news-details
ஞாயிறு மறையுரை
நவம்பர் 09, 2025, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா - எசே 47:1-2,8-9,12; 1கொரி 3:9-11,16-17; யோவா 2:13-22 - ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ‘கோபுரத் தரிசனம் கோடி புண்ணியம்என்பவை நம் முன்னோர் கூறிச்சென்ற மிக அழகான முதுமொழிகள். மனித வாழ்வில் ஆலயத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்? ஆலயங்கள் பல்வேறுபட்ட தலைமுறைகளின் கலாச்சார, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள். ஆலயம் என்பது அன்பு, மன்னிப்பு, தியாகம், ஒற்றுமை, பிறரன்பு, விட்டுக்கொடுத்தல், பெருந்தன்மை, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளின் கூடாரம்.

ஆலயம் என்பதற்குஆன்மாக்கள் ஆண்டவனின் திருவடியில் இலயிக்கும் இடம்என்பது பொருள். ‘என்றால் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள், ஆன்மாக்கள். இலயம் என்றால் ஒருமைப்படுதல். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் மனம் ஒன்றி இலயிக்கும் இடமே ஆலயம். ஆலயத்திற்குகோவில்என்ற பெயரும் உண்டு. ‘கோஎன்பதற்குக் கடவுள் அல்லது அரசன் என்பது பொருள். ‘இல்என்றால் குடியிருக்குமிடம், இல்லம் என்று பொருள். எனவே, கோவில் எனப்படுவதுகடவுள் குடியிருக்குமிடம்என்பதாகும்.

நம் திரு அவையில் பெருங்கோவில்கள், தலைமைப் பேராலயம், ஆலயங்கள், திருத்தலங்கள், சிற்றாலயங்கள் என்று பல்வேறு நிலைகளில் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ஆலயங்கள் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை யாவும் மக்களின் வழிபாட்டுத்தலங்களாக இருக்கின்றன. ஆலயங்கள் இறையருளின் வாய்க்கால்களாக, மனமுடைந்த தருணங்களில் கண்ணீர் மல்க மன்றாடும்போது, இவை நம்பிக்கை தரும் அடைக்கலப் பாறையாக இருப்பதை நம்மால் உணரமுடியும்.

இன்று கோவில்களைப் பற்றி நாம் சிந்திக்கும் வேளையில், உலகில் இருக்கக்கூடிய ஆலயங்களுக்குள் எல்லாம் சிறந்த ஆலயமாக விளங்கக்கூடிய தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கமுடியாது.

தூய இலாத்தரன் பெருங்கோவில் உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும், அனைத்துலகத் திரு அவைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் அமைந்த கோவிலாக விளங்குகிறது. கத்தோலிக்கத் திரு அவையின் பேராலயங் களிலெல்லாம் மிகப் பழமையான பேராலயமும் இதுதான். உரோமை நகரில் அமைந்துள்ள இக் கோவில், உலகமனைத்திற்கும்தாய்க் கோவிலாகவும், ‘தலைமைக் கோவிலாகவும்கருதப்படுகிறது. இந்தத் தூய இலாத்தரன் பெருங்கோவிலின் நேர்ந்தளிப்பு விழாவைத்தான் நாம் இன்று கொண்டாடுகிறோம்.

இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிளாசியோ இலாத்தரானோ என்ற ஆளுநருக்குச் சொந்தமானதாக இருந் தது. கி.பி. 65-இல் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற பிளாசியோ என்பவர் நீரோ மன்னனுக்கெதிராகச் செயல்பட்டதால் பிளாசியோவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான இலாத்தரன் பெருங்கோவில் இருக்கும் இடம் நீரோ மன்னனுக்குச் சொந்தமானது. அதன்பின், கி.பி.  313-ஆம் ஆண்டில் மன்னன் கான்ஸ்டாண்டைன் கிறித்தவ மக்களுக்கு வழிபாட்டு உரிமையை வழங்க விரும்பி இவ்விடத்தில் அவர்களுக்கான ஆலயம் ஒன்றைக் கட்ட விரும்பினார்.

கி.பி. 318-ஆம் ஆண்டில் திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர் அக்கோவிலை, ‘தூய்மைமிகு மீட்பராம் கிறிஸ்துவுக்குநேர்ந்தளித்தார். 9-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை மூன்றாம் செர்ஜியுஸ் இக்கோவிலைத்திருமுழுக்கு யோவான் ஆலயம்என்றும், 12-ஆம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் லூசியஸ்நற்செய்தியாளர் தூய யோவான் ஆலயம்என்ற பெயரையும் வழங்கினர். அதனால் இப்பேராலயத்திற்கு இயேசு மீட்பர் ஆலயம், திருமுழுக்கு யோவான் ஆலயம், நற்செய்தியாளர் யோவான் ஆலயம் என மூன்று பெயர்களுண்டு.

