news-details
ஆன்மிகம்
அனைத்தறன் (Integrity)

யாரை அன்புகூர்கிறோம்?

நீங்கள் நிறையப் பணம் வைத்திருப்பதால் உங்களை உண்மையாக எல்லாரும் நேசிப்பதில்லை; நீங்கள் செல்வாக்கு உடையவர்களாகவோ, மிகுந்த திறமை பல உடையவராகவோ இருப்பதால் மக்கள் உங்களை அன்பு செய்வதில்லை; மாறாக, உங்கள் மதிப்பீடுகள், பண்புகள், நன்மைத்தனங்கள் உங்கள் எளிமையைப் பார்த்து அன்பு செய்பவர்களே உண்மையான அன்பு செய்கிறவர்கள்.

இரத்தன் டாடா

பில்கேட்ஸ் உலகில் மிகப்பெரிய பணக்காரர். அவர் வியப்புறும் ஒரு மனிதரைப் பற்றிக் கூறியது எல்லாரையும் கவர்ந்தது. ‘நீங்கள் வியப்புறும் ஒருவரைப் பற்றிக் கூறுங்கள்?’ என்றபோது, “எனது இந்திய நண்பர் இரத்தன் டாடா! இவர் ஓர் அற்புதமான மனிதர். பெரிய பணக்காரர் எனினும், பணக்காரர் பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. காரணம், தனது வருமானத்தில் 67% ஏழைகளுக்குக் கொடுக்கிறார். வயோதிகர்களுக்கான இல்லங்களைத் திறந்து அவர்களைக் கண்காணித்து வருகிறார். ஏழைகளுக்கு உணவும் உடையும் கொடுக்கிறார். குறைந்த வருமானம் உள்ளவர்களும் கார் வாங்க வேண்டும் என்ற நோக்குடன் மிகக் குறைந்த விலையில் வாகனங்களைத் தயாரிக்கிறார். இலாபம் ஈட்டுவது இவரது நோக்கமல்ல; மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதே இவரது முதல் விருப்பம். எளிமையான வாழ்வு, யாரையும் ஏமாற்றுவதில்லை, எவருக்கும் தீங்கு செய்வதில்லை. இவர் ஒரு நேர்மையாளர்; மனிதரை அன்பு செய்யக்கூடியவர்இவரை எல்லாரும் மதிக்கின்றனர். அன்பு செய்கின்றனர்என்று பதிலளித்தார்.

இது பற்றி இரத்தன் டாடாவிடம் கேட்டபோது,  “நாம் இறப்பிற்குப் பிறகு எதையும் எடுத்துச் செல்வதில்லை. ஆகவே, இருக்கும் வரையில் எல்லாருக்கும் நன்மை செய்வோம்என்பது இவரது பதில்இவரது இறப்பு இந்தியாவிற்குப் பேரிழப்பு.

அன்னை தெரசா

இதே கருத்தை அன்னை தெரசா மற்றொரு விதமாகக் கூறுவார்: எரியும் திரியிலிருந்து மற்றொரு திரியை ஏற்றுகையில், எரியும் திரி குறைந்துவிடாது; மாறாக, வெளிச்சம் இன்னும் அதிகமாகும். அதேபோல நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்தால் பிறரது வாழ்வு ஒளியைப் பெறும், நாமும் மகிழ்வாக இருக்கலாம்.”

நேர்மையாளர் எதிர்கொள்ளும் தீங்கு: மனித மதிப்பீடுகள் அவன் மாண்புடன் வாழ உதவுகின்றன. அதைத் தீயவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. “நல்லவர்களின் நாணயமான வாழ்க்கை எங்களுக்குப் பெருஞ்சுமையாக உள்ளதுஎன எதிரிகள் கூறுவதாகத் திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது.

சாலமோனின் ஞானம் 2:12: “நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்; ஏனெனில், அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள் (14), “அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது. அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது (20), “இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம் (21), “தீயவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டதுஎன்று கூறுவதைக் கவனிப்போம். இவ்வாறு உலகப்போக்குடன் வாழ்க்கை நடத்தும்போது மதிப்பீடுகள், உயர்பண்புகள், நல்ல மனத்துடன் நேர்மை வாழ்வு வாழ்வது கடினமாகிறது. இதைத்தான் இயேசுகுறுகலான பாதை வழியாகச் செல்லுங்கள்என்கிறார். “வாழ்வுக்குச் செல்லும் வாயில் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத் 7:13-14). இயேசுவின் போதனை இறையாட்சி பற்றியது; நேர்மையாளரே இங்கு நுழைய முடியும்.

நேர்மையாளர் யார்?

நேர்மையைப் பற்றி, ஒழுக்கமுடைமை பற்றி, பண்புகளையெல்லாம் உள்ளடக்கிய தனிப்பண்பு பற்றிச் சிந்திப்பது நல்லது.

தனக்கு உண்மையாகவும் சிந்தனை, சொல், செயலில் ஒருமைப்பாட்டையும் கொண்டிருப்பதை நேர்மை (INTEGRITY) எனலாம். நல்லவர்கள் நல்ல கொள்கைகளில், சிறப்பான செயல்பாடுகளில் எந்தப் பேரமும் பேசமாட்டார்கள். இவைகள்தான் இவர்களைச் சிறப்பானவர்களாக மாற்றுகின்றன. கொண்ட கொள்கையில் நிலைத்திருந்துநீதிபிறழாமல் வாழும் இச்சிறப்பான பண்புக்கு ஈடு இணை இல்லை. அவரை அறநெறியாளர் என்பர். மாசற்றவர் என்பர். உண்மைக்கு உயிரைக் கொடுப்பவர் என்பர்.

