news-details
கவிதை
கடந்து போகும் வாசங்கள்!

செப்டம்பர் - 2

எனக்குப் பிறந்த நாள்!

குடும்பத்தார்கள்

உறவுகள், நண்பர்கள்

நினைவூட்டிக் கொண்டாடும்

வயதைக் கடந்துவிட்டேன்.

 

அரசுப் பள்ளிகளைத் தவிர

வேறு எந்த நிறுவனத்திலும்

இயக்கத்திலும்

பணியாற்றியதில்லை.

ஆதரவாளன்.

பங்கேற்பாளன்தான்.

 

என் மகள் அகிலா மட்டும்

எல்லா ஆண்டுகளிலும்

நினைவுகூர்ந்து வாழ்த்துவாள்!

 

65 வயது தொடங்குகிறது.

நினைவுகளில் வந்துபோகும்

சில நூறு முகங்கள்.

அவ்வப்போது

தொடர்பிலிருக்கும்

சில பத்து முகங்கள்.

 

ஆயுளில் ஒரு மாத சிறைவாசம்.

15 வயதில்

இளம் மாணவர் இயக்கத்தில்

தொடங்கிய பொதுவாழ்வு.

சில இயக்கங்களோடு

2025-வரை நீடிக்கிறது.

 

பெரிதாய் ஒன்றும்

கிழித்துவிடவில்லை.

 

வரலாற்றைப் படைத்தவர்கள்

வரலாற்றைப் படைக்கிறவர்கள்!

வரலாற்றைப் படைக்கப்

போகிறவர்கள்அணியில்

கடைசியில் நிற்கிறேன்.

 

காட்டாற்றைப்போல

கடுகிச் செல்லும்

காலவெள்ளத்தின்

ஒரு சிறுதுளி நான்.

 

ஏறத்தாழ... 800 கோடிகளில் ...

ஒரு சிறு புள்ளி.

 

நல்லவேளை ...

விழாக்கள், கேளிக்கைகள்

விருந்துகள், விருதுகள், பரிசுகள்,

பந்தாக்கள் இல்லாமலிருப்பது

மிகவும் சுகமானது.

 

அப்படி நடந்தால்

போலிகளாய்பல

செய்ய வேண்டியிருக்கும்.

வாழ்வில் திருப்தியாய்

ஏராளம் செய்ய

முடியாமல் போனாலும்

சொல்வதற்குச் சில இருக்கின்றன

எனது மூன்று நூல்கள்:

1. வெள்ளந்தி வாத்தியார்

2. மக்கள் இயக்குநர் (எஸ்.பி.ஜனநாதன்)

3. ஆண்டோ எனும் அருங்கலைஞன்.

 

ஏறத்தாழ 20 ஊர்கள்

20 வீடுகளில்

வாழ்ந்திருக்கிறேன்.

10 பள்ளிகளில்

பணி செய்திருக்கிறேன்.

 

இயல்பான, நிலைபெற்ற

வாழ்க்கையில்லை.

ஒரு நாடோடியைப்போல

அலைந்து திரிந்திருக்கிறேன்

அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன்.

 

இருந்தாலும் ...

மனம் நிறைவாய்த்தான்

இருக்கிறது.

அரசுப்பணியில் இருந்ததால்

அனைத்தையும் கடக்க முடிந்தது.

 

பெற்றோர் புறக்கணிப்பும்

உறவினர் ஏளனமும்

பின்தொடர்ந்திருந்தாலும்

எழுத்தும் இலக்கும்

என்னைக் காப்பாற்றிவிட்டன.

 

சாதாரண பார்வையில்

தேறவில்லை என்றாலும்

சாதிக்கும் முயற்சிகளில்

இன்னமும் இருக்கிறேன்.

 

என் இளவல்கள்

இன்னும் என்னைக்

கனவுகளோடுதான்

பார்க்கிறார்கள்.

திரும்பிப் பார்க்கிறேன்

திருப்தியாய்தான் இருக்கிறது.

 

எனக்குத் தெரியும்...

மானசீகமாய் வாழ்த்து

சொல்பவர்கள்

கரம் நீட்டி குலுக்க

நினைப்பவர்கள்

ஏதாவது செய்திருக்கலாமோ

என்று எண்ணியவர்கள்

அருகில் இருந்திருக்கலாம்

என்று அன்போடு

ஆசைப்படுபவர்கள்

எல்லாருக்கும் நன்றி!

 

பிரபஞ்சம் அனுமதித்தால்

நாம் மீண்டும்

புன்னகையோடு சந்திப்போம்!