நாகரிகச் சமூகம் தன் துறையில் பெயர்பெற்ற தனிமனிதர்களைக் கொண்டாடுகிறது. காலத்தே துறைகள் மாறுகிறது. சமூகம் வேட்டை வீரர்களை, போர்வீரர்களை, விளையாட்டு வீரர்களை, கவிஞர்களை, கதாசிரியர்களைக் கொண்டாடி மகிழ்ந்தது. 19-ஆம் நூற்றாண்டில் நாடக நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் புதுமாற்றம் உருவானது. விளையாட்டில் கிரிக்கெட், கால்பந்து எனவும் விரிவு பெற்றது. நம் நாட்டில் கொண்டாடப்பட்ட ஹாக்கி விளையாட்டு கிரிக்கெட்டால் மெல்ல மெல்ல அழிகிறது.
இந்தியத்
திரை வரலாற்றில் முதல் ஓர் இலட்சம் ஊதியம்
பெற்ற முதல் கதாநாயகி ‘கொடுமுடி கோகிலம்’ என்று அழைக்கப்பட்ட கே.பி. சுந்தராம்பாள்.
இவர் கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு என, தேச விடுதலைப் போரில் ‘கணீர்’ குரலில் மக்களிடையே பாடியவர். காங்கிரஸ் சார்பாக 1951-இல் அன்றைய சென்னை மாகாண சட்ட சபையில் நுழைகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் திரைக்கலைஞர் ஒருவர் ஆட்சி மன்றத்தில் முதல் முறையாகப் பதவி பெற்ற நிகழ்வு, துவக்கப்புள்ளி அதுதான். அந்நாள் முதல் இன்றுவரை வரலாறு தொடர்கிறது.
திராவிட
இயக்க வரலாற்றில் ‘நடிப்பிசைப் புலவர்’ எனப்படும் கே.ஆர். இராமசாமி
பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய கூட்டாளி. தனது நாடகங்கள்வழி தொடக்ககாலத் தி.மு.க.விற்கு நிதி திரட்டிக் கொடுத்த வள்ளல். தி.மு.க.வின் முதல் இராயபுரம் அலுவலகத்திற்கு நாடகம் மூலமும் சொந்தப் பணத்திலும் 25,000 ரூபாய் வழங்கிய பெருந்தகை. 1960-ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.
அன்று
திராவிட இயக்கத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். இராஜேந்திரன் என்போர் குணச்சித்திர நடிகர்களாக மிளிர்ந்தனர். எம்.ஜி. இராமச்சந்திரன் தொடக்க காலங்களில் காங்கிரஸ் பேரியக்க அனுதாபியாக அடையாளம் காணப்பட்டார். காலம் நடிகர் திலகம் சிவாஜியைக் காங்கிரஸ் கட்சிக்கும், புரட்சி நடிகர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களைத் தி.மு.க.விற்கும் நகர்த்தியது.
திரைக்கலைஞர்களில்
அரசியலில் வெற்றி கண்டவர் இருவர். ஒருவர் எம்.ஜி. இராமச்சந்திரன். மற்றொருவர் ஆந்திராவின் என்.டி.ஆர். என
அழைக்கப்படும் என்.டி. இராமராவ். இவர் சைதன்யா ரத யாத்திரை மூலம்
ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டர் வேன் வழிப் பயணம் செய்து, 1983-இல் ஆந்திர ஆட்சியைப் பிடித்தார்.
அண்மையில்
கேரளாவில் பா.ச.க.வுக்காக முதல்
முறையாக திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றார் சுரேஷ் கோபி. மத்திய இணை அமைச்சராகவும் பா.ச.க.வில் பதவி பெற்றார். இவர் தனது அமைச்சர் பதவியிலும் அரசியலிலும் விருப்பமில்லாமல் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சில நாள்கள் இவரைக் காணவில்லை எனவும் பரபரப்பாகப் பேசப்பட்டன. இதுதான் நடிகர்களின் நடப்பு அரசியல். தமிழ்நாடு அரசியலில் திராவிடக் கட்சிகளின் தாக்கங்கள் திரை உலகில் இருந்தே உருப்பெறுகிறது.
எம்.ஜி. இராமச்சந்திரன் அண்ணா மற்றும் கலைஞரின் திரைக்கதை, வசனங்களால் திரைப்படங்களில் தொடர்
வெற்றி முத்திரை பதித்தார். தி.மு.க.வும் தன் தேர்தல் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். என்ற
தம் துருப்புச் சீட்டை வைத்து தமிழ்நாட்டு அரசியலில் ஆட்டம் காட்டியது. நடிகர் அரசியலுக்கு வரலாம், வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். வழிகாட்டினார். அவருக்குப் பின்பு செல்வி ஜெ. ஜெயலலிதாவும் அரசியலில் தடம் பதித்தார். வெற்றியோடு கடும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தார்.
எம்.ஜி.ஆர்.-ஐ
தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் 1988-ஆம் ஆண்டு ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ எனத் தனிக்கட்சி கண்டார். அன்றைய பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஓர்
அணியான ஜானகி அம்மையார் அணியோடு கூட்டணி கண்டு, 1989 - சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜி கணேசன் குறைந்த வாக்குகள் பெற்று வெற்றியைப் பறி கொடுத்தார். வி.என். ஜானகி
அம்மாவும் திரைத்துறை கதாநாயகியே.
