news-details
ஆன்மிகம்
ஊக்கமும் தாக்கமும் (சதுக்கத்தின் சப்தம் – 7)

இசை முறிந்தது; ஆனால், இசை மையம் முறியவில்லை!

இத்தாலியின் புகழ்பெற்ற வயலின் கலைஞர் நிக்கோலோ பகனினி, பாரிஸின் பிரசித்திப்பெற்ற இசை மண்டபத்தில் மேடைக்குச் சென்றபொழுது, பரவசமடைந்த கூட்டம் எழுந்து நின்றது. அவரின் கைகளில் வழிந்த இசை, அரங்கின் மௌனத்தைக் கிழித்தெறிந்து ஒளிரும் ஒலியாகப் பறந்தது. அந்த அற்புதத் தருணத்தில், எதிர்பாராத விதமாக வயலினின் ஒரு சரம் முறிந்தது.

ஆனால், பகனினி இசை நிற்கவில்லை. மூன்று... இரண்டு... இறுதியாக ஒரே ஒரு சரம்தான் மீதமிருந்தது. அவ்வளவிலேயே பகனினி மெதுவாகக் கூறினார்: “இப்போது நீங்கள் கேட்கப்போகிறீர்கள்... பகனினியின் ஒரே ஒரு சரத்தின் நாட்டியம்!” அந்த ஒரு சரத்தின் நடனத்தில், ஒரு முழு இசை விருந்து அரங்கேறியது. தெளிவான ஒலி, நேர்த்தியான நுணுக்கங்கள், உயிரோட்டமுள்ள இசை. இந்த அற்புத நிகழ்வில் ஓர் ஆழமான உண்மை ஒளிந்திருக்கிறது.

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார் (லூக்கா 4:18).

நமது வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முறிகின்ற உறவுகள், தோல்வியடையும் கனவுகள், குறைந்து போகும் நம்பிக்கைகள் போன்றசரங்கள்முறிகிறபோது, தூய ஆவியால் உந்தப்படுகிற செயல்திறன்தான் நமது வாழ்வின் உன்னதமான இசை. தூய ஆவியின் பணி நம் வாழ்வில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பகனினியின் இசைபோல, தூய ஆவியின் தீண்டலால் நம் வாழ்வும் ஓர் இசையாகவே மாறும் என்கிற கருத்தியல் சிந்தனையோடு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையை யோவான் 20:19-23 திருவிவிலியப் பின்னணியைக் கொண்டு நிகழ்த்தினார்.

பெந்தகோஸ்து - உதிர்ந்த பயத்திலிருந்து பிறந்த புதிய உரம்!

இயேசுவின் மரணத்திற்குப் பிறகு பயத்துடன் மேலறையில் ஒளிந்திருந்த சீடர்கள், நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், அந்த அமைதியைக் கிழித்து ஒரு வலிமையான காற்று எழுந்தது. அந்தக் காற்று தூய ஆவியின் வருகையை அறிவித்தது. அவர்கள்மீது அக்கினி நாவு வடிவில் இறங்க, அவர்கள் பேசத் தொடங்கினர் - புதிய உற்சாகத்துடன், புதிய மொழிகளில். “அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள் (திப 2:4). பெந்தகோஸ்து அன்று கடவுள் தமக்கே உரிய வழியில் ஒரு புதிய உடன்படிக்கையை ஆரம்பித்தார் - அன்பின் மொழியில், உண்மையின் அறிவுறுத்தலில், அமைதியின் ஆவியோடு.

மூச்சு ஊதிய இயேசு - புதிய திரு அவையின் பிறப்பு

யோவான் நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு தமது சீடர்களின் மீது மூச்சு ஊதுகிறார். “அவர் அவர்கள்மேல் மூச்சு ஊதினார்; ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்என்றார் (யோவா 20:22). இது தொடக்க நூலில் கடவுள் மனிதனுக்குள் உயிர்மூச்சு ஊதிய தருணத்தை நினைவுபடுத்துகிறது: “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொநூ 2:7). இப்போது இயேசு புதிய மனிதனுக்கு, புதிய திரு அவைக்கு, புதிய ஆவியால் புதிய உயிரை அளிக்கிறார்.

ஒரு சிறுவனின் தாளத்தில் இசைமுனிவரின் கருணை

போலந்து நாட்டின் பியானோ மேதை இக்நேஸ் படெரெவ்ஸ்கி ஒரு நிகழ்ச்சியில் ஐந்து வயது சிறுவன் மேடையில் பியானோ வாசிக்க முயன்றபோது அவரை நிறுத்தவில்லை. மாறாக, அவர் அருகே வந்து, “வாசிக்கத் தொடரு, நிறுத்தி விடாதேஎன்றார். பின்னர் தனது கைகளால் சிறுவனின் மெலிதான இசையை வலிமைமிக்க இசையாக்கினார். இது தூய ஆவியின் செயலுக்கு ஒப்பாகும். நமது சிறு முயற்சிகளை அவர் கருணையுடன் இணைத்து, மகத்தான பணி ஆக்குகிறார். “ஏனெனில், பேசுபவர் நீங்கள் அல்லர்; மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார் (மத் 10:20).

