news-details
சிறப்புக்கட்டுரை
விசில் (வலையும் வாழ்வும் – 30)

அன்று காலை வழக்கத்திற்கு மாறாக, பேருந்தில் கூட்டம் அலைமோதியது. பேருந்து என்னும் ஒற்றையடிப்பாதை கொண்ட உருளும் உலகத்திற்குள்தான் எத்தனை முகங்கள்! மகிழ்ச்சியோடு சில முகங்கள்; மௌனத்தில் சில முகங்கள்; கடுகு பொட்டித்தெறிக்கும் எரிச்சலோடு சில முகங்கள்; சன்னலோரத்தில் காற்று வாங்கும் சில முகங்கள்; பேருந்து மேற்கம்பியைப் பிடித்தநிலையில் சில சோர்ந்த முகங்கள்; கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்கக் காத்திருக்கும் சில திருட்டு முகங்கள்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எத்தனை விதவிதமான முகங்களாக இருந்தாலும், நடத்துநர் சங்கரனின் சிரித்த முகப்பொலிவிற்கு முன்பாக அனைத்து முகங்களும் மனித முகங்களாகவே மாறிப்போயின.

இடையன்குடி யாராவது இருக்கீங்களா? இறங்குங்க...”

விசில் ஊதி பேருந்தை நிறுத்தினார் நடத்துநர் சங்கரன். சிலர் அந்த நிறுத்தத்தில் இறங்க, மேலும் சிலர் அந்த நிறுத்தத்திலிருந்து பேருந்துக்குள் ஏறிவந்தனர். மீண்டும் விசில் ஊதப்பட்டு பேருந்து நகர்ந்தது.

டிக்கெட் டிக்கெட்! யாரும் படியில நிக்காதீங்க. உள்ள வாங்க என்று கூறிக்கொண்டே நடத்துநர் சங்கரன் அந்தப் பேருந்தின் முன்பக்கமாகக் கூட்ட நெரிசலுக்குள் நகர்ந்து சென்றார்.

சங்கரனுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை நகர்வுகள் - பழைய காலப் பெண்டுலக் கடிகாரம் போல இங்கும் அங்குமாக.

யோவ்! பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” கோபத்தில் கர்ச்சித்தாள் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். அவளுடைய கண்ணாடியும் சுடிதார் காஸ்டியூமும் அவளுக்கு ஒரு படித்த வேலைக்குப் போகும் பெண்ணுக்குரிய தோற்றத்தைக் கொடுத்தன.

ஒரு நிமிடம் சங்கரன் நிலைகுலைந்து போனார். தனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் இப்படியோர் அவமானத்தை அவர் சந்தித்ததில்லை.

மன்னிச்சிடுமா. இந்தக் கூட்ட நெரிசலில் தெரியாமப்பட்டிருக்கும் என்று கூறியபோதும் அந்தப் பெண் விடுவதாகத் தெரியவில்லை. அவருடைய சட்டைக் காலரைப் பிடித்து அவரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுவதுபோல மூர்க்கமாகி நின்றாள். சங்கரன் அவமானத்தில் கூனிக்குறுகி நின்றார்.

வண்டிய போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க. பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா?” அந்தப் பெண்ணின் சப்போர்ட்டுக்குச் சில ஆண் ஹீரோக்கள் தங்கள் குரலை உயர்த்திப் பேசினர். “அவர எங்களுக்கு நிறைய வருசமாத் தெரியும். அவர் அப்படித் தப்பா நடக்கிறவரில்லை என்று சங்கரனுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்காமலில்லை.

இந்த நிகழ்வுகளையெல்லாம் சில இளைய நெட்டிசன்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து தங்களால் முடிந்த அளவிற்குச் சமூகப்பற்றினை வெளிப்படுத்தினர்.

