியர். இது இன்றைய இளையோரின் அரசியல் ஆர்வமா அல்லது இரசிகர் மன்றப் போக்கா? என்றே கேட்கத் தோன்றுகிறது. விலைமதிப்பில்லா உயிருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
இளமையின்
வேகம் குறிப்பாக, குழு உளவியல் (Mass psychology) கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதும், ஒழுங்குகளுக்கு முரண்பட்டிருப்பதும், விளைவுகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தனக்கும் பிறருக்கும் பேராபத்துகளை விளைவிக்கக்கூடியது என்பதை இந்நிகழ்வு குறித்துக் காட்டுகிறது.
குழந்தைகள்,
பெண்கள், இளையோர் எனப் பலரும் பங்கெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முறையான வழிகாட்டுதலை, நெறிமுறைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதும், பாதுகாப்பு நெறிமுறைகள், முதலுதவிப் பணிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் இனி நிகழாத வண்ணம் தனி மனிதனும் சமூகமும் அரசும் உறுதி மேற்கொள்ளவேண்டும். ‘சுயம்’ கட்டுப்பாடு கொண்டால் மட்டுமே, ‘சமூகம்’ நெறிப்படுத்தப்பட முடியும். முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்