news-details
ஞாயிறு மறையுரை
அக்டோபர் 05, 2025, ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) அப 1:2-3; 2:2-4; 2திமொ 1:6-8,13-14; லூக் 17:5-10 - வன்முறைக்கு அன்பே நம் பதிலாகட்டும்!

இங்கிலாந்தின் இலண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்ற புகழ்பெற்ற கோவில் உள்ளது. அக்கோவிலின் முகப்பில்இருபதாம் நூற்றாண்டு மறைச்சாட்சிகள்என்று பத்துப் பேரின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒருவர் மாக்சிமிலியன் கோல்பே; மற்றொருவர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ. மாக்சிமிலியன் கோல்பே நாசி அராஜகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால், நாசிகளால் Auschwitz வதைமுகாமில் அடைக்கப்பட்டு, தன் சக கைதிகளில் ஒருவருக்காக 1941, ஆகஸ்டு 14-ஆம் நாள் இறந்தார்.  பேராயர் ஆஸ்கர் ரொமேரோ நீதிக்காகக் குரல் கொடுத்து, அதன் விளைவாக, 1980, மார்ச் 24-ஆம் நாள் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் 1982-ஆம் ஆண்டு மாக்சி மிலியனைப் புனிதராக உயர்த்தியபோது, ‘வன்முறையால் துன்புறும் நம் காலத்திற்குப் பாதுகாவலர்என்று இவரைக் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் ரோமேரோவைப் புனிதராக உயர்த்தியபோது, ‘அரசாலும் செல்வந்தர்களாலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்புத் தரும் புகலிடமாக இவர் வாழ்ந்தார்எனக் குறிப்பிட்டார். வன்முறைகளுக்கு மத்தியில் இவர்கள் இருவரும் வாழ்ந்தாலும், வன்முறைகளுக்கு இவர்களிடமிருந்து வந்த பதில் அன்பு ஒன்றே.

இன்று நாம் பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் நம்மைச் சுற்றி நிகழும் வன்முறைகளுக்கு மத்தியிலும் கடவுளின் நற்செயல்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்க நம்மை அழைக்கின்றன.

உலக வரலாற்றின் பெரும்பாலான பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கும்போது அவை வன்முறையால் காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. போர், வன்முறை, தீவிரவாதம், அநியாயப் படுகொலைகள், ஆணவச்செயல்கள், அடக்குமுறைகள், மனிதக் கடத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்மங்கள், இயற்கை அழித்தல்கள் என வன்முறைகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. மதவெறிக்கும் இனவெறிக்கும் தீவிரவாதத்துக்கும் முடிவுகட்டிய தந்தை காந்திஜி பிறந்த நம் மண்ணைஅகிம்சை மண்என்று இன்று கூறி பெருமையடைய முடியாது. சாதிக்காகவும் சமயத்திற்காகவும் அரசியலுக்காகவும் அதிகாரத்திற்காகவும் கொலைகள் நிகழ்வதும் நீதிக்குக் குரல் கொடுப்பவரின் குரல்வளைகள் நெரிக்கப்படுவதும் நம் நாட்டில் நிகழும் காட்சிகளே.

மனித வரலாற்றில் காணப்படும் வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில் கூறப்பட்டுள்ளன. இன்றும் நாம் பதில்கள் கூறி வருகிறோம். நிகழும் வன்முறைகளுக்கு மூன்று வழிகளில் பதில் கூறுவதை உணரலாம். 1. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்என்று வன்முறைகளுக்கு வன்முறையாலேயே பதில் கூறுவது; 2. மனிதநேயமற்ற வன்முறைகளுக்கு மனித நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம் முறையிடுவது; 3. நம் இறைமகன் இயேசு வாழ்ந்து காட்டியதுபோல வன்முறைகளுக்கு அன்பால் பதில் கூறுவது.

உலக வரலாற்றில் உண்மையும் அன்பும் மட்டுமே எப்போதும் வென்றுள்ளன. வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும்கூட வீழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு. வன்முறைக்கு வன்முறை ஒருநாளும் தீர்வாகாது. வன்முறை, நன்மையைச் செய்வதுபோல் தோன்றினாலும், அந்த நன்மை நிரந்தரமற்றது; அது கொணரும் தீமைதான் நிரந்தரமானது. வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகக் கூறும் நாடுகளும் சில உள்ளன. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்என்ற வழிமுறையைச் சில நேரங்களில் நாமும் நியாயப்படுத்துகிறோம். ‘பழிக்குப்பழிஎன்று ஒவ்வொருவரும் நடந்துகொண்டால் இந்த உலகம் மனிதர்களில்லா உலகமாகத்தான் இருக்கமுடியும்.

இந்த உலகில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் எழுப்புகின்ற கேள்வி, ‘ஏன் இவ்வளவு வன்முறைகள், போர்கள், உயிரிழப்புகள், பச்சிளங்குழந்தைகளின் மரணங்கள்? உண்மையில் கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருந்தால் ஏன் இவற்றையெல்லாம் அனுமதிக்கிறார்? நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்? நல்லவராக வாழ்வதால் என்ன பயன்? தீயோர் எப்படி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்? இதற்கொரு முடிவே இல்லையா? இவற்றையெல்லாம் கடவுள் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றாரே?’ நம்மைச் சுற்றி நிகழும் அநீதிகளுக்கு மத்தியில் நமக்குள் மீண்டும் மீண்டும் எழும் கேள்விகள் இவை. சில நேரங்களில் இதுபோன்ற கேள்விகள் கடவுள்மீதான நமது நம்பிக்கையை இழக்கச்செய்கின்றன. இச்சூழ்நிலையில் கடவுளிடம் முறையிடுவதே வன்முறைகளுக்குப் பதில் கூறும் இரண்டாவது வழி என்று அபக்கூக்கு எழுப்புகின்ற முறையீட்டில் காண்கின்றோம்.

