news-details
ஆன்மிகம்
ஏழையரின் சார்பாகத் திரு அவை!

ஏழைகளின் புனிதர் தூய அசிசி பிரான்சிஸ்-இன் திருவிழாவான அக்டோபர் 4-இல் திருத்தந்தை லியோ அவர்களால் கையெழுத்திடப்பட்டு   அக்டோபர் 09 -இல் வெளியிடப்பட்ட  நான் உன்னை அன்பு செய்தேன் (DILEXI  TE) எனும் திருத்தூது அறிவுரை மடல் ஏழைகள், துன்புறுவோர், புலம் பெயர்ந்தோர், விளிம்புநிலை மக்கள் சார்பாக  திரு அவை நிலைப்பாடு (Option) எடுக்க வேண்டும் என்கிற புரட்சிகர அழைப்பை விடுக்கிறது.

திருத்தந்தை பிரான்சிஸ்  எழுதிய இயேசுவின் திரு இருதயம் பற்றிய  அப்போஸ்தலிக்க மடலான  ‘Dilexit nos-ஐத் தொடர்ந்து ஏழைகள் சார்பு நிலைப்பாட்டை வலிறுத்தி இந்த அழகிய அறிவுரை மடலை எழுதத் தொடங்கி இருந்தார். திருத்தந்தை லியோவும் அதை பிரான்சிஸ் அவர்களின் கனவுகள் மற்றும் கருத்துகளை உள்வாங்கி தனக்கே உரிய பாணியில் மெருகேற்றி இந்த அறிவுரை மடலை எழுதியுள்ளார். இரண்டாம் வத்திக்கான் சங்கம் தொடங்கி கத்தோலிக்கத் திரு அவையில் ஏழைகள் சார்பு பற்றிய ஓர் அருமையான தொடர்ச்சி இருப்பதை இந்த மடல் வெளிப்படுத்துகிறது.

ஐந்து தலைப்புகளில்...

121 எண்களில் 21,000 வார்த்தைகளைக் கொண்ட இம்மடல் காலத்தின் அறிகுறிகளை ஆய்ந்தறிந்து  இன்றைய சூழலுக்குச் சரியாக, திரு அவை தன் அன்புப் பணியால் பதில் கூற அழைப்பு விடுக்கிறது என்று கூறலாம். கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பு என்பது துன்புறுவோர், நலிந்தோர், ஏழைகள் மீதான அன்பு என்பதே இந்த மடலின் சாராம்சம் எனலாம். ஏழைகள் சார்பான நிலைப்பாடு அல்லது ஏழைகளுக்கு முன்னுரிமை (Preferential Option for the poor) என்கிற கோட்பாடு இலத்தீன் அமெரிக்கப் பின்னணியில் எழுந்தாலும், இது யாரையும் புறந்தள்ளவில்லை. எல்லாரையும் உள்ளடக்கிய கோட்பாடே என்கிற புரிதலையும் திருத்தந்தை லியோ ஏற்படுத்துகிறார்.

காயப்பட்ட ஏழைகள் மற்றும் துன்புறும் மக்கள் முகங்களில்  துன்புறும் இயேசுவே தெரிகிறார்என்று கூறும் திருத்தந்தை, ஏழ்மை மற்றும் வறுமையின் பல்வேறு கோரமுகங்களையும் சுட்டிக்காட்டுகிறார்இன்றைய வறுமை மற்றும் ஏழ்மைக்குக் காரணம் பெருகிவரும் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் அதைத் தீவிரப்படுத்தும் பொருளாதாரச் சித்தாந்தங்களே என்பதையும் கோடிட்டுக் காட்டும் திருத்தந்தை, சர்வாதிகாரப் பொருளாதாரம் கொல்லும் (Dictatorship of Economy will kill) என்று எச்சரிக்கை செய்கிறார். உலகில் ஒரு சிறு குழுவினரின் சொத்து அசுர வேகத்தில் வளர்வதையும், அதனால் ஏழை-பணக்காரன் இடைவெளி அசுர வேகத்தில் அதிகரிப்பதையும், எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத சந்தை மற்றும் ஊக வணிகம் பற்றியும் குறிப்பிடுகிறார்

தூக்கி எறியும் கலாச்சாரம் மேலோங்கி வருவதையும், பட்டினிச்சாவுகள் தொடர்வதையும், மனித உரிமைகள் மீறப்படுவதையும், சந்தைப் பொருளாதாரமே தீர்வு என்ற போலியான அறிவியல் தகவல்கள் தரப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

புலம்பெயர்வது அதிகரிப்பது, புலம்பெயர்வோர் நிலை மற்றும் உரிமைகள், போர்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், பெண்கள், சமூக அமைப்புகளால் புறக்கணிக்கப்படுவோர் ஆகியோரின் மாண்பு, உரிமை பற்றியும் பேசுகிறார்.

ஒரு கிறித்தவன், ஏழைகள் சமூகத்தில் இருக்கிறார்கள்; எனவே, சமூகம் தீர்வு காணட்டும் என்று தப்பிவிட முடியாது. ஏழைகள் நம்மில் ஒருவர், நம் குடும்பம், ஏழைகள் திரு அவையின் இதயம். ஏழைகளுக்கான பணி என்பது வெறும் மற்றோர் இரக்கப் பணியல்ல; சமூக மாற்றத்திற்கான பணி என்றும் தெளிவுபடுத்துகிறார்.  

இது இரத்தினச் சுருக்கமே. விரிவாகக் கட்டுரையாக எழுதுகிறேன். அனைவரும் வாசித்து உள்வாங்க வேண்டிய அருமையான மடல்.