news-details
ஆன்மிகம்
விளிம்புகளிலிருந்து தொடங்குகிறது எதிர்நோக்கின் யூபிலி! (தலித் விடுதலை ஞாயிறு - நவம்பர் 9, 2025 சிறப்புச் செய்தி)

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 2-ஆம் ஞாயிறைதலித் விடுதலை ஞாயிறுஎன இந்திய ஆயர் பேரவையும் (CBCI), இந்தியத் திரு அவைகளின் தேசியப் பேரவையும் (NCCI) இணைந்து சிறப்பிக்கின்றன. இந்த நாளை அனைத்துப் பங்குகளிலும், துறவற மையங்களிலும் திருப்பலி, செப வழிபாட்டிலும் கொண்டாடுவோம்.

விளிம்புகளிலிருந்து தொடங்குகிறது எதிர்நோக்கின் யூபிலிஎனும் இந்த ஆண்டின் தலைப்பு, தம் மீட்புப் பணியை எப்போதும் விளிம்புநிலை மாந்தரிடமிருந்தே தொடங்கும் நல் இறைவனை மீண்டும் கண்டடைய நம்மை அழைக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரலைக் கேட்கும் இறைவன் (விப 3:7-10)

திருமுழுக்கு மூலம்இறைவனின் மக்கள்எனும் மாண்பைப் பெற்ற பின்னரும், தலித் கிறித்தவர்கள் இன்றும் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள்; அவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. திரு அவைக்குள்ளும் சாதி அடிப்படையிலான ஒடுக்கு முறைகள் நடந்தேறி வருகின்றன. பங்குத் திரு விழாக்களிலும், பங்குப் பேரவைகளிலும் பங்கேற்கும் சம உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது; கல்லறைகளிலும் சாதியப் பிரிவினையும் ஒதுக்குதலும் நிகழத்தான் செய்கின்றன. ஆயர் பேரவையின் பல நல்ல முன்னெடுப்பு களுக்குப் பின்னரும், இந்த அவலங்கள் தொடரத்தான் செய்கின்றன.

ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரலைக் கேட்கும் இறைவன்மீது தலித் கிறித்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சில நேரங்களில், சில இடங்களில் அவர்களின் அழுகுரலை உரிமைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கச் செய்கின்றது. விளிம்புகளில் தொடங்குகிறது நம்பிக்கையின் யூபிலி என்பதற்கு இதுவே அடையாளமாகவும் சான்றாகவும் விளங்குகிறது.

சகோதரத்துவ ஒற்றுமை பற்றிய திருப்பாடல் (திபா 133)

திரு அவை ஒரு படிநிலைச் சமூகம் அல்ல; இது சமத்துவம் மிக்க ஒரு குடும்பம். பிரிவினைச் சுவர்கள் சகோதர ஒற்றுமைக்கும் திரு அவைக்கும் மாறானவை.

சாதியப் பாகுபாட்டின் எந்த வடிவமும் நற்செய்திக்கு முரணான குறியீடு எனத் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பவுல் அவர்கள் 2003-இல் இந்திய ஆயர்களை எச்சரித்தார்: “சாதி அடிப்படையிலான முற்சார்பின் எந்த ஒரு சாய லும் உண்மையான ஆன்மிகத்திற்கு அச்சுறுத்தலாகவும் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குத் தடையாகவும் அமைகிறது.”

திரு அவைக்குள் சாதி நுழையும்போது, கிறிஸ்து மீண்டும் சிலுவையில் அறையப்படுகிறார் - இந்த முறை கல்வாரி மலையில் அல்ல; நம் திரு அவைச் சமூகங்களில்.

நம்பிக்கை நம்மை ஒரே குடும்பமாக மாற்றுகிறது (கலா 3:23-29)

இன்றைய காலகட்டத்தில் பவுல் நம்மிடையே இருந்தால், அவர் இவ்வாறு கூறியிருக்கலாம்: “தலித்தும் இல்லை; தலித் அல்லாதவரும் இல்லை - நீங்கள் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாக இருக்கிறீர்கள்.”

