news-details
சிறப்புக்கட்டுரை
கரூர் துயரம்: கற்கத் தவறிய அடிப்படைப் பாடங்கள்

எனது பேனாமுனை முதலில் எந்த அறிவுரைகளுக்குள்ளேயும் செல்ல மறுக்கிறது. கரூர் துயரத்தில் உயிர்களை இழந்து தவிக்கும் அன்பர்களுக்கு ஒரு சகோதர இரங்கலை, ஆழ்ந்த வருத்தத்தை ஊடக நண்பர்களோடு இணைந்து பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 41 உயிர்களை இழந்த குடும்பங்களோடு நெஞ்சார உடனிருக்க விழைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைந்து இல்லம் திரும்ப இறைவனை மன்றாடுகிறேன். இவ்வேளையில், கரூர் துயரம் சார்ந்த எந்தத் தரவுகளுக்கும் செல்லாமல், எவ்வித அரசியல் உள்நோக்கங்களையும் மனத்தில் ஏற்காமல் உங்களுடன் பயணிக்கும் சகோதரனாக எனது கருத்துகளைப் பதிவிடுகிறேன்.

பாடம் 1: உயிர்களைப் பேணுவோம்

நமது பரந்துபட்ட இந்திய நாட்டில், உலகிலேயே மக்கள்தொகையில் முதல் நிலையில் இருக்கும் வேளையில் இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் தவிர மற்றெங்கிலும் நடக்கும் இறப்புகளுக்கு அதிகபட்ச மக்கள்தொகையைக் காரணம் காட்டிவிட்டுச் சென்றுவிட முடியாது. இதில் தனிமனிதத் தவறு (Human error) மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பின்னாளில் ஏற்பட இருக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. மனித உயிர் விலைமதிப்பற்றது. ஈடு இணை செய்ய முடியாதது. எனவே, உயிர்களைப் பேண வேண்டியது நமது கடமை எனக் கருதுவோம். மக்கள் ஒன்றுகூடும் இடங்களை முதலில் ஆய்வு செய்வோம். பெருமளவு மக்கள் அடர்த்திப் பெருகிடும் இடங்களை, நேரத்தை, சூழல்களை முன்கூட்டியே கணித்தல் சால்பு. இந்திய நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 492 மக்கள் இருப்பதாக அளவிடப்படுகிறது. அச்சூழலில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 50 மடங்கிற்கு மக்கள் கூடும் இடங்களை அரசு இயந்திரங்களான ஆட்சியர் தொடங்கி காவல்துறைவரை மீளாய்வு செய்ய வேண்டிய கடமையினை உதறித்தள்ளிவிட முடியாது.

அரசியல், மதம், தன்னார்வ அமைப்புகள், போராட்டக் குழுக்கள் - இவ்வாறு யாருடைய கூடுகையையும் இயல்பான ஒன்றாக எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்றெண்ணும்போது, எத்துணை பொறுப்பு மிக்க பணியை அரசு இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். ஆகையால், பாரபட்சமின்றி எல்லாக் கூடுகைகளையும் ஒழுங்கு செய்யும் பொறுப்பினைக் காவல்துறைக்கு முழுமையான அதிகாரத்தோடு மக்கள் நலன் கருதி வழங்கிடல் வேண்டும்.

கூட்டம் நடக்க இருக்கும் பகுதியைச் சிறப்பு கவனிப்புப் பகுதியாகக் கருதிடல் வேண்டும். மக்கள் உள்நுழையும் வழி, வெளியேறும் வழி, உள்ளே புழங்கும் இடம் போன்றவை பாதுகாப்பானதாகவும் சாதகமானதாகவும் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணித்திடல் வேண்டும். புழங்குவதற்கும் அதிகப்படியான உள்நுழைதலும் இரும்புக் கரம் கொண்டு மக்கள் பாதுகாப்புக் கருதியே தடுக்கப்படல் வேண்டும். மக்கள் கூடிடும் இடங்களில் அவர்கள் அமர்வதற்கும், இயற்கைத் தேவைகளைச் சந்திப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், நீண்டநேரக் காத்திருப்புகள் இருப்பின் உணவு, குடிநீர்த் தேவைகள் எவ்வாறு சந்திக்கப்படுகின்றன என்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் கூட்டப் பொறுப்பாளர்கள் களமிறங்கி உடனடியாக அத்தேவைகளை மக்கள் சந்தித்திட ஆவன செய்தல் முறையே.