திருத்தந்தையின் ஆலயம்என்று அழைக்கப்படும் இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவைகளும் நடைபெற்றிருக்கின்றன. பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம்பொன் ஆலயம்என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு சிறப்புமிக்க தூய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில், இன்றைய வாசகங்கள் ஆலயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நமக்கு உணர்த்துகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் கடவுளின் இல்லத்தினின்று, அவரது புனித மலையாம் சீயோனின்று புறப்படுகின்ற நீரோடை, வாழ்வு தரும் நீராக இருக்கும் என்று குறிப்பிடுகின்றார். ‘கோவிலிலிருந்து வரும் தண் ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்என்கிறார். அதாவது, நலமான, வளமான வாழ்வுக்குத் தேவையானவற்றை அடையாளம் காட்டும் தளமாக இருப்பவை ஆலயம். உண்மையில் ஆலயம் என்பது இறை உடனிருப்பின் அடையாளம்; இரக்கத்தின் இருக்கை.

ஆனால்... இன்று ஓங்கி உயர்ந்த ஆலயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள், வனப்புமிக்க ஓவியங்கள், தங்கமும் வைரமும் கலந்த அலங்காரங்கள், கண்களைக் கவரும் ஆலய முகப்புத்தோற்றங்கள்... உண்மையில் கடவுளை அடையாளம் காட்டும் குறியீடாக இருக்கின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். ஆலயங்கள் அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, அதிகாரத்தின் மையமாக அன்றும் இன்றும் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். ஆலயம் ஒன்றிணைக்கும் இடமாக, பாகுபாடுகளைக் களையும் இடமாக, வாழ்வு தரும் இடமாக, நம்பிக்கையை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். ஆனால், இத்தன்மையை ஆலயங்கள் இழந்தபொழுது இறைவாக்கினர்கள் மிகக் கடுமையாக இறைவாக்குரைத்தனர் (எரே 7:3-11). இயேசுவும் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்ற வேளையில், “என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் (யோவா 2:16) எனக் கடிந்துகொண்டார். ஆலயம் கள்வர்களின் குகையாக (மாற் 11:17; லூக் 19:46) ஏழைகளின் இரத்தம் குடித்த சூழலில், அதன் புனிதம் காக்கக் கடுமையாகச் சாடினார்.

இன்றைய நற்செய்தியில், யூத நம்பிக்கையின் மையமான எருசலேம் ஆலயம் அர்த்தமற்றுப்போக, கடவுளின் வலக்கரத்தால் புதிய ஆலயம் எழுவது பற்றிப் படிக்கின்றோம். ஆலயத்திற்கு புதிய பார்வையை இயேசு முன் வைக்கிறார். உயிர்ப்பெற்றெழப்போகும் இயேசுவே இறைவனும் மனிதரும் சந்திக்கும் புதிய ஆலயம். மனிதர் கையால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, கடவுளை உள்ளத்தில், உறைவிடத்தில் வழிபட அழைக்கிறார் இயேசு. “கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவில் உள்ளது (திவெ 21:3); “வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14). எனவே, மனுவுருவான இயேசுவே கோவில் எனப் புரிய முடியும் (யோவா 2:21). ஆகவேதான், ‘46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இடித்துவிடுங்கள். அதை நான் மூன்று நாளில் கட்டி எழுப்புவேன் (2:19) என்று இயேசு கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளின் அடிப்படையில், சடங்குத்தனமான வழிபாட்டைத் தள்ளி வைத்துவிட்டு, கடவுள் வாழும் ஆலயம் மனிதர்தாம் எனும் மிக உயர்ந்த இறையியல் சிந்தனையை முன் வைக்கிறார் திருத்தூதர் பவுல். கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில்வாழும் கடவுளின் கோவில் நாமே (1 கொரி 3:16) என்கிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் நடுவில் கடவுள் கூடாரத்தில் உறைந்தார். இப்போது தூய ஆவி நம் உள்ளங்களில் குடிகொள்கிறார். இதனால் நாம் அவர் வாழும் கோவிலாகிறோம் (6:19; எபே 2:21). எபேசு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல், திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோரை அடித்தளமாகவும் கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறோம் (எபே 2:20) என்கிறார். இப்பகுதியில் திருத்தூதர் பவுல், இறைவன் கற்களால் கட்டப்பட்ட ஆலயத்தில் அல்ல; மாறாக, இறைமக்களின் இதயங்களில் வாழ்பவராக இருக்கிறார் என்கிறார். ‘ஊனுடம்பு ஆலயம்என்று திருமூலர் கூறியதில் ஆழ்ந்த அர்த்தம் உண்டு அன்றோ!

நிறைவாக, இன்றைய விழா நமக்கு உணர்த்தும் பாடம்: முதலில், நாம் ஒவ்வொருவரும் இறைத் தாங்கிகள். அதாவது மனிதராகிய நாம் கடவுளின் உடனிருப்பைத் தாங்கியுள்ள உயிருள்ள நடமாடும் ஆலயங்கள் என்பதை உணரவேண்டும். இரண்டாவதாக, நமக்குள் இறைவன் தங்கி வாழ்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும், நமது உடலென்னும் ஆலயத்தைப் புண்ணியங்களால் அலங்கரிக்கவும் வேண்டும். ‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்என்பது கண்ணதாசரின் பொருளுள்ள வரிகள். மூன்றாவதாக, பெருங்கோவில்களில் அலங்காரங்களைப் பார்த்துப்பழகிய நாம், மனிதரில் கடவுளைப் பார்க்கும் நிலைக்கு உயரவேண்டும். அறிவால் கடவுளை ஆராய்வதைவிட அன்பால் கடவுளை உணர்வோம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று!