நேர்மையாளரின் பண்புகள்:

1. சமமாக நடத்துபவர்: நேர்மையாளர் உள்ளத்தில் கபடற்றவர்; போலித்தனம் இல்லாதவர்; நீதியோடும் நேர்மையோடும் செயல்படுபவர். அவர் அஞ்சாதவர்; எல்லாரையும் மதித்து மாண்பைப் போற்றுபவர்; எல்லாரிடமும் நீதிநெறி பிறழாமல் நடப்பவர். வன்முறைக்கோ, வற்புறுத்துதலுக்கோ இணங்காமல், ஆணவத்தோடு செயல்படாமல் இருப்பவரை நேர்மையாளர் எனலாம். இவரை வழிநடத்துவது அறமே. இவரிடம் காண்பது சமத்துவம்.

2. நேர்மையோடு செயல்படுபவர்: இவர்கள் பணத்துக்காகவோ, சலுகைக்காகவோ விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கைகளில் சிறப்போடு செயல்படுபவர்கள். நல்லறம் காப்பது இவர்களின் செயல்பாடாகும்.

3. நேர்மையாளர்களை மக்கள் நம்புவர்:  நடுநிலை நின்று பிறழாமல், மக்கள் நம்பிக்கைக்குத் தீங்கிழைக்காது வாழ்வோர் மக்களின் நம்பிக்கைக்குத் தகுதியானவர்களாயிருப்பர். தன்னில் நேர்மையுடனும், பிறருக்கு உண்மையுடனும் வாழ்பவரை உலகம் போற்றும். நல்ல மரம், நல்ல நிலம், நல்ல நீர், நல்ல சூழல் இருக்கையில் நல்ல பலனைத் தரும். நல்ல மனிதனும் அவ்வாறே. நல்ல மனிதனைச் சுற்றி நம்பிக்கை வளரும்.

4. நல்ல மனிதர் யாருக்கும் அஞ்சார்: பணம், பதவி, அதிகாரம் அவனை எச்சரிக்கலாம், அவரைப் பயமுறுத்தலாம். ஆனால், அவர் நல்லது செய்வதில், நீதியானதைச் செய்வதில் பேரம் பேசுவதில்லை. அவர் அலைக்கழிக்கப்படலாம், பல இடங்களுக்கு மாற்றப்படலாம். நீதிக்காக எத்துயரையும் தாங்கும் நிலைப்பாடு அவரிடம் உண்டு. இவர்கள் தவறு செய்யும்போது அதற்காக மனம் வருந்தத் தயங்கார்.

5. தனது குற்றத்தை ஒத்துக் கொள்வர்:  வகுப்பில் காலம்தாழ்த்தி வந்த மாணவனுக்குத் தண்டனை வழங்கினார் அந்த ஆசிரியர். ஒருநாள் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது அச்சிறு மாணாக்கன் பல வீடுகளில் காலை செய்தித் தாளைப் போட்டுவிட்டு, நடக்க முடியாத தன் அம்மாவைச்  சக்கர நாற்காலியில் ஓட்டி வந்து, உணவு கொடுத்துவிட்டுப் பள்ளிக்கு வருகையில், காலம் தாழ்த்தி வந்தான். ஆசிரியர் எந்தப் பிரம்பால் அவனை அடித்தாரோ, அதே பிரம்பை அவனிடம் கொடுத்துத் தன்னை அடிக்கக் கூறினார். தான் செய்த தவற்றிற்கு மன்னிப்புக் கோரினார். இதைக் கண்ட வகுப்பில் இருந்த மாணாக்கர் அனைவரும் அவரைப் பாராட்டி வியந்தனர்.

வள்ளுவர் தரும் விளக்கம்

மனத்தில் குற்றமில்லாதவன், தீய எண்ணங்களைக் கொண்டிராதவன் எல்லா அறங்களையும் கொண்டவனாகிறான். இவனையே அனைத்து அறங்களையும் உடையவன் (MAN OF INDEGRITY) என்று வள்ளுவர் கூறுகிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள் 34).

மேலும் வள்ளுவர்,

அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம்

புறத்த புகழும் இல (குறள் 39)

என்பார். ஆனால், அப்படிப்பட்டவரை இவ்வுலகம் கொன்றுவிடும். ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி... ஏன் நம்பிரான் இயேசுவும் கொல்லப்பட்டது இதனாலேதான். நற்செயல்களுக்காக வாழ்பவர் தீயோரின் மனசாட்சியைத் துன்புறுத்துவர். மேலும்,

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996) 

என்று வள்ளுவர் கூறுகிறார். அதாவது, நல்ல பண்பு உடையவர்களின் ஒழுக்கத்தால் இவ்வுலகம் நடைபெறுகிறது. அவர்கள் இல்லையெனில் உலக ஒழுக்கம் மண்ணில் புதைந்துவிடும். இயேசுவின் போதனை, வாழ்வு, இறப்பு எல்லாம் இதற்குச் சான்று.