நீங்கள் தனிமையில் இல்லை - உங்கள் துணையாக...

இயேசு தம்முடைய சீடர்களிடம் உரைத்தார்: “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன் (யோவா 14:18). இயேசு தமக்குப் பின் மற்றொரு துணையாளராகத் தூய ஆவியை அனுப்புவதாக உறுதி அளிக்கிறார்: “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்க ளுக்கு அருள்வார் (யோவா 14:16). தூய ஆவி இறைவனின் பணி தொடரும் சக்தியாகவும், உண்மையின் வழிகாட்டியாகவும், நம்மை வழிநடத்தும் ஆற்றலாகவும் இருக்கிறார்.

அமைதி - பழிவாங்கும் பதில் அல்ல; இரக்கத்தின் ஒலி!

உயிர்த்தெழுந்த இயேசு தம்மை மறுத்த சீடர்களிடம்உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்எனக் கூறினார். அவர்களின் காயங்களை, குற்ற உணர்வைப் பழிவாங்காமல், அமைதியால் குணமாக்கினார். அந்த நாள் மாலையில், சீடர்கள் இருந்த இடத்தில் இயேசு வந்து, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார் (யோவா 20:19). இது தோல்வியையும் தனிமையையும் தாண்டும் அன்பின் ஒலி! நாமும் நம் பாதிப்புகளை மறைக்காமல், அவற்றை இறைவனின் கருணையின் சாட்சியாக்க அழைக்கப்படுகிறோம்.

நமக்கான அழைப்பு - உலகிற்குள் ஓர் இசை

இயேசுவின் பணி, அவரது சீடர்களின் மூலம் உலகிற்கு ஒப்படைக்கப்பட்டது. இன்று அந்தப் பணி நமக்கும் ஓர் அழைப்பு. ஒளியைக் கொண்டு செல்ல, இரக்கத்தை வெளிப்படுத்த, நம்பிக்கையை எழுப்ப! “ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம் (1கொரி 12:13). நாம் அனுப்பப்படுகிறோம் - இசைபோல, ஒலிபோல, நம்பிக்கைபோல!

ஒரு சரம் போதும்... இசை தொடங்கட்டும்!

பகனினியின் ஒரே சரம், சிறுவனின் எளிய சுருதி, பெந்தகோஸ்துவின் அக்கினி நாவுகள், இயேசுவின் மூச்சு... இவை அனைத்தும் ஓர் உண்மையை எடுத்துக்காட்டுகின்றன: முடிவுகள் அல்ல வாழ்வின் இசை; முறிவுகள் அல்ல ஊக்கம்; தனிமை அல்ல உறவு; தூய ஆவி உண்டு - அதுவே நம் இசை!

இயேசுவின் உயிர்த்தெழுதல் - வெற்றியின் நிறைவு அல்ல; மாறாக, இரக்கத்தின் தொடக்கம். தூய ஆவியின் மூச்சு நம் குறைவுகளை ஈர்த்தெடுத்து வாழ்வின் இசையாக்கும் ஒரு புனிதத் தொடக்கம். நாம் ஒவ்வொருவரும் ஒரு சரத்தால் ஆனாலும், ஒற்றுமை என்னும் இசையை வாசிக்க அழைக்கப்படுகிறோம். “நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலக மாட்டேன் (எபி 13:5).

உரையின் ஒலி, நமது வழி!

இவ்வாறு, கடவுள் தமது காயங்களை மறைக்கவில்லை; அவற்றை இரக்கத்தின் அடையாளமாகக் காட்டினார். நாமும் நம் பாதிப்புகளை மறைக்கும் பழக்கத்திலிருந்து வெளிவந்து, அன்பின் சாட்சிகளாக இருப்பதற்கே அழைக்கப்படுகிறோம். தூய ஆவியின் சுவாசம், நம்மை இந்த அமைதிக்கும் தோல்வியைத் தாண்டும் அன்பிற்கும் சாட்சிகளாக மாற்றட்டும்.

திருத்தந்தையின் இந்த மறைக்கல்வி உரை, வாழ்வின் துன்ப தருணங்களிலும் நம்முள் உறைந்து இருக்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல், வெற்றியின் நிறைவு அல்ல; இரக்கத்தின் தொடக்கம். அந்த நம்பிக்கையே உலகிற்கு இன்று மிக அவசியம். நாமும் அந்த அமைதியின் தூதராய் அமைவோம்.

திருத்தந்தையின் மறைக்கல்வி உரையின் ஒலி, இப்போது நம்முடைய இதயத்தில் ஒலிக்கட்டும். நாம் அவரின் இசையின் கருவியாக என்றும் மாறிட!