news-details
சிறப்புக்கட்டுரை
உலக வெப்பமயமாதல் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதா? (உலகம் உன் கையில் – 12)

இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்குப் பின்னர், 1850-1900 ஆண்டுகளிலிருந்து உலக வெப்பத்தின் அளவு கணக்கிட்டு வரப்படுகிறது.

ஆரம்ப காலத்தில், உலக சராசரி வெப்பம் ஏறக்குறைய 13.9 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. தொழிற்புரட்சி காலத்திற்குப்பின் 150-175 ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறோம்.

ஏன், தொழிற்புரட்சியை மைல்கல்லாகப் பார்க்கிறோம்? உலக வரலாற்றில் தொழிற்புரட்சியின் காலத்திலிருந்துதான் மனிதரின் உடலுழைப்பு செயலாற்றல் இயந்திரமயமாக்கப்படுவது ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து நிலக்கரி, எரி எண்ணெய், எரிவாயு என்பனவற்றின் பயன்பாடு அதிகரித்தது. இன்றுவரை இயந்திரங்களும், அதைச் சார்ந்த செயற்கை உபகரணங்களின் பயன்பாட்டின் வேகமும் குறையவில்லை.

2016-ஆம் ஆண்டில் உலக சராசரி வெப்பம் 14.85 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டது. 2023-ஆம் ஆண்டு இது மேலும் அதிகரித்து 14.98 டிகிரி செல்சியஸ் ஆக, அதாவது தொழிற்புரட்சி காலம் தொடங்கி 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடிவிட்டது.

2024-ஆம் ஆண்டின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் எட்டிவிட்டது என்கிறது ஓர் ஆய்வறிக்கை. எனவே, கடந்த 150 ஆண்டுகளில் மிகுந்த வெப்ப ஆண்டாக 2024 அறியப்படுகிறது. இதன் விளைவையும் நாம் நேரடியாகக் காண்கிறோம். பூமி மட்டுமன்றி, கடலும் சேர்ந்து வெப்பமடைந்து, அதிக நீராவியினால் அதிக அளவில் மழையும் வெள்ளமும் உலகளவில் பல இடங்களில் உருவாவதைக் காண்கிறோம். காலநிலை விஞ்ஞானிகள், 2050-க்குள் எப்படியாவது வெப்பநிலை உயர்வை அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்கின்றனர் (Global warming of 1.5 degree Celsius above pre industrial levels).

ஆராய்ச்சிக் கணக்கீட்டின்படி, உச்சகட்ட வெப்பமான 20 வருடங்களை 1981-க்குப் பிறகு சந்தித்திருக்கிறோம். இதில் 2015-க்குப் பிறகு தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து, எல்லைக்கோடாக வைத்த 2050-ஆம் ஆண்டின் அளவான 1.5 டிகிரி செல்சியஸை 2024-ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.

வெப்பநிலையும் இயற்கை மாற்றங்களும்

அண்மையில் மிச்சிகன் மற்றும் ஓரிகன் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் குழு நடத்திய ஆய்வு உலக வெப்பமயமாதலுக்கும், பறவை இனப் பாதிப்பிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. ‘விஞ்ஞானம் முன்னேறுகிறது (Science Advances) என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்தி இவ்வாறு விவரிக்கிறது: ‘நாளுக்குநாள் மக்கள்தொகை பெருகுவது பொதுவாக, விலங்குகள் இனம் குறைவிற்குக் காரணமாயிருக்கிறது. இந்நிலையில் பறவை இனம் வேகமாக மறைந்து வருகிறது. அமேசான், பிரேசில் போன்ற பகுதிகளில் இம்மாற்றம் அதிகம் காணப்படுகிறது. பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்குக் கூடுகட்டுதல், முட்டையிடுதல், குஞ்சு பொரித்தல், இரை தேடுதல் என்பவையெல்லாம் காலநிலையையும் வெப்பத்தையும் சார்ந்திருப்பதால், சிறிய வெப்ப மாற்றமும் பறவைகள் வாழ்வைப் பாதிக்கிறது. இந்த இனப்பெருக்கச் சுற்றில், பறவை தன் குஞ்சுகளுக்கு இரை தேடச் செல்லும்போது வெப்பமயமாதலால் வழக்கமான உணவின் ஆதாரங்கள் இல்லாமல் போவது பறவைகளின் எதிர்காலத்திற்குக் கேள்விக்குறியாக உள்ளதென்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.’

அளவுக்கு அதிகமாகப் புவி வெப்பமயமாகிறது என்பதை இயற்கையில் ஏற்படும் அசாதாரண சில மாற்றங்களைக் கொண்டே அறிந்துகொள்ளலாம். அதில் ஒன்று உயிரினங்களில் ஏற்படும் மாற்றம். புவியெங்கும் வாழும் சிறிய உயிரினமான பட்டாம் பூச்சி, சுற்றுச்சூழலின் மாற்றத்தை அடையாளப்படுத்தும் கருவியாகவும் விளங்குகிறது.

அதிவேக உலக வாழ்வில் நாம் கண்டும் காணாதிருக்கும் இப்பட்டாம்பூச்சியின் நிறமாற்றம் வெப்பமயமாதலை வெளிப்படுத்துமென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

அமெரிக்க மீன் - வனவிலங்கு கழகம் நடத்திய ஆய்வில், மோனார்க் பட்டாம்பூச்சியை (Monarch. Butterfly)  உலக வெப்பமயமாதலால் பாதிப்படையும் (threatened species) உயிரினம் என்று வரிசைப்படுத்தியுள்ளனர். ஏனென்றால், இவ்வினத்தின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களிருந்தாலும், உலக வெப்பமயமாதலால் குறைந்தும் பாதிப்படைந்தும் வருகிறதென்று கூறுகின்றனர்.

