news-details
ஆன்மிகம்
செபமாலை:அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான பாலம்!

அக்டோபர் மாதம் என்றாலே நம் தாய் மரியாவின் வெற்றியின் மாலை - செபமாலையைச் செபிக்கும் மாதம்.  மனிதகுலத்தின் வரலாற்றில் அறிவியல் மற்றும் நம்பிக்கை எப்போதும் இணைந்து பயணித்துள்ளன. அறிவியல் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு வழிகாட்டி ஆகும். அதேசமயம், நம்பிக்கை மனித மனத்தை அமைதியுடன், உறுதியுடன் வாழச் செய்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே பாலமாக விளங்குவது செபமாலை. அது ஒருபக்கம், ஆன்மிக வாழ்வை வளப்படுத்தும் வழிமுறையாகவும்; மறுபக்கம், வரலாற்றின் பல சோதனைகளில் வெற்றியை வழங்கிய ஆற்றலாகவும் திகழ்கிறது.

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரான லூயி பாஸ்டர் கூட தனது வாழ்வில் செபமாலையின் சக்தியை நம்பியிருந்தார் என்பது அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே முரண்பாடு இல்லை என்பதற்குச் சாட்சியாகும். குடும்பம், சமூகம், திரு அவை ஆகியவற்றின் ஆன்மிக ஒன்றிப்பை உறுதிப்படுத்தும் கருவியாகச் செபமாலை இன்றுகூட வாழ்வில் பெரும் பொருள்கொண்டதாக இருக்கிறது.

லூயி பாஸ்டர் மற்றும் செபமாலை அனுபவம்

19-ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க நுண்ணறிவியலாளர், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயி பாஸ்டர் (1822-1895) தனது 25-வது வயதில் வெறி நாய்க்கடிக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்தார். ஒருநாள் பாரிஸ் நகரத்தை நோக்கித் தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, அவர் கையில் செபமாலை வைத்துச் செபித்துக் கொண்டிருந்தார். அதே வண்டியில் அமர்ந்திருந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் பாஸ்டரைப் பார்த்துக் கேட்டான்: “சார், இன்னும் இந்தச் செபமாலை செபிப்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” பாஸ்டர் சிரித்தார், “ஆம்.”

மாணவன் சோகமாக, “இது ஒரு மூடநம்பிக்கை. அறிவியலையும் அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள்என்று கூறி, செபமாலையை அவரிடம் இருந்து வெளியே எறியுமாறு கேட்டான். பாஸ்டர் வருத்தமடைந்தார். மாணவன் பாஸ்டரின் முகவரியைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். சில நாள்கள் கழித்து அந்த மாணவன் தன்னிடமிருந்த முகவரியைப் பார்த்தபோது அதில்அறிவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர், லூயி பாஸ்டர், பாரிஸ், பிரான்ஸ்என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

வரலாற்றில் செபமாலை

செபமாலை சொல்லும் வழக்கம் 13-ஆம் நூற்றாண்டிலிருந்து பரவ ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும்அல்பிஜீயன்ஸ்என்ற தப்பறைக் கொள்கை திரு அவைக்கு அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. டொமினிக் என்ற சாமிநாதர் இதை எதிர்த்துப் போராடினார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. அப்போது மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்தச் செபமாலையை வைத்து நம்பிக்கையோடு செபி, வெற்றி கிடைக்கும்என்று கூறினார். டொமினிக் அதற்கேற்ப செபமாலை செபித்ததால், பலர் மனமாற்றம் அடைந்து இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டனர். இதனால் செபமாலை சொல்லும் வழக்கம் பரவியது.

இந்த விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்று கொண்டாடும் வகையில் 1716-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் கிளமெண்ட் இதை உரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார். 1913-இல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா தன்னைசெபமாலை அன்னைஎன்று அறிமுகம் செய்து கொண்டார்.

