‘சமூகநீதி’ எனும் சொல்லாடல் சந்தை சரக்குபோல இன்று எங்கும் மலிவாகிப்போனது; அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் எத்தகைய வேறுபாடுமின்றி மேடைகள் தோறும் இக்கருத்தைக் கையாள்கின்றன; காதுகளில் அன்றாடம் இது எதிரொலிக்கிறது. ஆயினும், சமூகநீதி என்றதும் சிலர் முகம் மலர்வதும், சிலர் முகம் சுளிப்பதும், சிலர் மிகவும் கவனத்தோடு பொருள், பதம் தேடி கையாள்வதும், இன்னும் சிலர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது.
இந்திய
அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-18 - மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அனைவருக்குமான சமத்துவத்தை உறுதிசெய்கிறது. மேலும், அரசின்கீழ் உள்ள எந்தவோர் அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு அல்லது நியமனங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் உள்ளன; ஆகவே, மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் அல்லது வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட முடியாது என்றும், பள்ளிகள்,
கடைகள், உணவகங்கள், ஓட்டல்கள், கிணறுகள், சாலைகள் மற்றும் அரசால் பராமரிக்கப்படும் குளியல்தளங்கள் போன்ற பொது ஓய்வு விடுதிகளில் குடிமக்கள் சமமான அணுகலைப் பெறுகின்றனர் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இவ்வாறு,
சமமான பாதுகாப்பையும், பொது இடங்களுக்குச் சமமான அணுகலையும், அரசின் கீழ் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் உறுதி செய்து, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; எல்லாரும் சமமானவர்கள், எல்லாரும் உரிமைக் குடிமக்கள், ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்’
என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஆயிரமாயிரம் வேறுபாடுகளைக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
‘எல்லாரும் சமம்’ எனும் சமத்துவச் சமூகத்தில், பிறகு எப்படி மையம் - விளிம்புநிலை, உயர்வு - தாழ்வு, வறுமை - வளமை என்ற வேற்றுமை எழுந்தது? மானுடச் சமூகம் இன்று, சமூக - பொருளாதார - அரசியல் - வாழ்வியல் தளங்களில் முரண்பட்டுக் கிடப்பது வெள்ளிடைமலை. இத்தகைய முரண்பாடு கொண்ட வேற்றுத் தளங்களால் ஒருசாராரின் இருத்தலும் வாழ்வியலும் கவலைக்குள்ளாகி, அடிப்படை உரிமைகள் சார்ந்த பல கேள்விகளைச் சமூகத்திற்கு
முன்வைக்கின்றன.
விளிம்புநிலை
மக்கள் யார்? ஏன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டனர்? அத்தகைய மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டாமா? சமத்துவம்
- சமபங்கு - சமூகநீதி என்பதெல்லாம் எப்போது பிறக்கும்? என ஆயிரம் கேள்விகள்
எழும்புகின்றன.
சமத்துவமும்
சமபங்கும் கைகோர்க்கும் இடம்தான் சமூகநீதி க(கொ)ண்ட
சமூகம் என்பதை நாம் உணரவேண்டும். சமத்துவம் (Equality), சமபங்கு
(Equity) எனும்
இரு சமூகத்தின் அறிவியல் கோட்பாடுகளும் சற்றே வேறுபட்டு நிற்கின்றன. சமத்துவம் என்பது தனிமனிதத் தேவைகளை, உரிமைகளைத் தனிப்பட்டவிதமாகக் கருதாது அனைவருக்கும் சமமாக, பொதுவான நலன்களை முன்வைக்கின்றது. சமபங்கு என்பது சமூகப் பிரிவுகளில் எல்லாருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்கிறது. இதையே
‘கடையருக்கும் கடைத்தேற்றம்’ என்ற
ஜான் ரஸ்கினின் தத்துவமும், அதிலிருந்து பிறப்பெடுத்த காந்தியின் சர்வோதயச் சமுதாயக் கொள்கையும் வலியுறுத்துவது.
இத்தகைய
பின்னணியில், உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திக்காகவும் ஏன்... தங்கள் இருத்தலுக்காகவுமே போராடும் ஒரு சமூகம்தான் ‘திருநங்கை’,
‘திருநம்பி’ எனும்
மூன்றாம் பாலினத்தவர்.