நடிகர்களின்
அரசியல் என்பது தனித்துவமான கதாநாயகப் பிம்ப அரசியலை முன்னெடுப்பதாகும். நடிகர் விஜய்காந்த் தன் கல்யாண மண்டபம் முன் பகுதி இடிப்பிற்குப் பின் தி.மு.க.மீது கொண்ட பகையையும், அதற்கு முன்னான கலைஞர் கருணாநிதி பாசத்தையும் ‘தங்கத் தலைவனுக்கு விழா’ என்பதே சான்று உரைப்பதாகும். திரை நாயகர்கள் திரையில் மட்டுமல்ல, வாழ்விலும் அரசியலிலும் தங்களை ‘கதாநாயகன்’
என்ற மாயத்திலே வாழ்வது, எதார்த்தம் மறப்பது, சுற்றியுள்ள காக்காபிடிக் கும்பலின் மயக்க வார்த்தைகளை நம்புவது, கற்பனைக் கோட்டைகளில் வசிப்பது என நாட்டு நிலவரம்
அறியாமல் அரசியலில் குதிக்கிறார்கள்; கட்சி ஆரம்பிக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். தனது
அரசியல் வாரிசு என அறிவித்த நடிகர்
பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்துச் சோபிக்கவில்லை. பல்துறை வித்தகர் எனப்படும் நடிகர் டி. இராஜேந்தர் காட்டிய அரசியல் கட்சி என்ற வித்தை பலிக்கவில்லை. நடிகர் சரத்குமார் போட்ட பல்டிகள் பா.ச.க.வோடு முடிந்துவிட்டது. நடிகர் கமலஹாசன் ஆளும் தி.மு.க.வின் பிரச்சார அணியாகத் தன் மக்கள்நீதி மையத்தை மடைமாற்றி விட்டார். நடிகர்
கருணாஸ் தனக்கு ஒரு சீட் வேண்டும் எனத் தி.மு.க. கூட்டணியில்
சீட் போடுகிறார்.
இராமராஜன்,
எஸ்.எஸ். சந்திரன், எஸ்.வி. சேகர், வாகை சந்திரசேகர், தியாகு, நெப்போலியன், குஷ்பு, கஸ்தூரி, கௌதமி, விந்தியா என்ற நடிகர் பட்டாளமும் தமிழ்நாடு அரசியலின் வண்ணமிகு பக்கங்கள். ஏன் கட்சி ஆரம்பித்தோம்? எதற்குப் பிரச்சாரம் செய்கிறோம்? யாரோடு கூட்டணி? இது பகலா? இரவா? என அறியாமல் கட்சி
ஆரம்பித்தவர் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். இவருக்கெனச் சாதி இளைஞர் பட்டாளம் இருந்தது என்பது வரலாறு. நடிகை ரோஜா பரபரப்பு அரசியலில் ஆந்திர அரசியலைக் கலக்குவது கலகல பக்கம்.
ஒருகாலத்தில்
தமிழ்நாடு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். மூட நம்பிக்கை ஒழிப்பு, தேசபக்தி, நன்கொடைத் தன்மையால் வள்ளல் எனப் புகழப்பட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். இவர் மட்டுமே திராவிட அரசியலில் இருந்தும், அரசியலில் இல்லாத கதாநாயகர்கள் என்று கலைஞர் கருணாநிதியால் பாராட்டப்பெற்ற விதிவிலக்கு நடிகர். நடப்பு அரசியலில் தாங்கள் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்றால், தமிழ்நாடு முதல்வராகும் கனவு நடிகர்களுக்கு முளைக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டின் வரலாறு, நிலப்பரப்பு குறித்த அடிப்படை அறிவு இல்லாதவர்கள். குக்கிராம, கிராம, நகர, மாநகரத் தெருக்களின் நீள அகலங்கள் தெரியாதவர்கள். மக்களின் வசிப்பிடங்கள், தொழில், பொருளாதாரம், வருமானம் குறித்து அறியாதவர்கள். சமூக, கலாச்சார, பண்பாட்டு, வழிபாட்டுச் சூழல்களைப் புரியாதவர்கள், மக்களின் மன ஓட்டங்கள், ஒவ்வொரு
குடும்பத்தின் நிலை காணாதவர்கள், யாரோ சொல்ல ஏதோ புரிந்த அளவு செயல்படுபவர்கள்.
இவர்கள்
மக்களைக் காப்பாற்றுவார்களா? ஒரு நடிகர் மத்திய அரசு அதிகாரத்திற்கும், மாநில அரசு அதிகாரத்திற்கும் வேறுபாடு அறியாமல் தபால் கார்டு விலையைக் குறைப்பேன் என்று கூறினார். இதிலும், தன் கட்சிக் கொள்கை குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்குப் பதில் கூறாமல், ஏதேதோ பிதற்றினார்.
இப்பொழுதும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இதேபோன்ற கேள்விக்கு
“நான் அதிகம் படித்தவன் இல்லை” என
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். மற்றொரு நடிகர் பத்திரிகையாளர் சந்திப்பு என்றாலே ஏதோ தெரு சண்டை அளவு இழுத்துவிட்டார். பொதுவாழ்வு என்பது போராட்டம் என்பதைப் புரிந்து நடிகர் ரஜினிகாந்த் ‘இந்தப் பழம் புளிக்கும்’ என அரசியலில்
இருந்து ஒதுங்கிக்கொண்டார்.
நடிகர்கள்
அரசியலுக்கு வருமுன் தமிழ்நாட்டில் உள்ள பட்டிகள், பாளையங்கள், மங்கலங்கள், குப்பங்கள், மடங்கள், குளங்கள், கோவில்கள், பேட்டை, கோட்டை என்றுள்ள ஊர்ப்பெயர்களை அறிந்து, அதன் அடிப்படைகளை, சமயங்களை, சாதிகளை, தொழில்களை, வாழ்வாதாரங்களை, மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து வரட்டும்.
எல்லாத்
தொழில் செய்வோரும் அரசியலுக்கு வரலாம் என்பதே இந்தியச் சனநாயகம்.