news-details
ஞாயிறு மறையுரை
நவம்பர் 02, 2025, இறந்த நம்பிக்கையாளர் அனைவர் விழா (மூன்றாம் ஆண்டு) சாஞா 3:1-9; உரோ 5:5-11; யோவா 6:37-40 - இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள்!

இறப்பு மனித வாழ்வின் தவிர்க்க இயலாத ஒரு சந்திப்பு. நமது வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பதும் அழுத்தம் கொடுப்பதும் இறப்புதான். இறப்பு என்பது கல்லறையோடு முடிந்துவிடும் மாயை அல்ல; மாறாக, உண்மை, அன்பு, சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களைக் கட்டியெழுப்ப நடத்தப்படும் போராட்டங்களின் நிறைவு. எனவேதான், இறப்பின் அர்த்தம் என்னவென்று சிந்திக்கையில், உண்மையிலேயே அது வாழ்வு பற்றிய கேள்வியாக அமைகிறது. ஆகவே, நமது இறப்பு அழிவாகப் பார்க்கப்படுவதில்லை; அது வாழ்வுக்குச் செல்லும் வழியாகவே பார்க்கப்படுகிறது.

இறப்பை மனநிறைவோடும் மனமகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்ளும் ஒருவர், இவ்வுலக வாழ்வைக் கடவுள் எதிர்பார்க்கும் வகையில் வாழ்ந்துள்ளார் எனப் புரிந்துகொள்ளலாம். நமது வாழ்வு இறைவன் நமக்குக் கொடுத்துள்ள மாபெரும் கொடை. மாண்புமிக்க அத்தகைய வாழ்வை நல்லமுறையில் வாழ நினைவூட்டுகின்றது இன்றைய கல்லறைத் திருவிழா! இன்று நாம் இறப்பைச் சந்தித்த நமது அன்புக்குரியவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறோம். இந்த நாளைப் பற்றித் திருத்தந்தை பிரான்சிஸ், “கடந்த காலத்தையும் நம்மோடு வழிநடந்தவர்களையும் நமக்கு வாழ்வு தந்தவர்களையும் நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களையும் நினைவுகூரும் நம்பிக்கையின் நாள்என்கிறார் (மறையுரை, 02.12.2018).

நமது கத்தோலிக்க மரபின் சிறப்புமிக்க ஒரு பழக்கம் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது. இந்த நாளில் ஏன் நாம் இறந்தவர்களை நினைவுகூர வேண்டும்? திருவிவிலியத்தில் இதற்கான குறிப்புகளும் முன்னுதாரணங்களும் உண்டா? திரு அவையில் இந்தப் பழக்கம் எப்போது வந்தது? இது போன்ற பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகின்றன. இதற்கான புரிதல்களை இன்று தேடுவது நமது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

இன்று நாம் கொண்டாடும்இறந்த நம்பிக்கையாளர்கள் அனைவரின் விழாகத்தோலிக்கத் திரு அவையில் மட்டுமல்லாமல், பிற திரு அவைகளும் கூட இந்நாளில் இறந்தவர்களை நினைவுகூர்கின்றன. இந்த விழாவானது புனித ஒடிலோ என்பவரால் 10-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. அன்றைய நாளில் துறவு மடத்தில் உள்ள துறவிகள் சிறப்புச் செபங்களை, பாடல்களை இறந்தவர்களுக்காக ஒப்புக்கொடுத்தனர். 15-ஆம் நூற்றாண்டில் மூன்று திருப்பலிகளை அருள்பணியாளர்கள் இந்த நாளில் கொண்டாடினர். திருத்தந்தை 15-ஆம் பெனடிக்ட் 1920-ஆம் ஆண்டு இந்த விழாவைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ விழாவாக மாற்றினார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும்கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்தே வழிப்போக்கர்களின் திரு அவை இறந்தவர்களின் நினைவை வணக்கத்தோடு கொண்டாடி வந்துள்ளது (திருச்சபை எண். 50) என்று இவ்வழக்கத்தின் தொன்மையைக் குறித்துக் குறிப்பிடுகிறது.

