“ஒரு திருடனின் ஆயுதம்
ஒரு
கூர்மையான சக்தி;
ஓர்
அரசியல்வாதியின் ஆயுதம்
தனது
செருக்குப் பிடித்த பணம்;
ஓர்
ஆசிரியரின் ஆயுதம்
தூய்மையான
ஞானம்; ஆனால்,
ஒரு
கத்தோலிக்கரின் ஆயுதம்,
வல்லமை
மிக்க செபமாலை!”
இப்பொழுது
நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். செபமாலை கண்டுபிடித்து ஏறக்குறைய 700 முதல் 800 ஆண்டுகள் ஆகின்றன. முதன்முதலில் செபமாலை என்பது 13-ஆம் நூற்றாண்டில் புனித தோமினிக் அவர்களுக்குப் புனித கன்னி மரியா காட்சி அளித்தார். அந்தக் காட்சியில் மாதா புனிதரிடம், ‘செபமாலை ஓர் ஆன்மிக ஆயுதம்’ என்று உணர்த்தினார். இந்த ஆயுதத்தை அல்பிஜென்ஸ் என்னும் கூட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்தினர்.
முதலில்
நாம் ‘அல்பிஜென்ஸ்’ என்றால்
யார் எனக் காண்போம். அல்பிஜென்ஸ் என்பது அல்பி என்னும் நகரத்திலிருந்து உருவாகியது. இவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாமல் ஓர் இறைவனின் தூதராக ஏற்றுக்கொண்டார்கள். மேலும், கடவுளின் சிலுவைப் பாடுகள், நற்கருணை, கடவுளின் விண்ணேற்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், பல அவதூறுகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
இந்த அவதூற்றைப் பல கத்தோலிக்கரும் நம்பி
அவர்களைப் பின்தொடரத் தொடங்கினார்கள். அதைப்பார்த்து மனம் நொறுங்கிய கன்னி மரியா, புனித தோமினிக் மூலமாகச் செபமாலை என்னும் வல்லமையுள்ள ஆயுதத்தை அறிமுகப்படுத்தினார். புனித தோமினிக் செபமாலையை மதம் மாறிய கத்தோலிக்கரிடமும் அல்பிஜென்ஸிடமும் போதித்தார். அப்பொழுது பல மக்கள் மனம்
மாறினார்கள். தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். இந்த மனமாற்றத்தின் முக்கியக் காரணம் மறையுண்மைகள். இந்த மறையுண்மைகள் நேரடியாக அல்பிஜென்ஸ்களின் அவதூறை முறியடித்தது. அதன் பிறகு அல்பிஜென்ஸை செபமாலை மூலம் புனித தோமினிக் வென்றார்.
1569-ஆம் ஆண்டு
திருத்தந்தை ஐந்தாம் பயஸ் (Papul Bull Consueverunt romaniiontifices) என்னும் செபமாலையின் கட்டமைப்பை உருவாக்கினார். லெப்பான்டோ போரில் 1571-ஆம் ஆண்டில் நடந்த இந்தப் போரில் உள்ள கத்தோலிக்க வீரர்களின் எண்ணிக்கை குறைந்தது. அப்பொழுது அவர்கள் செபமாலையைச் செபித்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அதனால் அந்நாளை (அக். 7) திருத்தந்தை பயஸ் வெற்றியின் மாதா திருநாளாக மாற்றினார். அந்நாளைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை கிரகோரி XIII செபமாலையின்
மாதா திருவிழாவாக மாற்றினார். திருத்தந்தை புனித
இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘ஒளியின் மறையுண்மைகளை’ 2022-ஆம்
ஆண்டு அறிமுகப்படுத்தினார். பிறகு 2002-2003 ஆண்டை, செபமாலையின் ஆண்டாகப் பெயர் சூட்டினார். மேலும், செபமாலை கூறுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்த செபம் என்றும் கூறினார்.
இப்பொழுது
நாம் செபமாலையின் ஓர் அற்புதத்தைப் பார்ப்போம்! 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது எட்டு சேசு சபை அருள்பணியாளர்கள் ஜப்பானில் குருத்துவப் பணி செய்துகொண்டு இருந்தனர். அப்பொழுது ஒருநாள் அணுக்கரு குண்டு ஹிரோசிமாவில் வெடிக்கப் போகின்றது என அறிந்து அச்சம்
கொண்டு இருந்தனர். ஏனென்றால், அவர்களின் பங்கும் ஆலய விடுதியும் ஹிரோசிமாவும் ஒரு கி.மீ. தொலைவில்
உள்ளன. அதனால் அவர்கள் செபமாலை செபிக்கத் தொடங்கினர். அந்தக் குண்டு வெடித்தப் பின்பு, அவர்கள் அருகில் இருந்த வீடு மற்றும் அனைத்துக் கட்டடமும் சிதைந்தன. ஆனால், சிப்பியில் பத்திரமாக இருக்கும் முத்தைப் போல் அவர்களுக்கும், அவர்கள் இருந்த கட்டடத்திற்கும் ஒன்றுமே ஆகவில்லை. இந்நாள்வரை
எப்படி அணுக்கதிரிலிருந்து அவர்கள் தப்பினர் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
நாம்
செபமாலையைச் சாதாரணமாக எண்ணக்கூடாது. அது அசாதாரணமானது; தினமும் ஒரு செபமாலை செபியுங்கள், பிறருக்கும் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். செபமாலையைச் செபிக்கும் போது நமது புனித கன்னி மரியா உடன் வருவார் என்று உணர்ந்து செபிப்போம். புனித கன்னி மரியாவின் முழு ஆசிரைப் பெறுவோம். நாமும் நமது பிரச்சினைகளை, லெப்பான்டோ போர் வீரர்களைப் போன்று செபமாலையால் கையாள்வோம். புனித தோமினிக் அல்பி ஜென்ஸ்சியர்களை வீழ்த்தியதுபோல, நாமும் நமது பிரச்சினைகளை வீழ்த்துவோம்.