மக்கள் கூடிடும் இடங்களில் வழிப்போக்கர்கள், வாகனங்கள், கடைகள் மற்றும் அங்கு வசிப்போர் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இயங்கிட உரிமை உண்டு என்ற நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பும் வழங்க வேண்டியதையும் நாம் மேலோட்டமாகக் கருதிட முடியாது. கூட்டம் நிறைவுற்ற பின் மக்கள் வெளியேறும் பகுதிகள் தொகுதி தொகுதியாகப் பிரிக்கப்பட்டு வேகமும் அழுத்தமும் இல்லாத நிலையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்திடல் மிக மிக அவசியமானது.

யாரும் அசம்பாவிதங்களையோ விபத்துகளையோ உண்டாக்கிடவோ அல்லது அதை நோக்கியோ நகர்வதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இவை யாவும் தவிர்க்கப்பட முடியும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அரசின், தலைவர்களின் முதற்கடன் என்பதை இவ்வேளையில் நினைவூட்டல் அவசியம்.

பாடம் 2: பாதிக்கப்பட்டோரை இழித்துரைத்தல் (Victim blaming) மோசமான அணுகுமுறை

ஒரு கூட்டம் கூட்டப்படுவதென்பது பொதுவெளியில் நிகழ்கிறபோது, பெருவாரியான மக்கள் தன்னெழுந்த நிலையில் ஒன்று கூடுவதென்பது இயல்பு. இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? இருந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்திருப்பார்களா? என்பதெல்லாம் தெருவோர விவாதங்களுக்கும் பழித்துரைத்தலுக்கு மட்டுமே பொருத்தமானதே ஒழிய ஊடகங்களும், பொறுப்பில் இருப்போரும் இத்தகைய மனநிலையை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இழந்த சொந்தங்களை நாம் திருப்பித் தந்துவிட முடியாது என்ற நிலையில், உறவுகளை இழந்து தவிப்போரின் ஆறுதலாக நாம் பதிவிடும் சொற்கள் இல்லாவிட்டால், ‘எங்கே தொலைந்தது நமது மனித நேயம்?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.

ஒரு கூட்டத்தின் அடர்த்தி பெருகிக்கொண்டே வரும்போது அதைத் தடுத்தாட்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் தன்னெழுச்சியாக ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முனையும் வேளையில், எதிர்பாராதவிதமாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. இதில் எங்கே வந்தது அவர்களுடைய அறிவற்ற செயல், முட்டாள்தனம், வெறிகொண்ட நிலை என்பதெல்லாம்?

பொதுமக்களை அறிவற்றவர்கள், உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாதவர்கள், பொறுப்பற்றவர்கள் என்றெல்லாம் விமர்சிப்பது என்பது சாமானியர்களை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமே ஒழிய, உண்மையான காரணம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது என்பதனை இவ்வேளையில் உணர்தல் அவசியம். 90%-க்கும் மேலாகப் பாதிக்கப்பட்டோர் பொதுவாக வறுமையின் பிடியில் இருப்பவர்கள்தான் என்றெண்ணும்போது, ஏறெடுக்கப்படும் கூட்டங்களின் பொதுமாந்தர் யார் என்பதும், அதன் பயனாளிகள் உள்ளபடியே யார் என்பதும் நம் அனைவருக்கும் கண்கூடாகவே தெரிகின்றது.

சாதாரண மக்களின் குரலொலியாக, வாய்ச் சொல்லாக அமைப்புகளும் தலைவர்களும் செயல்பட வேண்டுமே ஒழிய, அவர்களைத் துச்சமெனக் கருதி அவர்களைக் காய்களாகப் பயன்படுத்தித் தங்கள் தனிப்பட்ட நன்மைகளை வெற்றியாகப் பெறுவதென்பது மக்கள் துரோகச் செயல்பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் பொறுப்பு அமைப்புகளோடு ஒத்துழைப்பு நல்கிட ஊக்கப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அவர்களைப் பழித்துரைத்தல் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாடம் 3: பொதுவெளியில் உணர்ச்சிகளைக் கையாளப் பழகுதல் யாவருக்கும் நலம்

ஊடக யுகத்தில் நாம் வாழும் வேளையில் இந்த நேரம், இந்தச் சூழலில் மக்களின் தேவைகளை நிறைவு செய்து பணம் சம்பாதிக்கும் சித்து விளையாட்டுகளை ஊடக வியாபாரிகள் கையில் எடுத்துள்ளனர். ஒரு தனிநபரின் ஒவ்வோர் அசைவையும் பதிவிட்டு காசு பார்க்கமுடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித்து வருகின்றன. தனிநபர் வாழ்க்கையையும் கூட தகவலாக்கி, செய்தியாக்கிப்பதிவிட முடியும் என்ற நிலையில் அதைக் கண்டு இரசிக்க இலட்சக்கணக்கானோர் வெட்டியாக வெளியே திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தானே இவ்வேளையில் நாம் உணர வேண்டியிருக்கிறது.

