திருப்பலி முன்னுரை
விழிப்பாய்
இருக்கவும், இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் பொதுக்காலத்தின் இறுதி ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் வாயில்
வாய்மையும், செயலில் நேர்மையும், உள்ளத்தில் உண்மையான அன்பும், அனைத்து மக்களோடு நல்லுறவும், ஏழைகளோடு தோழமையும், வார்த்தையில் மென்மையும், மனத்தில் தூய்மையும், எண்ணத்தில் உயர்வும், கண்களில் கருணையும் கொண்டு வாழும்போது இறுதிநாளில் இறைவன் முன்னிலையில் கலக்கமின்றி மகிழ்வோடு நிற்கலாம்.
வாழ்க்கை
என்பது ஒருமுறைதான்; அதில் அன்பை மட்டும் அதிகமாகச் செலவு செய்வோம். மன்னிப்பைத் தேடிச்சென்று கொடுப்போம். இன்னார் என்று இல்லாமல், நாம் சந்திக்கும் அனைவருக்கும் அன்பையும் மகிழ்ச்சியையும் உடனிருப்பையும் உறவையும் கொடுக்க முன்வருவோம். குறிப்பாக, உலக வறியோர் தினத்தைக் கொண்டாடும் இந்நாளில், ஏழைகளின் முகத்தில் இறைவனைக் காண்போம்.
ஏழைகளுக்காக
மன்றாடும்போதும், அவர்களுக்காகப் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும்போதும் நாம் கடவுளோடு ஒன்றிக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம். ஏழைகளுக்கு உதவுவதில் முன்மாதிரியாய் இருந்து, தேவையில் இருப்போருக்கு விரைந்துசென்று உதவிய அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம். அச்சம் தவிர்த்து இறுதிநாளில் மானிட மகனை எதிர்கொள்வோம், நம்பிக்கையோடு இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
நம்முடைய
வாழ்க்கையின் இறுதிநாள்களைப் பற்றிச் சிந்திக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்முடைய வாழ்நாள்களில் எதை விதைக்கின்றோமோ, அதையே அறுவடை செய்வோம். சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் மாசற்றவர்களாய் வாழ்ந்து இறையில் சங்கமிக்க இறைவார்த்தைக்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசசகம்
முன்னுரை
இன்றைய
வாசகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? எவ்வாறு உழைக்க
வேண்டும்? என்பதைத் தன்னுடைய வீரியமுள்ள வாழ்க்கையால் தூய பவுல் நம் உள்ளத்தில் விதைக்கிறார். மற்றவர்களுக்குச் சுமையாய் இல்லாமல், சுகம் கொடுப்பவர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ‘நீயே ஆசியாய்
விளங்குவாய்’ என்று
மொழிந்த ஆண்டவரே! எம் திரு
அவைக்கு நீர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தத் தலைவர்கள் உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. பாதுகாக்கும்
பரம்பொருளே எம் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்களுடைய வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உம்மை அறிவிக்கவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு உதவி செய்து வாழவும், தேவையான நல்மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எங்களோடு
வாழும் ஆண்டவரே! பங்கு
மக்களாகிய நாங்கள் அனைவரும் பங்கின் வளர்ச்சியில் எப்போதும் துணைநிற்கவும், இணைந்து உழைக்கவும், அனைத்தையும் கடந்து கடவுளின் பிள்ளைகள் என்ற உறவில் வாழவும், தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நல்லாயனே
எம் இறைவா! எம் குடும்பங்களில் உள்ள இளையோர் அனைவரும் உம் வார்த்தைகளைப் படிக்கவும், இறைநம்பிக்கையில் நாளும் வளரவும், திரு அவை காட்டுகின்ற நெறிகளில் வளரவும் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.