அன்புச்செல்வன்: “தந்தையே! திருமுழுக்குக் குறித்த அற்புதமான பல தெளிவுகளை எங்களோடு உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டு வருகிறீர்கள். மிகவும் நன்றி! திருமுழுக்குக் குறித்து சில கேள்விகள் எங்களிடம் உள்ளன. அவற்றைக் கேட்க விரும்புகிறோம். சில கிறித்தவர்கள் பக்தியான சில அருள்பணியாளரிடம் அருளடையாளங்களைப் பெற்றால்தான் பலன் உண்டு என்று அருள்பணியாளர்களையும் இடங்களையும் தேர்வு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?”
அருள்பணி:
“இதற்கு நான் என் பதிலைத் தருவதைவிட திரு
அவையின் மறைவல்லுநராகக் கருதப்படும் புனித இசிதோரின் (St. Isidore) கருத்தைத்
தர விரும்புகிறேன்: ‘திருமுழுக்கு மனிதர்களது செயல்பாடு அல்ல; மாறாக, கிறிஸ்துவின் செயல்பாடு. எனவே, ஒரு கொலையாளியால் திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றப்பட்டாலும், அதனால் திருமுழுக்கு அருளடையாளத்தின் தன்மை பாதிக்கப்படாது.’ புனித இசிதோர் சொல்லும் கருத்து என்னவெனில், திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவது கடவுளே! அருள்பணியாளர்கள் அவர்களது பிரதிநிதிகளே! பிரதிநிதிகள் குறைவுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக அருளடையாளத்தில் குறைவு வந்துவிடுவதில்லை. அருளடையாளக் கொண்டாட்டத்தின் வழியாகப் பெறப்படும் கொடைகளும் வரங்களும் அதைப் பெறுபவர்களது மனநிலையையும் உளப்பாங்கையும் பொறுத்ததே அன்றி, அவ்வருளடையாளக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் அருள்பணியாளர்களின் புனிதத்தைப் பொறுத்தது அல்ல; காரணம், அருளடையாளத்தை நிகழ்த்துபவர் கடவுளே! இக்கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமான தளத்தில், ‘இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர் யார்?’ என்கின்ற பின்னணியில் நாம் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாம்.”
மார்த்தா:
“இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது புனித திருமுழுக்கு யோவான்தானே?”
அருள்பணி:
“வெளிப்படையாகப் பார்ர்க்கும்போது இயேசுவுக்குத் திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு கொடுத்தார் என்பது நாம் அறிந்ததே! எனினும், நான்கு நற்செய்திகளையும் கூர்ந்துநோக்கினோம் என்றால், அங்கு ஒரு சிறிய வித்தியாசம் தென்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மத்தேயு, மாற்கு நற்செய்தியாளர்களின் கருத்துப்படி திருமுழுக்கு யோவானே இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார் (மத் 3: 13-19, மாற் 1:9). ஆனால், லூக்கா மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் இதில் சற்று முரண்படுவதாகத் தெரிகிறது. இயேசு திருமுழுக்குப் பெறுவதற்கு முன்பாகவே திருமுழுக்கு யோவான் ஏரோதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக லூக்கா எழுதுகிறார். திருமுழுக்கு யோவான் ஏரோதால் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை எழுதிவிட்டு (லூக் 3: 20), இயேசுவின் திருமுழுக்குக் குறித்து லூக்கா எழுதுகிறார் (லூக் 3: 21,22). மேலும், இயேசு திருமுழுக்குப் பெற்றதாக லூக்கா குறிப்பிடுகிறாரேயொழிய, அதைக் கொடுத்தது யார் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அதுபோல யோவான் நற்செய்தியிலும் திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறாரேயொழிய, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவராகக் குறிப்பிடப்படவில்லை. நான்காம் நற்செய்தி யில் இயேசு திருமுழுக்குப் பெற்றதற்கான சாட்சியாக மட்டுமே திருமுழுக்கு யோவான் சுட்டிக் காட்டப்படுகிறார் (யோவா 1: 32-34).”