இன்றைய முதல் வாசகத்தில், பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கி, “பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும் போது நீர் ஏன் மௌனமாய் இருக்கிறீர்?” என வினவுகிறார் அபக்கூக்கு. “இன்னும் எத்துணை காலத்திற்கு?” (1:2), “நீர் ஏன் என்னைக் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?” (1:3) என்ற இறைவாக்கினரின் புலம்பல் யோபு இறைவனை நோக்கி எழுப்பிய புலம்பலை ஒத்திருக்கின்றன (யோபு 31:16,17,19,21,29,33,34). இறைவாக்கினர் அபக்கூக்கு யூதா நாட்டை ஆண்ட யோயாக்கிம் காலத்தில் வாழ்ந்தவர். இவர் அசீரியப் பேரரசின் தலைநகரமாகிய நினிவே வீழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 612) பாபிலோனியர்களால் யூதா வீழ்த்தப்பட்ட (கி.மு. 588) காலம்வரை இறைவாக்கு உரைத்தவர். சமுதாயத்தில் நேர்மையற்றோர் செல்வச்செழிப்பில் வளர்வதையும், நேர்மையாளர் நீதிக்காகத் துன்புறுத்தப்படுவதையும் பார்க்கும் போது, ‘ஆண்டவர் ஏன் இவற்றை அனுமதிக்கின்றார்?’ என்ற கேள்வியை எழுப்புவது மனித இயல்பு. இறைவாக்கினர் அபக்கூக்கு இந்த அடிப்படைக் கேள்வியை ஆண்டவரிடமே எழுப்புகிறார். அதாவது, ‘யூதாவில் வாழும் நேர்மையாளரின் நிலை என்ன?’ என்பதுதான் அபக்கூக்கு இறைவனை நோக்கி எழுப்பும் கேள்வி.

முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் அபக்கூக்குவின் கேள்விக்கு ஆண்டவர் பதில் அளிக்கிறார். “ஆண்டவர்மேல் கொண்ட நம்பிக்கையால் நேர்மையுடையோர் வாழ்வு பெறுவர். ஆதலால், துன்பங்களுக்கு நடுவிலும் தம்மீது நம்பிக்கை கொள்பவர்களைக் காக்க வல்லவராக ஆண்டவர் இருக்கின்றார்எனும் ஆண்டவரின் செய்தியை அபக்கூக்கு மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். நிகழும் அநீதியைக் கடவுள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதில்லை; மாறாக, கடவுள் ஒருநோக்கமும் இலக்கும் பார்வையும்வைத்துள்ளார். நேரம் வரும்போது அவற்றிற்கு இறைவன் முடிவு கட்டுகின்றார். அப்போது தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். எனவே, இறைவன் காலம் தாழ்த்தினாலும் இறைவனிடமிருந்து நீதி கட்டாயம் வரும் என்று நம்பி வாழ்வது வன்முறைக்கு நாம் தரும் இரண்டாவது பதில். இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிடுகிறார்.

மனித வாழ்வின் மையமே இறைநம்பிக்கைதான். நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பதும் நம்பிக்கையே. துன்பம், நோய், பிரிவு, வறுமை, புலம்பெயர்ந்து செல்லல், அனைவராலும் கைவிடப்பட்ட நிலை போன்ற கடினமான காலங்களிலும் ஒரு மனிதரை இறைவன்மீதும் தன்மீதும் ஆழமான அன்புகொள்ளச் செய்து வழிநடத்துவதும் நம்பிக்கையே! வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த இந்த நம்பிக்கையே தேவையானதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில்எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் (லூக் 17:5) என்று சீடர்கள் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்வது எதிர்வரும் துன்பங்கள், சவால்கள், தங்களுக்கு எதிராக நிகழப்போகும் வன்முறைகள், மரணங்களுக்கு மத்தியிலும் உறுதியோடு பணிசெய்வதற்குத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்கின்ற ஆற்றல் அல்லது திறனாகும் (17:6). நம்பிக்கையே நற்செயல்களின் ஊற்று. ஆகவேதான் சவால்கள், துன்பங்கள், வன்முறைகளுக்கு இயேசு கற்றுத்தரும் மூன்றாவது வழி அன்பு.

இறுதியாக, வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, பொதுவாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம் தெரிகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும் பணிபுரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், குழந்தைகள் மீது, பெண்கள் மீது, வயது முதிர்ந்தோர் மீது காட்டப்படும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் மௌனமாகச் சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகின்றன.

நல்ல பண்புகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாலேயே இன்று நம் குடும்பங்களில் இந்த வன்முறைகள் அரங்கேறுகின்றன. நம் வாழ்க்கைக்குத் தேவையானது அன்பு ஒன்றே. வன்முறையின் பல வடிவங்களுக்கு மத்தியில் நம்பிக்கையைக் கைவிடாமல் அன்பை விதைப்போம். கடுகளவு நம்பிக்கை நம்மிடம் இருந்தாலும் போதும்... வெறுப்பு எனும் கோட்டையைத் தகர்த்துவிட முடியும். வன்முறைக்கு அன்பே நம் பதிலாகட்டும்.