news-details
ஆன்மிகம்
கரையும் பிஞ்சு இதயங்கள் கரையாத அதிகாரக் கர்வங்கள்!

மீண்டும் மீண்டும் ஒலிக்கும் சப்தங்கள்; மீண்டும் மீண்டும் விழும் குண்டுகள்; பதற்றத்துடன் துடிக்கும் இதயங்கள்; எப்போது? இங்கே? என்ற அச்சமிகு எண்ணங்கள். இத்தகைய சூழலில், “போர் ஒரு முடிவல்ல; ஆயுதம் வெற்றியை அளிக்காது, பசியை ஆயுதமாக்காதீர்கள். இத்தனைகளுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் சிதறுகிறது மனித உடல்கள்என ஒலிக்கிறது திருத்தந்தையின் குரல்.

கோவிலென்பேன், பள்ளிக்கூடமென்பேன், மருந்தகமென்பேன் - எல்லாம் உயிர் காக்ககூடியவை. ஆனால், இங்கேதான் இப்போது உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்எனும் திரு. இறையன்பு அவர்களின் வார்த்தைகள் நினைவலைகளில் அசைவாடுகிறது. வயிற்றுப்பசி, செவிப்பசியை மூடிக்கொள்ளும். ஆனால், செ  ருக்கு செவியையும், கர்வம் கண்களையும் அடைத்துவிடுகிறது. கிழிந்த உடல்களின் புகைப்படங்களையும் உணர்ச்சிநிறை வார்த்தைகளையும் தன்னில் பதிவு செய்கின்றபொழுது காகிதங்கள் கூட கரைகின்றன. ஆனால், சுற்றமும் நட்பும் வார்த்தையோடும் வேடிக்கையோடும் நின்றுவிடுகிறது.

பசியை ஒருபோதும் ஆயுதமாக்காதீர்கள்என்றார் திருத்தந்தை லியோ. ஆனால், மனித ஆதங்கம், “சகோதரருக்குப் போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதபோது, அவர்கள் உடலுக்குத் தேவையான எவற்றையும் கொடாமல் அவர்களைப் பார்த்து நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக்கொள்ளுங்கள் என்பார் என்றால் என்ன பயன்?” (யாக் 2:15-16) என்ற வார்த்தைகளோடு நின்றுவிடுகிறது.

பசி வெறும் உணவு பற்றாக்குறை அல்ல; இது ஓர் ஆயுதம் இல்லாப் போர். உயிர் வாழ்வதற்கான போராட்டம். அநியாயமும் சுயநலமும் நிறைந்த பேராசையின் உச்சம். பசியின் மத்தியில் உணவுப் பகிர்வு இறைவார்த்தையை நம் வாழ்வாக்குவது (எசாயா 58:5).

பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதுதான் இறைவன் விரும்பும் நோன்பு. கடவுளைத் தொழுகின்ற மனிதச் சமூகம் கருணையின்றி கருத்துப் பரிமாற்றம் செய்கிறது. இத்தனைக்கும் காரணம் என்ன?

காரணம் என்ன என்பதைவிட, யார் என்பது தான். யார் பெரியவர்? என்ற அதிகார மோகம். சவுல் தாவீதின்மீது கோபம் கொண்டு கொல்லத் திட்டமிட்டார். காரணம், சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் (1சாமு 18:7) என்ற புகழ்ச்சிப் பாடலில் அமைதியைவிட அதிகாரமும் அநீதியும் மேலோங்கிக் காணப்படுகிறது. எவன் ஒருவன் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறானோ, அவனே உண்மையின் தோழன்.

இன்று மிருகங்களைப் பாதுகாக்க எழும் கூட்டம் மனிதர்களைக் காக்க கண்மூடுவது ஏன்? எழுதும் பேனாவும் கண்ணீர் சிந்துகிறது. பிஞ்சு இதயங்களின் குருதியும் குரலும் வழி தேடுகிறது. ஆனால், மனிதன் கரம் கொடுக்க மறுக்கிறான். கருணை காட்ட கடினம் ஏன்?