இறைவேண்டுதல் என்பது நம்பிக்கையின் உயிர்மூச்சு. இறைவேண்டல் குறித்து எத்தனையோ விளக்கங்களைப் புனிதர்கள் வழியாகவும் இறையியலாளர்கள் வழியாகவும் நாம் பெற்றிருந்தாலும், அதனை வாழ்ந்து அனுபவிப்பதன் வழியாகத்தான் அவரவர் புரிந்துகொள்ள முடியும். வார்த்தைகளை வீணாக்காமல் அதேவேளை, அமைதியாக இறைவனிடம் இணைந்து, அவரிடம் நம்மை ஒப்படைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைப்பதுதான் இறைவேண்டல். செபம் என்பது, தான் செய்த சாதனைகளையும் நல்ல செயல்களையும் பட்டியலிட்டு சுயபுகழ்ச்சியோ அல்லது பாராட்டோ தேடும் நேரமல்ல; மாறாக, இறைவல்லமைக்கு முன் தாழ்ச்சியுடன் ‘நான் ஒன்றுமில்லாதவன்’ என்ற நிலையை ஏற்கும் நிலையாகும்.
பொதுக்காலத்தின்
30-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆன்மிக வாழ்வில் ஆணவத்தையும் அகந்தையையும் அகற்றி, தாழ்ச்சியுடனும் பணிவுடனும் வாழ்வதற்கு அழைக்கின்றன.
ஆணவம்
நம்மை இறைவனிடமிருந்து பிரித்து விடும். மாறாக, ஆணவம் அகற்றி பணிவுடனும் தாழ்ச்சியுடனும் வாழும்போது, ஒருவர் தெய்வ நிலைக்கு உயரமுடியும். கடவுள் நம்மை விட்டு வெளியேறும் இறுதி நிலையே ஆணவம். ‘ஆணவம் அழிவைக் கொடுக்கும்’ - இது
நம் முன்னோர் வகுத்த பழமொழி. “தாழ்ச்சியே மற்ற அனைத்துப் புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்பார் புனித அகுஸ்தின். தாழ்ச்சி கொண்ட மனநிலையே முழு ஈடுபாட்டுடன் கூடிய இறைவேண்டலுக்கு வழிகாட்டும். “தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்தான் முகில்களை ஊடுருவிச் செல்லும்”
(சீஞா 35:17). உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சியே செபத்தின் முதல்படி. இக்கூற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய
உவமை (18:9-14).
“இருவர் இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்றனர்”
(18:10) என்று இயேசு இன்றைய உவமையைத் தொடங்குகிறார். இந்த உவமையை இயேசு கூறுவதற்கான காரணத்தை இன்றைய உவமையின் அறிமுக வரிகள் நமக்குக் கூறுகின்றன: “தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து”
இயேசு கூறிய உவமை இது. இறைவேண்டலில் பணிவு அவசியம் என்ற உயர்ந்த பாடத்தைக் கற்றுத்தர இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.
இருவர்
இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் செல்கின்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரி தண்டுபவர் (லூக் 18:10). பிளேவியஸ் யோசேபுஸ் என்ற வரலாற்று ஆசிரியரின் குறிப்புப்படி குருகுலம் சேராத சாதாரண பொதுமக்கள் கூட்டத்திலிருந்து வந்தவர்கள் பரிசேயர்கள். உரோமை அரசுடனோ அல்லது யூத தலைமைக் குருகுலத்துடனோ சேராது, மோசேயின் சட்டங்களையும் தங்கள் சட்டங்களையும் நுணுக்கமாகக் கடைப்பிடித்து உரோமை அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், திருவிவிலியத்தைப் பற்றி அனைத்து அறிவினையும் இவர்கள் கற்றுத்தெளிந்தவர்கள். திருச்சட்டம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இவர்கள் நற்செயல்கள் செய்து வந்தனர். வாரத்தில் இருமுறை நோன்பிருப்பது, வருவாயில் பத்தில் ஒரு பங்கைக் காணிக்கையாக வழங்குவது (லூக் 18:12), திருச்சட்டம் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான செயல் (இச 14:22-23). மோசே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவற்றிற்கும்
பல மடங்கு அதிகமான செபம், தவம், உண்ணா நோன்பு, தர்மம் என்று அனைத்திலும் பரிசேயர்கள் எடுத்துக்காட்டான வாழ்க்கை நடத்தியவர்கள். அதுவும், இந்த முயற்சிகள் எல்லாமே மக்களின் கண்கள் முன்பாகவே இவர்கள் மேற்கொண்டனர். எனவே, இவர்கள் யூதச் சமுதாயத்தில் அவ்வளவு உயர்ந்த இடம்பெற்றிருந்தனர்.
பரிசேயர்களோடு
ஒப்பிடும்போது, வரிதண்டுவோர் மக்களால் இகழப்பட்டவர்கள். மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்கள்.
நாட்டை ஆண்ட அந்நிய உரோமையருக்கு வரி வசூலித்துக் கொடுத்த இவர்களிடம் நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து
போயிருந்தன. மேலும், பல வழிகளில் அநியாயவரி
வசூலித்ததால் இகழப்பட்டுப் பாவிகளாகக் கருதப்பட்டனர். இவர்கள் இருவரும் இறைவன் முன்னிலையில் இருந்தபோது, வரிதண்டுவோரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்புகிறார் (18:14அ).
