திருச்சி மாவட்டம், சமயபுரம் - பள்ளிவிடை புனித உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்முனைவர் சாந்தகுமார். கடந்த செப்டம்பர் 5 அன்று, கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களது முன்னிலையில் துணை முதலமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின் அவர்களால் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் இவர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். தற்போது புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற அருள்தந்தை அனைத்துச் செயல்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு ஓர் எடுத்துக்காட்டான ஆசிரியராகத் திகழ்கின்றார். மாணவர் சேர்க்கை, மாணவர் தேர்ச்சி, பசுமை வளாகம், சிறுவர் பூங்கா, கணினி அறைகள், இசைக்கருவிகளுடன் கூடிய கலைக்கூடம், மழைநீர் தேங்காத வண்ணம் சாலைகள், எழில்மிகு வண்ணங்களில் பள்ளிக் கட்டடங்கள், பேண்ட் வாத்திய இசைக் குழு, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இலவச மாலைப் பள்ளி, விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம், ஆங்கில இலக்கண வகுப்புகள், இலவச விளையாட்டுச் சீருடை, இலவசப் புத்தகப் பைகள் என மாணவர்களின் தேவைகளை நிறைவுசெய்து வருகிறார். மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும் இவர் மேற்கொண்ட முயற்சிகளும் உழைப்பும் எண்ணிலடங்காதவை. இவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமே ‘நல்லாசிரியர் விருது’. தந்தை அவர்கள் தொடர்ந்து கல்விப் பணியில் பல சாதனைகள் படைக்க ‘நம் வாழ்வு’ அன்போடு வாழ்த்துகிறது.
- முதன்மை ஆசிரியர்