நமது மரபுகளும் இறைவார்த்தைகளும் இறந்தோரை நினைவுகூர்ந்து செபிக்கவே நம்மை அழைக்கின்றன. தொடக்க காலத் திரு அவையின் வாழ்க்கையையும் வரலாற்றையும் அறிய நமக்கு உதவியாக இருந்தவை கல்லறைச் சுரங்கங்களே (Catacombs). இறந்தோரின் கல்லறைக் குகைகளில் அவர்களுக்கான செபங்கள் குறியீடுகளாக, வார்த்தைகளாகப் பொறிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இறந்தோருக்கு அமைதி, நிலையான வாழ்வு, மீட்பு, கிறிஸ்துவுடன் ஒன்றிணைதல், வானதூதர்களோடு இணைதல் போன்ற வார்த்தைகள் கல்லறைகளில் செபங்களாகப் பொறிக்கப்பட்டிருந்தன. கி.பி. 120 - 200 உள்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரிகியாவில் உள்ள அயரா போலிசின் ஆயர் அபெர்சியூஸ் தான் இறப்பதற்கு முன்னதாகவே தனக்கான கல்வெட்டில், ‘அபெர்சியுசாகிய எனக்காகச் செபியுங்கள்என்று எழுதியுள்ளார்.

முதல் நூற்றாண்டிலிருந்தே மக்கள் கல்லறைகளைச் சந்தித்து இறந்தவர்களுக்காக அடிக்கடிச் செபித்துள்ளனர். ‘தொடக்கத் திரு அவையின் இரு தூண்கள்எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக இருந்தன. திருமறைத் தந்தையான தெர்த்தூலியன் கி.பி. 211-இல் தான் எழுதிய The Crownஎன்ற தொகுப்பில், ‘இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு நாளில் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்போம்என்று எழுதியுள்ளார். நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த எருசலேம் நகரத்துப் புனித சிரில் (கி.பி. 315-386) தனது மறைபரப்புப் போதனையில்இறந்த நம்பிக்கையாளர்களை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலி அந்த ஆன்மாக்களுக்கு மிகுந்த பலன் தரும்என்று நம்புவதாக எழுதியுள்ளார். மேலும், புனித அகுஸ்தினாரின் தாய் புனித மோனிக்கா தன் மகனிடம், “ஒன்றே ஒன்றை மட்டும் உன்னிடம் கேட்கிறேன்: திருப்பலியில் ஆண்டவருடைய பீடத்தில் என்னை நினைத்துக்கொள்என்று வேண்டுகோள் வைத்தார். ஆகவே, இறந்தோருக்காக நாம் பலி ஒப்புக்கொடுத்து வேண்டுவது நம் திரு அவையில் தொன்றுதொட்டு உள்ள மரபு. எனவேதான் இன்றைய நாளில் மிகச் சிறப்பாக இறந்தோரை நினைவுகூர்ந்து பலி ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்றோம்.

இறந்த நம்பிக்கையாளர்களை அன்புடன் நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க இறைவார்த்தையும் நம்மைத் தூண்டுகின்றது. சீராக்கின் ஞானநூல், “உயிர் வாழ்வோர் அனைவருக்கும் கனிவோடு கொடு; உயிர் நீத்தோருக்கும் அன்பு காட்ட மறவாதே (7:33) என்கிறது. “குழந்தாய் இறந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்து... அவர்களுடைய அடக்கத்திற்குச் செல்லத் தவறாதே (38:16). இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர்களுக்காக வேண்டிக்கொள்வது புனிதமும் பயனுள்ள எண்ணமுமாய் இருந்துள்ளது (2மக் 12:45). மோசே, ஆரோனுக்காக இஸ்ரயேல் மக்கள் 30 நாள்கள் துக்கம் கடைப்பிடித்துக் கொண்டாடினர். புதிய ஏற்பாட்டில் இயேசு தம் நண்பன் இலாசருக்காக உள்ளம் குமுறிக் கலங்கி (யோவா 11:33) அழுதார் (11:35). இவ்வாறாக, இறந்த உறவுகளுக்காகத் துயரம் கொண்டாடுவதும் நினைவுகூர்வதும் திருவிவிலிய அழைப்பாகவே உள்ளது.

