news-details
சிறுகதை
பெற்றோரின் கண்டிப்பு – (காவல் அன்னை - 10)

என்ன யாழினி, இவ்வளவு லேட்டா வாரே, எங்கே நீ போயிட்டு வாரே?” என்றார் தந்தை கருணாகரன்.

ஆமா யாழினி, நீ பாட்டுக்கு ஊர் சுத்திட்டு வாறியா?” என்றாள் தாய் இந்திரா.

ஏன், நான் டாக்டர், பல கிளினிக் போவேன்என்றாள் யாழினி.

இப்ப எங்கே போயிட்டு வாரே?” என்றார் தந்தை.

டாக்டர் சேவியரோட கிளினிக் போயிட்டு வாரேன்.”

சேவியரோட கிளினிக் போனியா? அவரோட வீட்டிற்குப் போனியா? அதை இப்பச் சொல்லு!” என்றார் தந்தை.

அவரோட கிளினிக் போயிட்டு, அப்படியே மாடியிலே அவங்க வீட்டிற்கும் போயிட்டுத்தான் வரேன்என்றாள் சிரித்தபடி யாழினி.

ஏன் அவங்க வீட்டிற்குப் போறே? சேவியர் மனைவியைப் பறிகொடுத்த டாக்டர். அவரை ஆஸ்பத்திரியில் பார்த்த! அப்புறம் எதுக்காக வீட்டிற்குப் போகணும்?” என்றார் தந்தை.

அவரோட கிளினிக்கில் இரண்டு கேன்சர் பேசண்ட் வந்திருக்கிறதாகக் கிளினிக் ரிஷப்சனிஸ்ட் போன் பண்ணினாள். அதனால் அங்கே போய் பார்த்து பேஷண்டுகளைச் செக் அப் பண்ணி மாத்திரை மருந்து எழுதிக் குடுத்துட்டு வாரேன்என்றாள் யாழினி.

ஏன் அவங்களை உங்க ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்ல வேண்டியதுதானே?” என்றார் தந்தை.

அப்படியெல்லாம் பேஷண்டை அலைய வைக்க முடியாதுப்பா. உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை? அதை வெளிப்படையாப் பேசுங்கஎன்றாள் யாழினி.

ஏங்க, டாக்டர்னா பல கிளினிக் போயிட்டு வருவாங்க. இதைப் போய் பெரிசா கிண்டி கிழங்கெடுக்குறீங்களே? பாவம் மகள் வேலை முடிஞ்சு களைப்பாய் வந்திருக்காள். நீ போய் ரெஸ்ட் எடும்மா யாழினி, இந்த மனுஷன் எதையாவது குழப்புவார், அதைப் பற்றிக் கவலைப்படாதேஎன்றாள் தாய் இந்திரா.

யாழினி வீட்டின் உள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

ஏய் அறிவில்லாதவளே, யாழினி அந்த டாக்டர் வீட்டுக்கு அடிக்கடிப் போவாள் போலத் தெரியுது. நாம் சொல்ற பையனை விட்டுட்டு யாழினி பாதை மாறி போயிறக் கூடாதுன்னுதான் நான் இப்படிப் பேசினேன்என்றார் கருணாகரன்.

பாதை மாறிப்போனால் நாம் திசை திருப்பி கொண்டாருவோம். இதுக்கெதுக்கு வீண் வாதம்? சும்மா உங்க வேலையைப் பாருங்க, போய் ஒரு டம்ளரில் விஸ்கியை ஊத்தி உள்ளே தள்ளிட்டு சாப்பிட்டுப் படுங்கஎன்று சிரித்தாள் இந்திரா.

இப்படி என்னைப் படுக்கப்போட்டே உன்னோட காரியத்தை முடிச்சிருவியே. எப்படியும் யாழினி என்னோட தங்கை மகனைக் கட்டித்தான் தீரனும். நான் இதிலே பின்வாங்க மாட்டேன் இந்திராஎன்று பேசினார் கருணாகரன்.

காலம் போகப் போக எது நடக்கும்னு நாம் சொல்ல முடியாது. யாழினிக்கு யார்னு அந்தப் படைச்சவன் எழுதி இருப்பான். அதுதான் நடக்கும். வீணாய் வம்பு பண்ணாதே, போய் பேசாமல் படுஎன்றாள் இந்திரா.

ஒரு முடிவுக்கும் நீ ஒத்துவர மாட்டியே இந்திரா. என்னோட தங்கை மகனைக் கட்டலைன்னா, உன் அண்ணன் பையனைக் கட்டிவை. அவனும் நிறைய படிச்சு பெரிய வேலையில் இருக்கான்லஎன்றார் கருணாகரன்.

அதெல்லாம் யாழினிட்டே எடுபடாது. அவன் காலேஜ்லே வேலை செய்றான். ஏதோ புரபசர் வேலை பார்க்கிறதாச் சொல்றாங்க. டாக்டர் போயி அவனைக் கட்டுவாளா? கொஞ்சமாய் மூளையைப் பயன்படுத்தி யோசிய்யா. சும்மா கண்டதைப் போட்டு குழப்பி, என்னையும் குழப்பிவிடாதேஎன்றாள் இந்திரா.

எக்கேடும் கெட்டுப் போங்க, நான் போய் படுக்கிறேன்என்று கோபமாய் போனார் கருணாகரன்.