திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறை நாம் நெருங்கி வந்துள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் அடுத்த திருவழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்க இருக்கின்றோம். சென்ற ஆண்டு இந்தத் திருவழிபாட்டு ஆண்டை நாம் தொடங்கியபோது, நமக்குத் தரப்பட்ட திருவிவிலிய வாசகம் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று மீண்டும் லூக்கா நற்செய்தி 21-ஆம் பிரிவிலிருந்து வாசகம் தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஞாயிறு திருப்பலிகளில் லூக்கா நற்செய்தியின் பகுதிகள் வழியாக இறைவன் நமக்களித்த மேலான எண்ணங்களுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
ஆண்டின்
33-ஆம் ஞாயிறான இன்றைய நாளின் சிறப்பு என்னவெனில், இன்று நாம் ‘நீரே என் நம்பிக்கை’
என்ற திபா 71:5 வரிகளைக் கருப்பொருளாகக் கொண்டு, ஒன்பதாவது உலக வறியோர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்நாளில், நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாசகங்கள் இறுதி நாள்களைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
‘வாழ்வின் இறுதிநாள் எப்போது நிகழும்? எப்படி நிகழும்? இப்போதே நிகழுமா?’ எனும் கேள்விகளுக்குத் தந்தையைத் தவிர வேறு எவருக்கும் விடை தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே இன்றைய வழிபாடு நமக்கு விடுக்கும் அழைப்பு.
இன்றைய
முதல் வாசகம் ஆண்டவரின் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஆண்டவரின் நாள் என்பது கடவுளின் வருகையைப் பற்றிய இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையாகும். இறைவாக்கினர் எசாயாவும் ‘ஆண்டவரின் நாளை’
(13:9) பற்றிக் குறிப்பிடும்போது, அது பாவிகளை முற்றிலும் அழித்துவிடும் நாளாக இருக்கும் என்று கூறுகிறார். ஆண்டவர் வரும் அந்த நாளில் நீதி, நேர்மை, உண்மை, நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றவர்கள் கடவுளிடம் நல்ல கைம்மாறு பெறுகின்றனர். எவரெல்லாம் இம் மதிப்பீடுகளைக் கைவிட்டுத் தீயநெறியில் வாழ்கின்றார்களோ, அவர்கள் தண்டனைத் தீர்ப்பிற்கு உள்ளாவர் என மலாக்கி கடுமையாகச்
சாடுகிறார் (4:1).
இன்றைய
நற்செய்தியிலும் ஆண்டவரின் நாளான அவரது இரண்டாவது வருகையைப் பற்றியும், உலகத்தின் இறுதி நாளைப் பற்றியும் லூக்கா விவரிக்கின்றார். இந்தப் பகுதி ஆண்டவரின் நாள், எருசலேம் அழிவு, இயேசுவின் இரண்டாம் வருகை, வரவிருக்கும் மறைத்துன்பங்கள், உறுதியான இறைநம்பிக்கை, மறுவாழ்வு என, பல கருத்துகள் பின்னிப்பிணைந்து
இருக்கின்றன. எனினும், உலக முடிவையும், இயேசுவின் இரண்டாம் வருகையையும் அச்சத்துடன் நோக்காமல் நமது கடமைகளை நிறைவேற்றி, கிறிஸ்துமீது கொண்டுள்ள நம்பிக்கையில் நிலைத்திருந்ததால் ஆண்டவர் வருகையின்போது, நாம் நமது வாழ்வைக் காத்துக்கொள்வோம் என்பதே இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி.
இன்றைய
நற்செய்தியின் துவக்க வரிகளில் கவின்மிகு கற்களாலும் நேர்ச்சைப் பொருள்களாலும் அழகுபடுத்தப்பட்டிருக்கும் கோவில் ‘கல்லின்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும்’ என
இயேசு எடுத்துரைக்கிறார். இயேசு கூறிய இந்தக் கோவிலின் பின்னணித் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
முதலில்,
கடவுளுக்கென்று ஓர் ஆலயம் எழுப்ப பேரரசரான தாவீது விரும்பினார். ஆனால், அது அவரால் இயலாமற்போயிற்று. அவரது மகனான சாலமோன் மன்னரால் கி.மு. 950-களில்
ஆண்டவருக்கென்று அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. சாலமோன் கட்டிய ஆலயத்தைக் கி.மு. 587-இல்
பாபிலோனிய மன்னன் நெபுகத் நேசர் இடித்துத் தரைமட்டமாக்கினார் (2அர 25). ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாபிலோனிய அரசு வீழ்ச்சி கண்டது. பாரசீக மன்னர் சைரஸ் (கி.மு. 538) இஸ்ரயேலருக்கு
விடுதலை அளித்தார். யூதர்களுக்கு விடுதலை அளித்த பாரசீகர்கள், எருசலேம் தேவாலயத்தைக் கட்டவும் உதவிசெய்தனர். எஸ்ரா, நெகேமியா தலைமையில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது (எஸ்ரா 3:3; சீஞா 49:13).