தனிப்பட்ட ஒரு பெரும்புள்ளியின் வாழ்க்கையே ஊடக முதன்மைத்துவம் (Media value) பெறும் நிலையில் இவ்வாறு இருக்க, பொதுவெளியில் பெரும்புள்ளிகளின் (VIP) சார்பாக நடைபெறும் கூட்ட நிகழ்வுகளைப் பதிவிடுவது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்பதும் தராசின் சமநிலை தவறாமல் பார்க்கப்பட வேண்டும் என்பதும், அதை அதிகமாகப் பேசி ஊக்கப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியது என்பதும் இவ்வேளையில்  உணர  வேண்டும். பெரும்பான்மை ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டங்கள் மறைந்து திறன்பேசி  (Smartphone) வைத்திருக்கும் யாவரும் ஊடகவியலாளரே என்ற நிலை உருவாகி உள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், சமூகத்தளத்தில் அதைப் பதிவிடுவது குறித்தப் பொறுப்பும் அக்கறையும் எப்போதும் இருந்திடல் வேண்டும்.

ஊடகங்கள் வாயிலாக உறவுகளுக்கு வாழ்த்து அனுப்பும் பழக்கம் கொண்டவரை நாம் ஊடகவியலாளராகக் கருதவில்லை; மாறாக, கருத்தை உரக்கக்கூற சமூகத்தில் நிகழும்  பல விசயங்களை ஏற்றியும் இறக்கியும், தன் பார்வை, தன் கொள்கை, ஒரு கட்சியின் சார்பு என்பதையெல்லாம் அதிகப்படியாகப் பகிர்ந்துகொண்டு மக்கள் மத்தியில் பரப்பும் நபர்கள் தங்கள் உரிமைகளைத் தாண்டிப் பயணிக்கக்கூடாது என்பதே முதலில் கற்க வேண்டியது.

அடுத்தபடியாக நடிகர்கள், தலைவர்கள், தனி நபர்கள் போன்றோரின் பல்வேறு தேடல்களில் முதல் நிலையில் இருப்பவர்கள்தான் அன்றாடங் காய்ச்சிகள், இழுத்த இழுப்புக்கெல்லாம் பணிவார்கள் என்ற தவறான நோக்கில் அவர்களை வைத்து தங்கள் பயன்களை அடைய நினைப்பதென்பது இழிவான செயலும் அணுகுமுறையும் என்பதும், அவர்களின் சார்பாக நிற்காமல் அவர்களது துயரங்களில் ஓடி ஒளிந்து கொண்டு, தன் சார்பை ஊடகங்கள் வாயிலாக நியாயப்படுத்துவது என்பதும் எவ்விதத்தில் ஏற்புடையது?

ஊடகப் பதிவுகள் மிக வேகமாகப் பகிரப்படும் இச்சூழலில் நட்பை, அன்பை, மனிதநேயத்தை, நாடாளும் நல்ல கொள்கைகளை, தனிப்பட்ட வெற்றிகளை, குடும்ப/சமூகக் கொண்டாட்டங்களைப் பகிர்தல் எல்லாருக்கும் பொருத்தமான ஒன்று. துயரச் சம்பவங்களைக் காட்டிலும் அதை மீண்டும் மீண்டும் பதிவிட்டு மக்கள் மனத்தில் வெறுப்பை, வன்மத்தை விளைவிக்கும் நபர்களை தீநுண்மிகளைப் (virus) போலவே கருதித் தள்ளி நிற்க நினைப்பதும், பதிவுகள் எல்லை மீறும் வேளையில் தேவைப்பட்டால் இவர்கள் சட்டத்தின் முன் கொணரப்பட வேண்டியவர்கள் என்பதும் சமூக அமைதியைப் பாதுகாக்கும்.

இறுதியாக, கரூர் துயர் நிகழ்வு இனியும் தொடரக்கூடாது என்பதை உறுதியாக மனத்தில் ஏற்போம். பொறுப்புள்ள குடிமக்களாக வாழப் பழகுவோம்.