புனிதர்கள் மற்றும் செபமாலை

புனிதர் ஆலன் ரோச் செபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகரித்தார். 1571-ஆம் ஆண்டு கிறித்தவர்கள் இஸ்லாமியப் படையைச் செபமாலையின் துணையால் வெற்றி கொண்டனர். இதற்குப் பிறகு செபமாலைமீது மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.  1715-ஆம் ஆண்டு திருத்தந்தை செபமாலை விழாவைத் திரு அவையின் விழா அட்டவணையில் சேர்த்தார். 1858 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் லூர்து, பாத்திமா நகரங்களில் மரியா சிறுமிகளுக்குக் காட்சி கொடுத்து, செபமாலை சொல்லும் நன்மைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கினார்.

செபமாலை சொல்லும் விதி மற்றும் அர்த்தம்

செபமாலை சொல்லும்போது ஒரே வார்த்தையை மறுமுறை மட்டுமல்ல, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பை மரியாவின் வாழ்க்கையுடன் இணைத்துத் தியானிக்கிறோம். தூய லூயிஸ் தே மாண்ட்போர்ட் கூறுகிறார்: “செபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலும் நீங்கும்; இறையருள் மேலும் பெருகும்.” திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் கூறுகிறார்: “செபமாலை சாதாரண விடயம் அல்ல; அதைச் சொல்லிச் செபிக்கும்போது மீட்பின் வரலாற்றை நினைவுகூர்கின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குக் கூறிய செபத்தையும், வானதூதர் கபிரியேல் மரியாவிற்குக் கூறிய மங்கள வார்த்தையையும் நினைவுகூர்கின்றோம்.”

செபமாலையின் மூன்று பண்புகள்

செபமாலை கிறித்தவ வாழ்வின் ஆற்றலும் ஆறுதலுமாக இருக்கிறதுஅது வெற்றி, விசுவாசம், விண்ணக வாழ்வு ஆகியவற்றின் முத்திரையாக நம்மை இறைவனின் அருளுக்கு அருகில் கொண்டு செல்லும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளது. அவைகளைக் கீழே காணலாம்திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தில் (Rosarium Virginis Mariae, ghf« 41) இவ்வாறு கூறுகிறார்: “குடும்பமாகச் சேர்ந்து சொல்லப்படும் செபமாலை நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வளர்க்கும். அது குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கி அன்பு, மன்னிப்பு, சமாதானம் நிறைந்த உறவை உருவாக்குகிறது.”

வெற்றி மாலை

1571-ஆம் ஆண்டு கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே இலாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறித்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறித்தவர்கள் தங்களுடைய கைகளில் செபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் செபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறித்தவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை, ‘அன்னை மரியின் வெற்றியின் விழாஎன்று கொண்டாடப் பணித்தார். “இப்போர் உங்களுடையது அல்ல; அது கடவுளுடையது (2குறி 20:15). செபமாலையும் இறைவனின் வார்த்தையும் இணைந்து, கிறித்தவர்களுக்கு வெற்றியின் அடையாளமானது.

நம்பிக்கையின் மாலை

எங்கள் ஊரில் என் அம்மாச்சி ஒரு செபமாலையைக் கையில் கொடுத்துவிட்டு, “நல்லாச் செபி; இந்தச் செபமாலையைப் பட்டினியா போட்டுடாதப்பாஎன்று சொல்லி தன் நம்பிக்கையை எனக்குச் சொன்னார்கள். செபமாலை சொல்லும் பழக்கம் அது ஓர் உணவு மற்றும் வாழ்க்கையின் விசுவாச முறை. “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்என்று செபமாலையைக் குறித்து வீரமாமுனிவர் கூறுவார். ஆம், செபமாலையை நாம் இடைவிடாது, நம்பிக்கையோடு செபிக்கின்றபோது, அதனால் மீட்புப் பெறுகின்றோம் என்பது உறுதி. “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் (மத்தேயு 21:22). செபமாலை சொல்லும்போது இறைவனின் வார்த்தை நம்மை ஆற்றலூட்டுகிறது, நம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

விண்ணக மாலை

ஒரு மானிடன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நல்சுகத்திற்கும் ஆறுதலுக்கும் சுப நிகழ்வுகளுக்கும் சொல்லப்படும் செபம் இந்தச் செபமாலைதான். செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும் இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்குபெறுவர். ஆன்மாவை விண்ணகத்திற்குப் போகத் தூய்மையாக்கும் மிகப்பெரிய கருவி செபமாலை. செபமாலையுடன் இறைவார்த்தை சேரும்போது, அது ஆன்மாவை விண்ணக வாழ்விற்கு வழிநடத்தும் அருள்கருவியாகிறது.