இது ஒருவேளை சிறிய எச்சரிக்கையாக இருக்கலாம். நாம் பாதுகாப்பான இயற்கைச் சூழலில் வாழ்கிறோமென்றால் பட்டாம்பூச்சிகள் நிறம் மாறாமலிருக்க வேண்டும். இந்தச் சிறிய உயிரினம் நம் முன்னோர்களின் முதுமொழியான ‘வாழு, வாழவிடு என்பதை நினைவுபடுத்துவதாகவும் உள்ளது.

உலகளாவிய இரட்டை வேடம் (Double standard)

இன்று நாம் பாதுகப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மந்தநிலை, வெப்பநிலை உயர்விற்கு மறைமுகமாகக்  காரணமாயிருப்பதும், அதற்குப் பரிகாரம் காண்பதென்ற தோற்றமுமான இரட்டை வேடம் நம் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்கிறோம். ‘புலி வருகிறது என்று கூறி, ஒருநாள் உண்மையில் நம் வாசற்கதவு முன் நிற்பதுபோன்று இருப்பதாகிவிடும்.

இப்போது உலகில் பல இடங்களில் அசாதாரணமான, சடுதியில் நிகழும் இயற்கை மாற்றங்களையும் அழிவுகளையும் காண்கிறோம். இவை புவி வெப்பமயமாதலின் விளைவு என்று பேசப்படுவதையும் கேட்கிறோம்.

நாம் இப்போது காணும் இயற்கை அழிவுகள் ஒரு பெரிய பனிப்பாறை கடலில் மிதந்துவரும்போது அதன் நுனிப்பகுதிதான் கடல்மட்டத்திற்கு மேல் தெரியும் (tip of the ice berg) என்பதைப் போன்றதே. ஒருவேளை, நாம் பல எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் போனால் முழுமையான புவி வெப்பமயமாதலின்  விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வெப்பமயமாதலின் காரணங்கள்

பூமியிலிருந்து வெளியாகும் வெப்பக் கதிர்வீச்சு (Radiation) வெளிமண்டலத்திற்கு விலகிவிடுவது இயற்கை. இப்போது வெளிமண்டலத்திற்குத் தப்பிச் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம், பூமியிலிருந்து மனிதரால் வெளிப்படுத்தப்படும் கார்பன்-டை-ஆக்சைடு (Co2), மீத்தேன் மற்றும் பிற கழிவு வாயுக்கள் அளவுக்கதிகமாகப் பூமியிலிருந்து வெளியாவதோடு நிற்காமல், பூமியைச் சுற்றிப் படலமாக இப்போது படிந்துவருகின்றன. இந்த வாயுக்கள் வெளியாவதற்கு ஆதாரமாக விளங்குவது, நிலத்தடி (fossil) எரிபொருள்களான நிலக்கரி, எரி எண்ணெய், எரிவாயு என்பவைகளின் பயன்பாடு அதிகரிப்பினால் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாயுக்கள் பூமியிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சை இடைமறித்துப் பூமியிலிருந்து வெப்பம் வெளியாகாமல் (No exit) தடையாய் உருவெடுத்துள்ளன. இதனால் பூமி நாளுக்கு நாள் வெப்பமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வகை வாயுக்கள் பல வருடங்களோ, பலநூறு ஆண்டுகளோ விலகாமல் இருக்கும் நிலையில் பூமியின் வெப்பநிலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது. இந்தக் கேடு உண்டாக்கும் வாயுக்கள் ‘கிரீன் ஹவுஸ் வாயுக்கள் (Green house gases) எனப்படுகின்றன.

நாம் வாழும் பூமி பகலில் சூரியக் கதிர்களால் வெப்பமடைகிறது. இரவில் குளிர்ந்து வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், சில வாயுக்கள் இவ்வெப்பத்தைப் பசுமை வீட்டிலிருந்து (green house-Earth) செல்லவிடாமல் கண்ணாடிச் சுவர் போன்று வெளிமண்டலத்தில் (atmosphere) படிந்து தடையாயிருப்பதால் ‘கிரீன் ஹவுஸ் வாயுக்கள் (Green House Gases) என்று அழைக்கப்படுகின்றன.

பூமியின் வரலாற்றில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான வெப்பநிலை ஏற்றம் இயல்பாக ஏற்பட்டிருக்கிறது. அப்போது கார்பன் (CO2) அளவு 2-3 டிகிரி செல்சியஸ் தொட்டதென்றும், கடல் மட்டம் 10-20 மீட்டர் வரை உயர்ந்து இருந்ததென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றங்களைச் சந்திப்பதற்கு ஏற்றவாறு இயற்கை அமைந்திருந்தது என்பது வரலாற்றின் ஒரு பகுதி.

இப்போது ஏற்பட்டிருப்பதோ மனிதனால் செயற்கையாக உருவெடுத்ததாகும். உலக வானிலைக் கழகம் (WMO), அக்டோபர் 2024 ஆய்வு, இப்போதைய கார்பன் வெளியேற்றத்தின் வேகம், நாம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறது.

(தொடரும்)