இன்றைய நாள் கொண்டாட்டம் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? இந்த நாள் ) நினைவு (செபித்தல்), ) நன்றி, ) நம்பிக்கை என்ற மூன்று எண்ணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.

முதலாவதாக, இந்த நாள் நம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நினைவு நாள். ‘பழகிப் புரிந்த உயிர்கள் பல விலகிப் பிரிந்து போயின. நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் நினைவுகளாய் ஆயினஎன்ற நமது பாடல் வரிகள் இறந்தோரின் நினைவுகளின் உன்னதத்தைக் கோடிட்டுக்காட்டுகின்றன. மனித வாழ்வில் உறவுகளை மரணம்கூட உடைத்துவிட முடியாது. மரணம் உடலைப் பிரித்தெடுத்தாலும் நினைவுகளை மரணத்தால் பிரித்தெடுக்க இயலாது. மனிதன் இறந்தாலும் அல்லது உடல் மறைந்தாலும் உறவுகள், நினைவுகள் தொடர்கின்றன. சந்தித்த இழப்புகளை, தொலைத்த உறவுகளை, இறந்த மனிதர்களை நாம் நம் நினைவுகளில் சுமந்தே வாழ்கிறோம். நீங்கா நினைவில் இறந்தோர் வாழ்கின்றனர். ஜலாலுதின் ரூமி என்ற சூஃபி அறிஞர், “நினைவுகள் இருக்கும்வரை பிரிவுகள் சுடுவதில்லை. நான் மரித்த பிறகு என்னைக் கல்லறைக் குழிகளில் தேடாதீர்கள்... மனிதர்களின் மனக்குகைகளில் தேடுங் கள்என்கிறார். கல்லறையில் மனிதன் காணாமல் போனாலும் மனிதர்களது மனக்குகைகளில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் நாம் இறந்தவர்களை நினைவுகூர்கிறோம்.

இரண்டாவதாக, இந்த நாள் ஒரு நன்றியின் விழா. “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம்  அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனித கையால் கட்டப்படாதது, நிலையானது (2கொரி 5:1) என்று பவுல் குறிப்பிடுவது போல, பூமியில் புதைக்கப்பட்ட உடல்கள் விண்ணகத் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்கு கொள்கின்றன என்பது நமது நம்பிக்கை. ஆகவே, விண்ணகத் தூயோரின் நினைவைப் போற்றுவதும், அவர்களைக் குறித்து கடவுளுக்கு நன்றி பாராட்டுவதும் அவர்களோடு நமக்குள்ள சகோதர அன்பைச் செயல்படுத்துவதாக அமைகிறது.

மூன்றாவதாக, இந்த நாள் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அதாவது, இறந்த நமது சகோதர-சகோதரிகள் இளைப்பாறும் இடமான கல்லறைக்கு நாம் செல்லும்போது, இறந்து அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை நாம் புதுப்பித்துக்கொள்கிறோம். இறைத்தந்தையின் அன்பைக் காணும் இடத்தில், நமக்குமுன் வாழ்ந்து இறந்தவர்களை நாம் உறுதியாகச் சந்திப்போம் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவே, மணமகனைச் சந்திப்பதே நம் வாழ்வுப் பயணத்தின் இலக்கு என்றால், அவ்வாழ்வில் வழங்கப்பட்டுள்ள நேரத்தை அன்பில் வளர்வதற்குரிய நேரமாக மாற்றிக்கொள்வோம். மரணம் முடிவல்ல; எனவே, வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்காக இறப்பதற்குக் கற்றுக்கொள்வோம்இறைவன் மனம் மகிழ்ந்து பாராட்ட, மனிதர் உளமாரப் புகழ, நம் மனம் பெருமிதமடைய சிறப்புடன் வாழ்வோம். இறப்பிலும் புதுவாழ்வு பெறுவோம்.