ஒன்றிய,
மாநில அரசுகளுக்கு அதிகார அரியணை அவர்களிடமிருந்து அகன்றுவிடாதவண்ணமிருக்க முதலில் அன்றாடம் கூட்டணி அரசியல் செய்திட வேண்டும். இரண்டாம் நிலையில் இட ஒதுக்கீடு, இலவசம்,
கடனுதவி, சமூகநீதி என அலுவலக அரசியல்
செய்திட வேண்டும். மூன்றாவதாக, உழவரின் போராட்டம், மீனவரின் வாழ்வுரிமைப் போராட்டம், நெசவாளியின் வாழ்வாதாரப் போராட்டம், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிரந்தரப் போராட்டம், ஓட்டுநர்களின் ஊதியப் போராட்டம், கனரக வாகனங்களின் சுங்கச் சாவடி வரிக்கு எதிரான போராட்டம் எல்லாம் பேச்சுவார்த்தை அரசியல் செய்திட வேண்டும். அதைக் கடந்துதான் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வுரிமை, மாற்றுத்திறனாளிகளின் பணிநியமன உரிமை எல்லாம்.
இத்தகைய
சூழலில், தனது பாலின அடையாளம் காரணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் வேற்றுமை பாராட்டி, தன்னை ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகஜோன் கௌஷிக் என்ற திருநங்கை மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே. பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் பணிநீக்கம் செய்யப்பட்டது குற்றம் எனத் தீர்ப்பளித்ததுடன்,
அவ்விரு பள்ளிகளும், இரு மாநில அரசுகளும் தலா ஐம்பதாயிரம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும்,
மூன்றாம் பாலினத்தவர் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டுள்ள மெத்தனப் போக்கால் 2019-ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2020 -ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு
விதிமுறைகள் ஆகியவை பயன்பாட்டில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கடிந்துகொண்டதுடன், அவர்களுக்குச் சமவாய்ப்பு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அவ்வாறே,
ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைக்கப்பட
வேண்டும்; மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; இவ்விதிமுறை மீறலைத் தெரிவிக்க நாடுதழுவிய அளவில் கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் உருவாக்கப்பட வேண்டும்; புகார்களைப்பெற அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவருக்கான சமமான வேலைவாய்ப்புகள் மற்றும் மருத்துவச் சேவையை உறுதி செய்வதற்காக, சமவாய்ப்புக் கொள்கையை வகுப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷா மேனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. விரைவில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவ்வறிக்கை கிடைத்த மூன்று மாதங்களில் சமவாய்ப்புக் கொள்கையை மத்திய
அரசு வெளியிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு அளித்துள்ள தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடுமையான தீர்ப்பையும் வழிகாட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
பாலின உறுதிப்படுத்தல் அல்லது அறுவை சிகிச்சை தலையீட்டிற்கு மூன்றாம் பாலினத்தவர் தங்கள் முதலாளியின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது, அவர்களின் தனிப்பட்ட சுயாட்சியை உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது. அவ்வாறே, மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் தங்கள் பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகைய
சூழலில், அரசு தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ‘ஸ்மைல் திட்டம்’
-The SMILE (Support for Marginalized Individuals for Livelihood and
Enterprise) கல்வி,
திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்கான நிதி உதவி மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. மேலும், அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்டங்களை அணுகுவதற்கான மூன்றாம் பாலினத்தவருக்கான அதிகாரப் பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடிமேல்
அடிவைக்கும்போது அம்மியும் நகரும் என்பது போலத்தான், நமது உரிமைக்கான குரலும் பதிவும். சமநீதியும் சமூக நீதியும் பேசும் நாம், நம்முடன் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களின் குரலைக் கேட்காமலிருப்பதும், அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்காமல் இருப்பதும், அவர்களைச் சக மனிதர்களாக மதிக்காமலிருப்பதும்
சமூகக் குற்றம் மட்டுமல்ல, சமூகப் பெரும் பாவமும் கூட.
இவர்களை
மாண்புடன் மதிப்போம்; மனித நேயத்துடன் காப்போம். ஏனெனில், யாவரும் இந்நாட்டு மன்னர்களே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்