ஒரு நபர்!
“எல்லா மனிதர்களும் யாராவது ஒருவரால் செதுக்கப்பட்ட உயிருள்ள சிற்பங்களே.”
தாய்-தந்தையரின் பாரம்பரியக் குணங்கள் இயற்கையிலேயே நம்மிடம் அமைந்திருப்பவை. ஆனால், பல பண்புகள், நம் ஆளுமையைத் தீர்மானிக்கும் குணங்கள் மற்றவர்கள் நம்மீது ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம்.
என் வாழ்வில் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு யார் காரணம்? ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லை வைத்து 12 Tense (காலங்களையும்) தினமும் படிக்க வைத்து ஒப்பிக்க வைத்தவர்; காலை 5 மணிக்கு எழுந்து பூசைக்கு நடந்தே அழைத்துச் சென்றவர்; பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும் முழங்காலிட்டு சிலுவை வாங்க வைத்துப் பணிவைக் கற்றுத் தந்தவரான என் தந்தையைச் சொல்லவா?
நான் ஈனக்குரலில் பாடியதையும் நடித்ததையும் பேசியதையும் கைதட்டி இரசித்த என் முதல் இரசிகை என் தாயைச் சொல்லவா?
சங்கீத வாசனையே இல்லாத குடும்பத்தில் அருள்தந்தை ஆரோக்கியம் அவர்களின் கர்நாடகச் சங்கீதக் கிறித்தவப் பாடல்களைத் தன் ஆர்மோனியத்தால் வாசித்து, இசைஞானம் ஊட்டிய என் தாய் மாமா அமரர் பேராசிரியர் S.F.N. அவர்களைச் சொல்லவா?
யாரைச் சொல்வது?
எனக்கு அடிப்படையில் இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் என் தந்தை அமரர் Y. இன்னாசி ஆசிரியர். இவர்தான் என் வாழ்வில் புதுப்பாதைக் காண அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.
ஒரு நிகழ்வு
1963-ஆம் ஆண்டு திண்டுக்கலில் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இரவுண்ட் ரோடு மைதானத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருந்தலைவர் காமராசர் பங்கேற்ற விழா நடந்தது. அதற்கு ஐந்து வயது நிரம்பிய என்னைத் தோளில் தூக்கி வைத்து மேடையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் விளக்கிக் கூறியவர் என் தந்தை.
அப்போது நேரு அவர்கள் ஒரு வாகனத்திலிருந்து தனக்குக் கொண்டு வந்த மாலைகளை இருப்பவர்களின்மீது வீசி, கூட்டத்தில் அவரின் மகிழ்வை வெளிப்படுத்தினார். அதில் ஒரு மாலையை என் கழுத்தில் விழவைப்பதற்காக என் தந்தை எடுத்த முயற்சியும், அது கிடைத்தவுடன் அடைந்த மகிழ்ச்சியும் என் கண்களில் இன்னும் நிழலாடுகிறது.
நான் திண்டுக்கல் G.T.N. கலைக் கல்லூரியில் B.Sc., இயற்பியல் பட்டம் பெற்றபின் தேர்வு முடிவுகள் தாமதமாக வந்தன. என் தந்தை என்னைப் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்வியியல் கல்லூரியில் B.Ed., சேர்க்க ஆசைப்பட்டார். அப்போது ஜூன் மாதம் - கல்லூரியில் சேர்க்கை அனைத்தும் முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டனர்.
அப்போது திண்டுக்கல் இயேசு சபை மதுரை மறைமாநிலத் தலைவரைப் பார்க்க புனித சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருள்தந்தை ஜோசப் சீனிவாசன் வந்திருந்தார். என் தந்தையும் நானும் எனக்கு இடம் கேட்பதற்காக அவரைச் சந்திக்க சென்றோம். ஆனால், அவர் சேர்க்கை மே மாதமே முடிந்துவிட்டது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
என் தந்தை ஓய்வுபெறும் வருடம் அது, ஆகையால் அடுத்து குடும்பத்தைக் கவனிக்க ஒருவரின் வருமானம் தேவை. எனவே, இந்த ஆண்டு B.Ed-இல் எனக்கு இடம் வேண்டும் என்று மீண்டும் கேட்டார். அவரோ “என்னை மன்னித்து விடுங்கள்; இடமில்லை. இருந்தாலும் வாங்க, பார்ப்போம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
என் தந்தை வீட்டுக்கு வந்தவுடன் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிட்டார். ‘ஃபாதர் சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது, வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டாரே? இவர் இப்படிச் செய்கிறாரே...?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். ‘நம்பிக்கையுடன் புறப்படு’ என்று பேருந்தில் இரவோடு இரவாகப் பயணம் செய்து பாளையங்கோட்டைக் கல்லூரியைச் சென்றடைந்தோம். ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பெற்றோரிடம் பிரியாவிடைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானும் என் தந்தையும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். என் தந்தையின் நம்பிக்கையைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
இறுதியாக, ஃபாதர் வந்து எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு எப்படி இடம் கொடுத்தாரோ அப்படியே விடுதி அறையை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
“கல்லூரிக் கட்டணம் இப்போது கட்ட வேண்டாம்; உங்களால் முடியும்போது வந்து செலுத்துங்கள்” என்று கூறிவிட்டு, ஜெர்மன் நாட்டு Scholarship படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னார். குறைந்த கட்டணத்தில் எனக்கு இடம் கிடைத்தது. 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்து இன்று அரசியலில் தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் மற்றும் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க வைத்தது என் தந்தையின் ஆழமான நம்பிக்கை.
ஒரு வார்த்தை
படித்துக் கொண்டிருந்தபோது கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சனவரி மாதம் கல்லூரிக்குச் சென்றோம். விடுதியில் இடமில்லை என்று ஃபாதர் அனுப்பிவிட்டார். என்ன காரணம்? என்று தெரியவில்லை. எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம்; மறுத்து விட்டார். என் நண்பர் ஜோசப் சேவியரின் அறையில் தங்கிப் படித்தேன். அப்போது என் தந்தை ஆறுதல் கடிதம் எழுதினார். அதில் நற்செய்தியில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம்: “கட்டுவோர் விலக்கிய கல்லே இறுதியில் மூலைக்கல்லாக அமைந்தது.”
இந்த வாசகம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து, எனக்கு மேலும் நம்பிக்கையூட்டியது. வேலை கிடைத்து என் குடும்பத்தைக் கவனித்து, என் திறமைகளை வளர்த்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராக, பாடநூல் கழகத்தின் தலைவராக உருவாகக் காரணமாக அமைந்த நபர் என் தந்தை Y. இன்னாசி ஆசிரியர் அவர்கள்.
அவர் கடிதத்தில் எழுதிய நற்செய்தி வாசகம், எனக்கு இடம் கிடைக்க நடந்த என் தந்தையின் இறைநம்பிக்கையுடன் கூடிய அந்த நிகழ்வு... இவைகளால்தான் நான் சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்.