தூய பவுலின் இந்த அறிவிப்பு, திரு அவை வாழ்ந்து காட்டவேண்டிய ஓர் ஆன்மிக உண்மை. இன்னும் நாம் அந்த ஆன்மிக உண்மையிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை, 2007-இல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் வெளிப்படுத்தியது.

தலித் கிறித்தவர்கள், பொதுச்சமூகத்தில் மட்டுமல்ல, திரு அவைக்குள்ளும் பாகுபாடுகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை அந்த ஆணையம் ஆவணப்படுத்தியது.

இட ஒதுக்கீட்டிற்குத் தகுதிபெறும் பட்டியலிடப்பட்ட சாதி (Scheduled Caste) அந்தஸ்தை, தலித் கிறித்தவர்களுக்கு அரசு மறுப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றொரு கொடுஞ் செயலாகும்.

சமாரியப் பெண்ணுடன் இயேசு (யோவா 4:1-9)

இயேசு ஒரு சமாரியப் பெண்ணைச் சந்திக்கிறார். ஒரு பெண்ணாகவும், தீண்டத்தகாத இனத்தைச் சார்ந்தவராகவும்  இரட்டைப் புறக்கணிப்புக்குள்ளானவர் இந்தச் சமாரியப் பெண். யூதரும் சமாரியரும் கிண்ணத்தில் நீர் அருந்துவதுமில்லை, பகிர்வதுமில்லை. ஆனால், இயேசு, “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்என்ற ஓர் எளிய வேண்டுகோளால் அந்தத் தீண்டாமைத் தடையை உடைத்தெறிந்தார். அந்தத் தருணத்தில் இயேசு ஒரு சமூக எல்லையைக் கடந்தார். புறக்கணிக்கப்பட்ட சமாரியப் பெண்ணிடம் இயேசு உரையாடியதன் மூலம், தமது இறைமையை அப்பெண்ணுக்கு வெளிப்படுத்தினார். நம் ஆண்டவரின் இறைவெளிப்பாடு விளிம்புகளில் நிகழ்கிறது.

இறைவாக்குரைக்க அழைக்கப்பட்டுள்ள திரு அவை

சாதியப் புறக்கணிப்பை/பாகுபாட்டை ஒரு தீவிரமான சமூகப் பாவமென 2016-இல் வெளியிடப்பட்ட தலித் கிறித்தவர்களின் அதிகாரப்படுத்துதலுக்கான இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI Policy of Dalit Empowerment in the Catholic Church in India) குறிப்பிடுகிறது. இந்தியக் கத்தோலிக்கர்களில் 65% பேர் தலித்துகள் என்பதை அந்தக் கொள்கை வரைவு சுட்டிக்காட்டுகிறது. இருப்பினும், அவர்கள் திரு அவையின் தலைமைப் பணிகளிலும் கல்வியிலும் மறைப்பணி அமைப்புகளிலும் குறைவாகவே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்.

தலித் விடுதலைக்கான எந்த ஒரு செயல்திட்டமுமின்றி, தலித் விடுதலை ஞாயிறைச் சிறப்பிப்பது ஒரு வெற்றுச்சடங்கும் பாசாங்குமாகும். விடுதலையைப் போதிப்பது மட்டுமல்ல, அதை வாழ்ந்து காட்டுவதும் திரு அவையின் பொறுப்பே.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்Fratelli Tutti’-இல் ஒரு மாபெரும் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்: “அன்பு வட்டத்திலிருந்தும் சகோதரத்துவ வட்டத்திலிருந்தும் யாரும் விலக்கப்படமுடியாது (பத்தி 97). இப்பேருண்மையை வாழ்ந்து காட்ட வேண்டியது திரு அவையின் கடமை.