ஏன்
இந்தத் தலைகீழ்
மாற்றம்? இருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயர் கூறியது 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் கூறியதோ நான்கு வார்த்தைகள்தான். இருவரும் ‘கடவுளே’ என்ற வார்த்தையுடன் தங்கள் வேண்டுதலைத் தொடங்கினர். பரிசேயர் தனது நேர்மையான, அப்பழுக்கற்ற வாழ்வை இறைவனிடம் பட்டியலிட்டுக் கூறுகிறார்: “கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரிதண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்” (18:11) என்கிறார். தான்
செய்த எல்லாச் செயல்களுக்கும் கடவுள் பலன் அளிக்கக் கட்டுப்பட்டுள்ளார் என பரிசேயர் எண்ணினார்.
‘இவ்வளவு செய்தேன், கொடுத்தேன். இவ்வளவு பெற எனக்கு உரிமை உண்டு’ என்ற முறையிலேயே கடவுளை ஒரு கடை வியாபாரியாக எண்ணினார். ‘கடவுளே’ என்ற அந்த முதல் வார்த்தைக்குப் பிறகு பரிசேயர் கூறிய மீதி 26 வார்த்தைகளில், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசியவையே அதிகம்.
பரிசேயரின்
கூற்று இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப மேற்கொண்ட முயற்சி. சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன் மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், இவர் கடவுளுக்கே கடிவாளமிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதுதான் அவரின் பெரும்தவறு.
இதற்கு
மாறாக வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் தன்னை யாரோடும் ஒப்பிடாமல், “நான் ஒரு பாவி”
(18:13) என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார். கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராகத் தான் செய்த பாவங்களை ஏற்று, அவற்றிற்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையிலேயே கடவுளின் அருளிரக்கம் அவரைத் தொடுகிறது. மன்னிப்பைப் பெற்று, ‘கடவுளுக்கு ஏற்புடையவராகி அவர் வீடு திரும்புகிறார்.’ பரிசேயரோ, கடவுளுடைய அருளுக்குத் தன்னை அடிபணிய வைக்காது, தன் சுயநிறைவிலேயே தன் முன்னைய நிலையில் யாதொரு மாற்றமுமின்றித் திரும்பிச் செல்கிறார்.
இந்த
உவமை வழியாக நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? பல நேரங்களில் நம்முடைய
செபம் நமது சாதனைகளை விளக்குவதாகவே அமைகிறது. நம்முடைய செபம், நோன்பு, கடவுளுக்குக் காணிக்கை கொடுத்தல், நேர்ச்சை போன்ற செயல்களைப் பற்றியே நாம் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். இதுவல்ல உண்மையான செபம். ஒரு சாதாரண விவசாயி புனித ஜான் வியான்னியிடம் ஒருமுறை, “திருநற்கருணைப் பெட்டி முன் நான் செபிக்கும்போது நான் இயேசுவைப் பார்க் கிறேன்; அவர் என்னைப் பார்க்கிறார்” என்று
கூறினாராம். இதைவிட சிறந்த இறைவேண்டல் எது இருக்கமுடியும்? ஆகவே, இறைவேண்டலினால் விண்ணகத்தையும் அசைத்துவிடலாம்; கடவுளைத் தன் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என எண்ணுவது தவறான
போக்கு. “செபங்கள் இறைவனை மாற்றுவதில்லை, செபம் செய்பவரை மாற்றுகின்றன” என்கிறார்
சோரன் கிர்க்ககார்டு (Søren Kierke gaard). ஆகவே,
நம்முடைய வேண்டுதல்கள் நமக்குள் வியப்புக்குரிய மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம்.
இரண்டாவதாக,
பல வேளைகளில் “மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் நம் வேண்டுதல் கேட்கப்படும்” (மத்
6:7) என நாம் நினைக்கிறோம். நம்முடைய நல்ல செயல்களைக் கடவுளுக்கு நினைவூட்டி நாம் நல்லவர்கள் என்பதில் பெருமையடைகிறோம். நம் நல்ல செயல்களை அன்று; கடவுளின் நல்ல செயல்களை எடுத்துக்கூறுவதுதான் செபத்தின் மையமாக இருக்கமுடியும். திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “ஆன்மிக ஆணவம் கடவுளை வணங்குவதைவிட, தன்னலத்தை வணங்குவதற்கு நம்மை இட்டுச் செல்லும்”
(மூவேளைச் செபவுரை, 23.10.2022) என்பதை உணரவேண்டும்.
மூன்றாவதாக,
தற்பெருமை உடையோரும் பிறரை இகழ்வோரும் என்றுமே உண்மையான செப மனிதராக இருக்கமுடியாது. ஆண்டவர் முன்னே அமரும்போது ஆணவமின்றி அமர்வதே உண்மையான செபம். ‘பூவும் புல்லும்போல் புவியில் வாழ்கிறேன்’ என்று
தன்னிலை உணர்வதும், அதனை ஏற்றுக்கொள்வதுமே உண்மையான இறைவேண்டலின் கூறுகள். மனத்தாழ்மையோடு எந்த அளவிற்கு நம்மையே தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்குக் கடவுள் நம்மை உயர்த்துவார். உண்மையான மனத்தாழ்மையில் நாம் இருக்கும் உண்மை நிலையை அப்படியே கடவுளிடம் எடுத்துக்கூறும் சக்தியுடையவர்களாக மாறுவோம். “களிமண்போல் என்னை வனைந்தீர்; அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ?” (யோபு 10:9) என்று தனது ஒன்றுமில்லா நிலையை இறைவன் முன்னிலையில் வெளிப்படுத்துவோம்.