திருப்பலி முன்னுரை
இன்றைய
நாளில் அன்னையாம் திரு அவை இறந்த நம்பிக்கையாளர்களை நினைத்து அவர்களுக்காகச் செபிக்கவும், நிலையற்ற இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நிலையான வாழ்வைத் தரக்கூடிய ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்று நாம் நம்மோடு பயணித்தவர்கள், நமக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தவர்கள், நம்மைப் பெற்றவர்கள், நமது துன்பங்களில் துணையிருந்தவர்கள் என எத்தனையோ உறவுகளை
இழந்திருப்போம். அவர்களின் இறப்பு ஆழ்ந்த வலியையும் வேதனையையும் தந்தாலும் அவர்கள் கடவுளின் மாட்சியில் பங்குகொள்ள நம்பிக்கையோடு செபிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
வாழ்க்கை
என்பது இறைவன் நமக்குத் தந்துள்ள உன்னதமான கொடை. இந்த மதிப்புமிக்க மண்ணக வாழ்வில் நாம் செய்யும் நற்செயல்கள் விண்ணக வாழ்வின் பரிசாகின்றன. இன்று நம் முன்னோர்களை நினைத்துப் பார்க்கும் நாளிலே, அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளை நமதாக்குவோம். எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்குவதன் வழியாக இம்மையில் நிறைவையும் மறுமையில் நிலைவாழ்வையும் கொடையாகப் பெற்றிட முயல்வோம்.
இன்றைய
நாளில் சிறப்பாக, யாரும் நினையாத ஆன்மாக்களுக்காக நாம் திருப்பலி ஒப்புக்கொடுத்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவோம். இறப்பு கற்றுத்தரும் பாடங்களை உணர்ந்து நமது வாழ்க்கைப் பாதையைச் சரிசெய்வோம். இறைவனடி சேர்ந்த நமது உறவுகள் அனைவரும் இறைவனின் பேரின்பவீட்டில் இளைப்பாற இத்திருப்பலியில் சிறப்பாகச் செபிப்போம்.
முதல் வாசகம்
முன்னுரை
இந்த
உலகில் பிறர் வாழ்வு பெறுவதற்காக உழைத்த நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. தனக்காக மட்டுமே வாழ்வோர் இறைவனைக் காண்பது, அவரது பேரின்பத்தைத் துய்ப்பது கடினம் என்று கூறி நமது உள்ளத்தையும் உறவுகளையும் புதுப்பித்து, தூயவர்களாய் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
இயேசு
ஒளியாக நம்மோடு பயணிக்கிறார். நாம் தூயவர்களாய் வாழ நம்முடைய தூய வாழ்வால் வழிகாட்டுகின்றார். அன்புறவில் நாம் நிலைத்து வாழ அன்பிற்காக உயிரையும் கொடுத்து அன்பை இவ்வுலகில் நிலைத்திடச் செய்தார். அவரின் வாழ்க்கைப் பாதையை நமதாக்கி வாழும்போது அவரோடு பேரின்பத்தில் இருப்போம் என்பதில் ஐயமில்லை என்று கூறி இயேசுவோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவையின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள் அனைவருக்கும் விண்ணகப் பேரின்பத்தைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. கருணையின்
தெய்வமே! நிலையற்ற இந்த உலகில் அழிந்து போகக்கூடிய செல்வங்களில் அதிக நாட்டம் கொள்ளாமல், நிலையான அமைதியைத் தரக்கூடிய உம்மில் வாழத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. கருணையின்
தெய்வமே! எம்
குடும்பங்களில் இறந்த பெற்றோர்கள், உடன்பிறப்புகள், உறவுகள் அனைவரின் தவறுகளை எல்லாம் நீர் மன்னித்து, உமது பேரிரக்கத்தால் நிலையான இளைப்பாற்றியைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
இறைவா! எமது நாட்டின், எமது பங்கின், எமது குடும்பத்தின் வளர்ச்சிக்காய் உழைத்து மரித்த அனைத்து நம்பிக்கையாளரும் யாரும் நினையாத ஆன்மாக்களும் உம்மை முகமுகமாய்த் தரிசிக்கும் பேற்றினைக் காணவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.