அக்டோபர் 2025-இல் வெளியானDilexi Teஎன்ற புதிய நன்மதிகூறல் மடலில், திருத்தந்தை பதினான்காம் லியோ ஓர் அருமையான செய்தியை நினைவூட்டுகிறார்: “எனவே, ஏழைகளுக்கான அன்பு அவர்களின் ஏழ்மை எந்த வடிவத்தில் இருந்தாலும், இறைவனுடைய இதயத்திற்கு உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும் (பத்தி 103). இந்த நினைவூட்டலை இந்தியப் பின்னணியில் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: ‘தலித்துகளுக்கான அன்பு... இறைவனுடைய  இதயத்திற்கு உண்மையாய் வாழும் திரு அவையின் நற்செய்தி அடையாளமாகும்.’

எதிர்நோக்கின் யூபிலி

திருவிவிலிய யூபிலி காலத்தில் கடன்கள் மன்னிக்கப்பட்டன; அடிமைகள் விடுதலை அடைந்தனர்; மூல உரிமையாளர்களிடம் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. சமத்துவமும் புதுப்பித்தலும் நிலவும் காலமே யூபிலியாகும்.

இன்று நாம் கொண்டாடும்எதிர்நோக்கின் யூபிலிஅரண்மனைகளிலோ, பேராலயங்களிலோ அல்ல; விளிம்புகளில்! தலித் கிறித்தவர்கள் மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் தொடங்குகிறது.

ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்பது, ஒடுக்குதல் எனும் பாவத்திலிருந்து ஒடுக்குவோர் பெறும் விடுதலையும் ஆகும்என்கிறார் விடுதலை இறையியலாளர் குஸ்தாவோ குடியெரெஸ். இவர் கூறியதுபோல், தலித்துகள் விடுதலையடையும்போது, முழு திரு அவையும் விடுதலை பெறுகிறது. விளிம்பில் கிடப்பவர்கள் எழுந்து, நிமிர்ந்து நிற்கும்போது, மையம் தன் ஆன்மாவை மீண்டும் கண்டடைகிறது.

மனமாற்றத்திற்கான அழைப்பு

இன்றைய திருப்பலி ஒரு மனமாற்றத்தின் (மெட்டானோயா) தருணம். இதயங்கள் இறைவனிடம் திரும்பும் நேரம். கிறிஸ்துவின் மறையுடலான திரு அவையில் சாதியம் நிலைத்திருக்கக் காரணமாக இருந்த நம்முடைய மௌனம் மற்றும் பங்களிப்பிற்காக மனம் வருந்துவோம், மனம் திருந்துவோம்.

வேடிக்கைப் பார்ப்பவர்களாகவோ, வெறும் பார்வையாளர்களாகவோ இராது, அனைவரும் சமப் பங்கேற்பாளர்களாகத் திகழும் பங்குத்தளங்களைக் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.

இறுதியாக...

இந்தத் தலித் விடுதலை ஞாயிறு உண்மையிலேயே ஓர் எதிர்நோக்கின் யூபிலியாக அமையுமாறு இறைவேண்டல் செய்வோம். நீதியும் சகோதரத்துவமும் நிறைந்த இறையாட்சி, விளிம்புகளிலிருந்து விடியட்டும்.

நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார் (திருப்பாடல் 40:1-2) என ஒவ்வொரு தலித் கிறித்தவனும் மகிழ்ச்சிப்பண் பாடும் தருணம் விரைந்து நெருங்கட்டும்!

புறக்கணிப்போ புறம்தள்ளுதலோ இல்லாத ஒரு குடும்பமாக, கிறிஸ்துவின் அன்பினால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாக, அனைவரும் சம உரிமையுடனும் சமமாண்புடனும் வாழ வகை செய்யும் இறையாட்சியின் உயிருள்ள அடையாளமாக நம் திரு அவை மாறட்டும்!