news-details
ஞாயிறு தோழன்
அக்டோபர் 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 17:8-13; 2திமொ 3:14-4:2; லூக் 18:1-8

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு நம்பிக்கையோடு செபிக்கவும் செபத்தில் நிலைத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறது. நமது ஆன்மிக வாழ்வுக்கு அடித்தளமாக இருப்பது செபம்இறையோடும், சகமனிதரோடு நல்லுறவில் வாழவும், வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவும், கடவுளின் அளவற்ற இரக்கத்தில் நிலைக்கவும், ஆன்மிக வாழ்வில் ஆழம்பெறவும் செபம் நமக்கு அவசியமாகிறது. செபம் எல்லாத் தடைகளையும் துன்பக் கட்டுகளையும் சிறைகளையும் உடைக்க வல்லதுஆழமான நம்பிக்கையோடு கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம். ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரித்தவர்கள், அவரது ஆடையைத் தொட்டவர்கள், ‘இயேசுவே, தாவீதின் மகனேஎன்று நம்பிக்கையோடு அறிக்கையிட்டவர்கள், ‘ஆண்டவரே, என் தேவனேஎன்று சரணடைந்தவர்கள் அனைவரும் வாழ்வு பெற்றனர். நாமும் இத்தகைய உள்ளம் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையோடு செபிப்போம். தேவைக்காக மட்டும் ஆண்டவரைத் தேடிவராமல் ஒவ்வொரு நிமிடமும் அவரது உடனிருப்பை உணர்வோம். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கும் கற்றுக்கொண்ட அனுபவங்களுக்கும் நன்றி கூறுவோம். நமது விருப்பம் விடுத்து, இறைத்திட்டம் அறிந்து வாழ வரம் வேண்டுவோம். ‘இல்லைஎன்று சொல்லாத இறைவனிடம் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு கேட்டுக்கொண்டே இருப்போம். பேரன்பால் நம்மைக் காக்கும் இறைவனிடம் முற்றிலும் சரணடைவோம். இறைவனிடம் கேட்பவர்களாய் மற்றும் இருந்துவிடாது, அவரது அன்பையும் பாதுகாப்பையும் இரக்கத்தையும் சுவைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாக வாழ்ந்திட  வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரிடம் நம்பிக்கையோடு தொடர்ந்து கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. உள்ளத்தை உயர்த்தி உரிமையோடு கேட்கும்போதும் செபத்தில் நிலைத்திருக்கும்போதும் வெற்றியை மட்டுமே அனுபவிப்போம். மோசே கரம் விரித்துப் பல மணிநேரம் செபித்ததால் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றனர். நாமும் செபத்தால் வெற்றி காணவும், செபமனிதர்களாக வாழவும் அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நமது கிறித்தவ வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது இறைவார்த்தை. உலகம் கொடுக்கமுடியாத அமைதியைக் கொடுக்க வல்லது இறைவார்த்தை. நமது வாழ்வை அருள்நிறைந்த வாழ்வாக மாற்றுவது இறைவார்த்தை. இறைவார்த்தையை அன்றாடம் வாசித்து, நம்முடைய வார்த்தையாலும் வாழ்க்கையாலும் இயேசுவை அறிவிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நம்பிக்கை கொண்டு வாழவும், உமக்காகப் பணிசெய்து கொண்டும், இறையரசின் மதிப்பீடுகளை விதைத்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு நீரே துணையாக இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! உமது பெயரால் கூடியுள்ள நாங்கள் அனைவரும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும், எம்மை விட்டுப் பிரியாத உம் அன்பில் நிலைத்திருக்கவும், உம்மோடு இணைந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எங்கள் பங்கின் குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் வளர்ந்திடவும், எங்கள் குடும்பங்கள் அனைத்தும் செபிக்கும் குடும்பங்களாக மாறிடவும், வாழ்வு கொடுக்கும் வார்த்தையான இறைவார்த்தையைத் தவறாது படிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காக்கும் தெய்வமே இறைவா! அருகில் வாழும் மனிதரில் உம்மைக் கண்டிடவும், எங்கள் குழந்தைகளைத் திருமறை கற்பிக்கின்ற நெறிமுறைகளில் வளர்க்கவும் பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.