news-details
சிறப்புக்கட்டுரை
‘இனி பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் அவசியமில்லை’ சனநாயக உரிமையை நெரிக்கும் ஒன்றிய அரசு!

ஆகஸ்டு 4-இல் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எழுதிய ஒரு கடிதத்தில், இந்தியாவின் பாதுகாப்புத்துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்புக் கருவிகளை உருவாக்க அரியவகை கனிமங்கள் தேவைப்படுவதால் முக்கியக் கனிமங்கள் மற்றும் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களைத் தேசப்பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி, அவற்றிற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்கக் கோரப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 29-ஆம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறையானது சுற்றுச்சூழல் துறைக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், 3-ஆம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட் மற்றும் முதல்நிலை அணுமின் உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாதுமணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு, பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளதுஇக்கோரிக்கையைப் பரிசீலித்த ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின்கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக்கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் நடைமுறையாக இருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம், இனி இத்திட்டங்களுக்கு நடத்தப்படமாட்டாது. இத்திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டம் நிர்ணயித்துள்ள தகவல் அறியும் உரிமையையும், பிரிவு 48-இன் கீழ் வருகிற சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கடமையையும் மீறுவதாகவே அமைந்துள்ளது. ஒன்றிய-மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க இயலாத நேரங்களில் மக்களின் நியாயமான உணர்வுகளையும் அச்சங்களையும் கேள்விகளையும் வெளிக்கொணர 1994-ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் கீழ் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தவே பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் கொண்டுவரப்பட்டது. மக்களின் னநாயக மாண்பைக் கூட மதிக்காமல் கார்ப்பரேட் நலன்களுக்காகவே இத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாகப் பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒன்றிய பாசிச அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 அறிவிக்கை ஒரு பேரழிவு. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தச் சட்டத்திருத்தம்.

புதிய திருத்தம்: பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை

பெரிய தொழில், சுரங்கத்திட்டங்களைத் தொடங்குவதற்கு அப்பகுதி மக்களிடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது கட்டாயம் என்று தற்போது இருக்கும் விதியைத் திருத்தி, ‘கருத்துக்கேட்புக் கூட்டம் கட்டாயமில்லைஎன்று ஆக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு. இனிமேல் ஆழ்கடல் எண்ணெய் எரிவாயு அகழ்வுத்திட்டங்களுக்கும், அணுக்கனிமச் சுரங்கத்திட்டங்களுக்கும், டங்ஸ்டன், இரும்பு, பாக்சைட் சுரங்கத்திட்டங்களுக்கும்  பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை என அடிப்படை கருத்துச் சுதந்திர உரிமையை நெரிக்கிறதுசுற்றுச்சூழல் வரைவு தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020-இல் 19-ஆம் பக்கத்தில் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியாத நிலையிருந்தால் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடங்கள்

திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு மிக அருகில் உள்ள கவுத்தி, வேடியப்பன் மலைகளில், காப்புக்காட்டில் 325 ஹெக்டேர் நிலப்பரப்பில் இரும்புத்தாது வெட்டியெடுத்து, கழுவி, வில்லைகளாக மாற்றி எடுத்துச்செல்லும் திட்டத்திற்கு ஜிண்டால் குழுமம் உரிமம் கேட்டிருந்தது. இதற்கான மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் 2008, டிசம்பர் 27-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ‘இந்த மலையை வெட்ட வேண்டுமென்றால் முதலில் என்னை வெட்டுங்கள்என்ற உணர்ச்சிபொங்க 85 வயது மூதாட்டியின் கருத்தும், ‘மலைகளை அழித்துவிட்டு, எங்களை நோயாளிகளாக்கிவிட்டு, பிறகு மருத்துவமனை கட்டித்தருவீர்களா?’ என்ற இளைஞனின் நியாயமான கருத்தும், ‘திருவண்ணாமலையில் 2,20,000 மரங்களை வெட்டிவிட்டு, அதற்கு ஈடாக அம்பாசமுத்திரம் அருகே தனியார் காடு ஒன்றை வாங்கி வனத் துறைக்குக் கொடுக்கச் சொல்கிறீர்கள்... திருவண்ணாமலையில் இம்மரங்களால் தரப்பட்ட காற்றை, நாங்கள் அம்பாசமுத்திரத்தில் சுவாசிக்க முடியுமா?’ என்ற எதார்த்தமான பேச்சும், ‘இரும்புத்தாது துகள்களால் விவசாயம் செய்யத் தகுதியற்றவையாக விளைநிலங்கள் மாறுமேஎன்ற விவசாயியின் வலிமிகுந்த வார்த்தைகளும் மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்டு அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை அப்படியே நடைமுறைக்கு வந்தால் எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்கும் சூழ்நிலை இல்லை என்று அரசு தன் விருப்பம்போல கூறி மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை இரத்து செய்யலாம். மக்கள் கருத்துகளைக் கேட்பதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, வரப்போகும் திட்டத்தைப் பற்றிய உண்மையை மக்கள் தெரிந்துகொள்ளும் (Right to Information) வாய்ப்பும் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகும்.

சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கியக் கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய அமைச்சகம் அறிவித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு 24 கனிமங்களைமுக்கியக் கனிமங்கள்என வகைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது ஒன்றிய அரசு. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் பிரிவு பி-இன்படி 6 வகையான கனிமங்கள் அணுக்கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கனிமங்கள் மீது மாநில அரசுக்கு இனிமேல் எந்த உரிமையும் இல்லை. சுற்றுச்சூழல் அனுமதியை இனி ஒன்றிய அரசே வழங்கும். பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் இரத்து செய்யப்பட்டு மக்களின் கருத்துச் சுதந்திரமும் பறிபோகும். கடற்கரைத் தாதுமணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகளால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, சுற்றுச்சூழல் நாசமாகும்போது, கடலரிப்பு நிகழ்ந்து மக்களின் இருப்பிடங்கள் அழியும் நிலை உருவாகும்போது, வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும்போது, கதிரியக்க அபாயத்தால் மக்கள் புற்றுநோயால் மடியும்போது, செத்து மடியுங்கள்என்று கூறுவதுதான் மக்களைக் கருத்துச் சொல்ல விடாமல் தடுப்பது. அப்படியென்றால் இத்திருத்தம் யாருடைய இலாபத்திற்கு?

ஏற்கெனவே 48 கனிமத்தொகுதிகள் ஏலத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அதில் 24 கனிமத்தொகுதிகளில் ஏலம் விடும் உரிமை ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகாவுக்கு உள்பட்ட மிடாலம் முதல் கொல்லங்கோடு வரை 1144 ஹெக்டேர் பரப்பளவில் நாற்பது ஆண்டுகள் அணுக்கனிமச் சுரங்கத்திட்டத்திற்கு அனுமதி கோரி இந்திய அரிய மணல் ஆலை நிறுவனம் விண்ணப்பத்திருந்த நிலையில், அதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தக்கலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்களின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு, கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சட்டத் திருத்தத்தின்படி, கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை, கருத்துக்கேட்புக்கான அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது எனப் பொய்க்காரணம் கூறி, கருத்துக்கேட்புக் கூட்டத்தை இரத்து செய்ய ஏதேச்சதிகாரம் ஒன்றிய அரசுக்கு உண்டு.

வேடிக்கையான விசயம் என்னவென்றால், இத்திருத்தத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமலே, சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் உத்தரவு வாயிலாக வெளியிட்டிருக்கிறது. இது கடுமையான கண்டனத்துக்குரிய ஒன்று. தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின்படி, அலுவல் உத்தரவுகள் சட்டமியற்றும் விதிகள் கிடையாது. இம்மாற்றம் சட்டப்பூர்வக் கோட்பாட்டிற்கு முரணானது என்று OA.No.74 of 2021 என்கிற வழக்கில் கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் விதிகள் பலவீனப்படுத்தப்படும்போது திட்ட முன்வரைவாளர்களான நிறுவனங்கள் தங்களின் தார்மீகப் பொறுப்பை அலட்சியப்படுத்தும் நிலை உருவாகும். தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மதிக்காமல், மீண்டும் அலுவல் உத்தரவு வாயிலாகச் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் பாசிசப் போக்கையும், கனிம வளங்களைத் தனியாருக்குத்  தாரைவார்க்கும் முயற்சியில் பொதுமக்களோ, மாநில அரசுகளோ வரக்கூடாது என்று  ஒன்றிய பா... அரசு வெளியிட்டிருப்பதும் வேதனைக்குரியதும் கண்டனத்திற்குரியதுமாகும். ஒன்றிய அரசின் இம்முடிவை எதிர்த்து அனைத்து மக்களும் போராட வேண்டியது அவசியமாகும்.