மார்த்தா: “ஆச்சரியமாக இருக்கிறது! நான் பலமுறை நற்செய்திகளை வாசித்திருக்கிறேன், வாசிக்கக் கேட்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் கூறுகின்ற அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்ததில்லை. லூக்கா மற்றும் யோவான் இவ்வாறு முரண்படுவதற்கான காரணம் என்ன தந்தையே!”
அருள்பணி:
“இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, லூக்கா தனது நற்செய்தியை எழுதிய காலகட்டத்தில் யூதேயாவில் ஒரு குழுவினர் திருமுழுக்கு யோவானே மெசியா என்கிற கருத்தைப் பரப்பி வந்தனர். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் ‘இயேசுவே மெசியா’ என்று ஒரு பக்கம் போதித்துக்கொண்டிருக்க, மற்றொரு குழுவினர் ‘திருமுழுக்கு யோவானே யூதர்கள் எதிர்பார்த்த மெசியா’ என்று கூறி, அவர் பெயரால் திருமுழுக்குக் கொடுத்து வந்தனர் (திப 19: 3). இதற்கு அவர்கள் கையில் எடுத்த வாதங்களுள் ஒன்று, இயேசுவுக்கே திருமுழுக்குக் கொடுத்தவர் யோவான் என்பது!”
கிறிஸ்டினா:
“அதாவது திருமுழுக்குப் பெற்ற இயேசுவைவிட திருமுழுக்குக் கொடுத்த யோவான் பெரியவர் என்ற வாதம்?”
அருள்பணி: “ஆம், எனவே, ‘இயேசுவே மெசியா’ என்பதைத் தூக்கிப்பிடிக்கும் விதமாக லூக்காவும் யோவானும் இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது, திருமுழுக்கு யோவான் என்கின்ற கருத்தைத் தவிர்த்து விட்டனர். மேற்காணும் பிரச்சினையின் காரணமாகவே யோவான் நற்செய்தியாளர் ‘அவர் ஒளியல்ல! மாறாக, ஒளியைக் குறித்துச் சான்றுபகர வந்தவர்’
(யோவா 1:8) என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து எழுதுகிறார். மேலும், திருமுழுக்கு யோவானே ‘நான் மெசியா அல்ல’
(யோவா 1:19) என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் யோவான் எழுதுகிறார்.”
அகஸ்டின்:
“இரண்டாவது காரணம் என்ன தந்தையே?”
அருள்பணி:
“மேலே நாம் விவாதித்த காரணம்! திருமுழுக்குக் கொடுப்பவர் உண்மையில் கடவுள் தாம் என்ற இறையியல் உண்மையை ஆழமாக எடுத்துரைக்கவே! அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்குக் கடவுள் தம் கருவிகளாகப் பல்வேறு மனிதர்களைப் பயன்படுத்தினாலும், அருளடையாளச் செயல் பாடுகளின் தொடக்கக் காரணராகவும், அதை நிறை வேற்றுபவராகவும் இருப்பவர் கடவுள் மட்டுமே!”
அகஸ்டின்:
“தந்தையே, திருமுழுக்குக் குறித்து என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. பாவிகளாகிய நாம் நம் பாவங்கள் கழுவப்படுவதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றோம். ஆனால், பாவமே அறியாத இயேசு ஏன் திருமுழுக்குப் பெறவேண்டும்?”