செபமாலையை வாழ்வியலாக்கும் வழிமுறைகள்

மறைமாவட்டத்திலும் பங்குகளிலும் பணி செய்யும் தளங்களிலும் செபமாலை செய்யும் பழக்கத்தைச் செயலாக்கும் முறைகள்:

1. செபமாலை பற்றிய கவிதை, கட்டுரை, பாடல், நாடகம் மற்றும் வினாடி-வினா போன்ற போட்டிகளை நடத்தலாம். 2. வீடுகளில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி வித்தியாசமான செபமாலை செய்யலாம். 3. ஒவ்வொரு வருடமும் மறைக்கோட்ட அளவிலான செபமாலை மாநாடு நடத்தலாம். 4. மரியாயின் சேனையினர் மருத்துவ மனைகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் சென்று செபிக்கலாம் 5. பங்கிலே யூடியூப் சேனல் வைத்து தங்களின் பங்கு மக்களைச் செபமாலை சொல்லி, செபமாலை குறித்து நாடகம் நடித்து, பாடல் பாடி யூடியூப் சேனலுக்கு அனுப்பலாம். 6. இரவில் ஒளிரும் செபமாலையைக் கையில் ஏந்தி ஒளியும்-ஒலியும் செபமாலை செய்யலாம். 7. அன்பியம் வாரியாகச் செபமாலை கலந்துரையாடல் செய்யலாம். 8. மிகப்பெரிய செபமாலை செய்து, ஆயரால் அர்ச்சிப்பு செய்து மறைமாவட்டம் முழுவதும் செபமாலை வலம் வரலாம். 9. மரியாயின் சேனையினர் ஒன்றாகச் சேர்ந்துசெபமாலைஎன்ற மாதா பத்திரிகையை நடத்தலாம். 10. செபமாலையைக் கையில் ஏந்திசெபமாலை ரேலிநடத்தி, செபமாலை நடைப் பயணம் நடத்தலாம். இத்தகைய அன்றாடச் செயல்பாடுகள் செபமாலையின் ஜெயத்தையும், வாழ்வில் வரும் தடைகளைத் தாண்டிச்செல்லும் அருளையும் உணரச் செய்கிறது செபமாலை.

ஆகவே, செபமாலை என்பது ஒரு பழமையான வழிபாட்டுமுறையோ, பாரம்பரியச் சின்னமோ அல்ல; அது நம்பிக்கையின் உயிர்ப்பும், வாழ்க்கையின் அர்த்தமுமாகும். வரலாற்றில் கிறித்தவர்களுக்கு வெற்றியும், குடும்பங்களுக்கு ஒன்றிப்பும், தனிநபர்களுக்கு அமைதியும் வழங்கிய இந்தச் செபம், இன்றைய காலத்திலும் அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே பாலமாகத் திகழ்கிறது.

கையில் ஏந்தப்படும் மணிகள் ஒவ்வொன்றும், நம் இதயத்தை இறைவனிடத்திற்கும் அன்னை மரியாவிடத்திற்கும் நெருங்கச் செய்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, சமூக வாழ்விலோ, உலகளாவிய சவால்களிலோ, செபமாலை நமக்கு வலிமையும் நம்பிக்கையும் தந்து, விண்ணக வாழ்விற்குத் திசைதிருப்புகிறது. ஆகவே, செபமாலை என்பதுவெற்றியின் மாலை, நம்பிக்கையின் மாலை, விண்ணகத்தின் மாலைஎன்று சொல்லப்படும் அளவிற்கு ஆன்மிக வாழ்வின் புதையல் இச்செபமாலை.