செருபாபேல்
கட்டிய இரண்டாம் ஆலயம் (எஸ்ரா 4:3) அதன் அழகிலும் மேன்மையிலும் முதலாவது ஆலயத்திற்குக் குறைவாகவே இருந்தது (ஆகா 2:1-3). எனவே, 500 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 2020-இல்
பெரிய ஏரோது இந்தக் கோவிலைப் புனரமைப்பு செய்து எழில்மிகு கற்களைக் கொண்டும், பொன்-வெள்ளிப் பொருள்களாலும் பேரரசன் சாலமோன் கட்டிய முதல் ஆலயத்திற்கு இணையான ஆலயத்தைக் கட்டினான். இந்த ஆலயத்தின் அழிவைப்பற்றிதான் இயேசு முன்கூட்டியே அறிவிக்கிறார். இயேசு கூறியதுபோலவே, கி.பி.70-இல்
எருசலேம் ஆலயம் உரோமைப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் ஒரு தடுப்புச்சுவர் மட்டும்தான் இன்று எஞ்சியிருக்கிறது. அதனைத்தான் யூதர்கள் ‘கண்ணீர் சுவர்’ என்றழைக்கிறார்கள். அழிக்கப்பட்ட ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப முடியாததை நினைத்து, இந்தச் சுவர்களில் யூதர்கள் மோதி கண்ணீர் வடித்துச் செபிக்கின்றனர்.
யூதர்கள்
பொறுத்தவரை எருசலேம் ஆலயத்தைத் தங்கள் இதயமாகக் கருதினர். இக்கோவில் அவர்களின் இறையுணர்வுகளின் மகத்தான அடையாளம். ஆண்டுதோறும் ஒருமுறையேனும் இவ்வாலயம் சென்று பலி ஒப்புக்கொடுப்பதும், காணிக்கை செலுத்துவதும் பெரும் சட்டமாக யூதர்கள் கருதினர். இவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்தில் பல்வேறு முறை கேடுகளும் நேர்மையற்ற செயல்களும் நடைபெற்றதைக்கண்டு சாட்டைப் பின்னி அவர் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தினார் (லூக் 19:45-46). கடவுளின் ஆலயமே கள்வர் குகையாக, சந்தைக்கூடமாக மாறிப்போனது. எனவேதான், யூதர்களின் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய எருசலேம் ஆலயம் இடிபடும் என அவ்வாலயத்தின் அழிவு
பற்றி முன்னறிவிக்கிறார் இயேசு.
இயேசுவின்
முன்னறிவிப்பு இன்று நமக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. உள்ளக் கோவில்தான் இறைவன் இல்லம். இறைவன் தந்த ஆலயமே நம் உள்ளம் (1கொரி 3:16-17). யூதர்கள் ஆலயத்தைத் தாண்டிக் கடவுளின் பிரசன்னத்தை எவரிலும் எதிலும் காணத் தயாராக இல்லை. இம் மனநிலையில்தான் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? உள்ளம் எனும் ஆலயத்தில் புனிதம் காக்கத் தவறிவிட்டால் அங்கு இறைப்பிரசன்னத்திற்கு ஏது வழி? எனவே, நமது நம்பிக்கை ஆலயத்தையும், ஆண்டவரின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரையும் கடவுள் வாழும் கோவிலாகப் பார்க்க அழைக்கிறது இன்றைய நற்செய்தி.
திருத்தந்தை
பிரான்சிசும் அவர் வழிவந்த திருத்தந்தை லியோவும் ஏழைகளில் கிறிஸ்துவின் முகத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். திருத்தந்தை இந்த ஆண்டு வழங்கிய ஒன்பதாவது வறியோர் தினச் செய்தியில், வறுமையை ஏற்றுக்கொண்ட கடவுள் வறியோரின் குரல்கள், கதைகள் மற்றும் முகங்கள் வழியாக நம்மை வளப்படுத்துகின்றார் என்கிறார். மேலும் அவர், ஏழைகள் நற்செய்தியின் மையமாக இருக்கின்றார்கள், நற்செய்தி அறிவிப்பைப் பெற்றுக்கொள்ளும் முதன்மையானவர்களாக, நமது மேய்ப்புப்பணியின் இதயமாக இருக்கின்றார்கள் என்றும், அத்தகைய ஏழைகளிடமிருந்து நமது பார்வையை விலக்கிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். வறியோர் இறைவனின் கண்களில் விலைமதிப்பற்றவர்கள்; அவர்கள் நற்செய்தியின் வழியில் நாம் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதை நினைவூட்டுபவர்கள் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய
உலகில் நடைபெறும் போர்கள் எண்ணற்ற மக்களைப் புலம்பெயரச் செய்துள்ளது; அவர்களை இல்லமற்ற வறியோராக்கியுள்ளது. இன்று உலகில் 120 கோடி மக்கள் இல்லமற்றவர்களாக இருக்கின்றனர். உலகிலுள்ள பெரும்பாலான சொத்துகள் சில நூறுபேரின் கரங்களில் இருக்கின்றன என்பதே நிதர்சன உண்மை. அநீதியே இவ்வுலகின் வறுமைக்கு அடிப்படைக் காரணம். மனித சமூகத்தில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் தன்னலமே. அக்கறையற்று, கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதோ, ‘ஒன்றும் செய்ய இயலாது’ என்று கைகளை விரித்தபடி தன் இயலாமையை வெளிப்படுத்துவதோ ஒரு கிறித்தவரின் செயலாக இருக்கமுடியாது. தேவையில் இருப்போருடன் நாம் கொள்ளும் தொடர்பின் வழியே நமது நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இயேசு கிறிஸ்துவைப்போல் அயலவரை அணைக்க நாம் கரங்களை விரித்துக் காத்திருப்போம்.
இறுதிக்காலத்தின்
கொடிய முடிவை உணர்ந்து ஒவ்வொருவரும் பொருளுள்ளதாக்கிக்கொள்வோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் குறிப்பிடுவதுபோல, கடின உழைப்பு, நேரிய உள்ளம், நன்மை செய்வதில் தளராமனம் கொண்டவர்களாக வாழ முற்படுவோம். பணம், புகழ் என்று அழியும் சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதெனும் நம்பிக்கையோடு உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.