பேருந்து ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். சில நிமிட உச்சக்கட்டக் குழப்பத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதி திரும்பியது. சில அன்றைய நாளுக்கான பேருந்து நாட்டாமைகள் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைத்தன. பாதிக்கப்பட்டதாகக் கூறிய அந்தப் பெண்ணும் அமைதியானாள். அவளுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போனாள். இதற்கிடையில் பலரும் பல நிறுத்தங்களில் இறங்கிப் போயிருந்தனர். சங்கரன் தன் முகத்தின் பொலிவை இழந்திருந்தார். ஆயினும், அவருடைய விசில் ஒலியெழுப்பாமலில்லை. பேருந்தும் திசையன்விளை நோக்கிச் சென்று சேர்வதற்குள் அவரைப்பற்றிய செய்தி இணையம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. சங்கரன் சில நொடிப்பொழுதினிலேயே சமூக விரோதியானார்.

அய்யோ! என் செயினைக் காணவில்லை என்று ஒரு பெண் கதறிக்கொண்டிருக்கும்போதே, “என் பர்சையும் காணல என்று மற்றொருவர் கூற மீண்டும் குழப்பத்தின் நெடுஞ்சாலையில் பயணித்தது அந்தப் பேருந்து. ‘யார் திருடியது?’ என்று யாருக்கும் தெரியவில்லை. ‘எப்படி நடந்தது?’ என்பதும் புரியவில்லை.

போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு கொடுத்தவர்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டாலும், தங்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றார்கள். சங்கரனுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணம், “யோவ்! பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” என்று அந்தப் பெண் வேண்டுமென்றே ஏற்படுத்திய களேபரமும், அவளுடைய கூட்டாளிகளின் கைவரிசையும் என்று புரிய தொடங்கியபோது பேருந்து காலியாக இருந்தது.

தங்கள் பணத்தை இழந்தவர்கள் காவல்துறையிடம் முறையிட்டார்கள். தன்மானத்தையும் தன்மரியாதையையும் இழந்த சங்கரன் யாரிடம் முறையிடுவார்?

ஊடகம் ஒரு சனநாயக நாட்டின் நான்காவது தூண். அரசியலை, சமூகத்தை, தொழில்நுட்பத்தை, வாழ்க்கையைக் கற்பிக்கின்ற கல்விச்சாலை. அதே ஊடகம் ஊதாரியாய்ப் போனால் அது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சமீப காலமாக ஊடகங்கள் நீதிமன்றம் செய்கின்ற விசாரணையைச் செய்யத் தொடங்கியிருப்பதை ‘ஊடக விசாரணை (Media Trail) என்கின்றனர். டி.ஆர்.பி.-க்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகக் காணப்படுவதை நாம் காண்கின்றோம்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) குடிமக்களுக்குப் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு கருத்துரிமை அல்லது பேச்சுரிமையை (Freedom to Speech) நமக்குக் கொடுத்திருந்தாலும், அது ஒரு வரையறைக்குள்ளும் வரைமுறைக்குள்ளும் செயல்படவேண்டும். இன்று பேச்சுரிமை என்ற போர்வையில் சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் ‘ஊடக விசாரணை நடத்தப்பட்டு ஒருவரின் ‘தனியுரிமைக்கான உரிமை (Right to Privacy) மறுக்கப்படுகின்றது. ‘தனியுரிமைக்கான உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின்கீழ் வருகிறது. உதாரணமாக, ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது, தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது அல்லது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவது போன்ற செயல்கள் தனியுரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன.

ஊடக விசாரணை என்பது நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கும் நியாயமான விசாரணை போக்கைத் திசைதிருப்புவதோடு, ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்மீது ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அந்த நபர் குற்றவாளி என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறது. ஒரு விசாரணையின் முடிவில் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிக்கும் வரை, ஊடகங்கள் ஒருவரைக் குற்றவாளி என்று முடிவு செய்வது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 12-யின் அடிப்படையில் ஊடக விசாரணையில் ஈடுபடும் வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

ஊடகங்கள் நீதியைப் பாதுகாப்பதே தவிர, நீதியை வழங்குகின்ற தளம் அல்ல; ‘எல்லாரும் ஊடகம், எல்லாரும் நேயர்கள் என்ற இக்காலச் சூழலில், ஊடகங்கள் இன்னும் அதிகமாகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.

ஊடகங்கள் விசிலாக இருக்கட்டும், விஷமாக அல்ல!