அருள்பணி:
“உனது கேள்விக்குப் பதிலாகத் திரு அவையின் புகழ்பெற்ற ஆயரும் அறிஞருமாகிய புனித அம்புரோசியாரின் கருத்தைக் கொடுக்க விரும்புகின்றேன்: ‘நம் ஆண்டவராகிய இயேசு திருமுழுக்குப் பெற்றது தம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதற்காக! பாவமே அறியாத இயேசுவின் உடலைத் தொட்ட நீர் புனிதப்படுத்தப்படுவதால், அது பாவிகளின் பாவங்களைப் போக்கும் ஆற்றலைப் பெற்ற ஒன்றாக மாறுகிறது.’ (‘The Lord was baptized,
not to be cleansed Himself, but to cleanse the waters, so that those waters,
cleansed by the flesh of Christ which knew no sin, might have the power of
Baptism’)”
மார்த்தா:
“என்னவோர் அருமையான சிந்தனை! திருமுழுக்குக் குறித்து என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. பெந்தகோஸ்து கூட்டத்தார் முழுக்கு ஞானஸ்நானம் என்ற ஒன்றைப் பற்றிக் கூறி கத்தோலிக்கரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களே! இது பற்றி விளக்கம் அளிக்க முடியுமா, தந்தையே?”
அருள்பணி:
“இரண்டு காரியங்களை நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித் துத் திருவிவிலியத்தில் எந்தத் தெளிவான குறிப்பும் கிடையாது. ‘திருமுழுக்குப் பெற்றவுடன் இயேசு தண்ணீரைவிட்டு வெளியேறினார்’ (மத்
3:16) என்ற இறைவசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பல பிரிவினை சபையினர்
இயேசு தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குப் பெற்றார் என்று வாதாடுகின்றனர். இது யூகத்தின் அடிப்படையில் ஊதிப் பெரிதுபடுத்தப்படும் ஒரு காரியம். இரண்டாவதாக, உடல் அழுக்கைப் போக்கவேண்டும் என்றால், ஒட்டுமொத்த உடலுமே குளிக்கவேண்டும். திருமுழுக்கு என்பது உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது நம் ஆன்ம அழுக்கைப் போக்கும் செயல். எனவே, உச்சந்தலையில் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. தொடக்கக் கிறித்தவர்கள் வாழ்ந்த சுரங்க இல்லங்களில் (catacombs)
செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிற்பங்களில், யோவான் இயேசுவின் தலைமேல் தண்ணீரை ஊற்றுவதுபோல்தான் வடிவமைத்திருக்கிறார்கள்.”
அன்புச்செல்வன்:
“எனக்கு ஒரு துணுக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு கத்தோலிக்கக் குருவானவரும், பெந்தகோஸ்து போதகர் ஒருவரும் முழுக்கு ஞானஸ்நானம் பற்றி வாதாடிக் கொண்டிருந்தார்களாம்;
உடல் முழுவதுமாகத் தண்ணீரில் மூழ்கினால்தான் திருமுழுக்குச் செல்லுபடியாகும் என்று பெந்தகோஸ்து போதகர் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் போதகரைப் பார்த்து, ‘திருமுழுக்குப் பெறுபவர் தண்ணீரில் நெஞ்சுவரை நின்று நீங்கள் அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, அந்தப் போதகர் ‘செல்லுபடியாகாது’ என்றார்.
குருவானவர், ‘கண்கள் வரை நின்றால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, போதகர் அதே பதிலைக் கொடுத்தார். ‘நெற்றிவரை ஒருவர் நீரில் நின்றார் என்றால் அப்பொழுது திருமுழுக்குக் கொடுக்கலாமா?’ என்று கேட்க, அந்தப் போதகர் ‘தண்ணீர் உச்சந்தலையில்பட்டால்தான் அந்தத் திருமுழுக்குச் சரியானதாக இருக்கும்’
என்ற பதிலைக் கொடுத்தார். குருவானவர் ‘அதைத்தானே நாங்கள் செய்கிறோம்’ என்றாராம்.
அந்தப் போதகரால் அதற்குமேல் பதில் பேச முடியவில்லை.”
அருள்பணி:
“ஆம்! தண்ணீர் ஊற்றுவது ஓர் அடையாளச் செயல்பாடே!”
(தொடரும்)