news-details
சிறப்புக்கட்டுரை
SIR வாக்குரிமை மேல் தொங்கும் கத்தி! (வலைத்தளம் வந்த செய்தி - வாக்காளர் தந்த செய்தி)

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள ‘SIR’ (Special Intensive Revision) என்பது சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல; இதன் தாக்கம், விளைவு, நோக்கம் ஆகிய மூன்றும் தீவிரமாகப் புரிந்துகொள்ள வேண்டியவையாகும். வழக்கமாகத் தேர்தல் ஆணையம் வருடந்தோறும் இறந்தவர்களை நீக்குதல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், ஊரை விட்டு நீண்ட காலமாக இல்லாதவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற திருத்தங்களைச் செய்கிறது. ஆனால், இந்த முறை ‘SIR’ என்ற பெயரில் நடப்பது, பழைய வாக்காளர் பட்டியலைத் திருத்துவது அல்ல; அதை முற்றிலுமாக ஒழித்துப் புதிய பட்டியல் உருவாக்கும் செயல்முறை.

தமிழ்நாட்டின் 6 கோடி 36 இலட்சம் வாக்காளர்களும் இப்போதைய நிலையில்இருப்பதாகஇனி ஏற்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் பழைய பட்டியலைக் களையெடுத்து, குப்பைத்தொட்டியில் போட்ட நிலையிலேயே ஒவ்வொருவரும் புதிய கணக்கெடுப்புப் படிவத்தை (enumeration form)  நிரப்பிச் சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் அடையாளம் கிடைக்கும். அப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், வாக்குரிமை தானாகவே அழிகிறது. இவ்வளவுதான்! ஆனால், இதன் விளைவுகள் மிகப்பெரியது.

ஒரு வாக்குச்சாவடிக்குள் உள்ள மக்கள் அனைவரும் அப்படிவத்தை நிரப்பவில்லை என்றால், அந்த முழு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் இல்லை எனும் அபாயம் உருவாகிறது. அதனால், இதுதிருத்தம்அல்ல; மொத்தமாகநீக்கம்எனப் பலரும் உணரத்தொடங்கியுள்ளனர். இதன் நோக்கம் வாக்காளர்களைச் சரிபார்ப்பதா? அல்லது சிலரை விலக்குவதா? என்ற கேள்வி உருவாகிறது.

சந்தேகத்தை ஊட்டும் விவரங்கள்

புதிய கணக்கெடுப்புப் படிவத்தில் ஆச்சரியமூட்டும் அளவுக்குப் பெருமளவு விவரங்கள் கேட்கப்படுகின்றன. பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், தந்தை அல்லது பாதுகாவலரின் பெயர் மட்டுமல்லாமல், தாய் மற்றும் வாக்காளர் அடையாள எண் வரையிலும் கேட்டுள்ளார்கள். மேலும், 2002-இல் நடந்த முந்தைய தீவிரத் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் பெயரும், அவருடன் உள்ள உறவு முறையும் தகவல் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த உறவினர் இறந்தவராக இருந்தால், இறப்புச் சான்றிதழ் சேர்க்க வேண்டிய நிலையும் உருவாகிறது. இப்படிவம் ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப்படும். அதிலும் QR குறியீடு இருக்கும். அதனால் இதனை ஜெராக்ஸ் எடுத்து மாற்றிப் பயன்படுத்துதல் முடியாது. படிவத்தில் சிறிதளவு தவறு ஏற்பட்டால் அதைத் திருத்தும் வாய்ப்பு இருக்குமா? என்பதுகூடத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், 2002-க்குப்பின் வாக்காளராகப் பதிவு செய்தவர்கள் தங்கள் வாக்குரிமையை நிரூபிக்க ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டிய தீர்மானமும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வெறும் முப்பது நாள்களுக்குள் தமிழ்நாட்டின் 6 கோடி 36 இலட்சம் பேரிடம் புதிய படிவங்களை நிரப்பச் செய்து விடமுடியுமா? செயல் ரீதியாகச் சாத்தியமேயில்லை. இந்தச் சிறுகாலத்தில் குறைந்தது 1.5 கோடி மக்கள் வாக்குரிமையைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இழக்கக்கூடும். பின்னர் மேல்முறையீடு அல்லது விசாரணை மூலம் மீண்டும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

இத்தகைய சூழ்நிலையில், இது ஒரு சாதாரண தேர்தல் தொழில்நுட்பப் பணியாகத் தெரியவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA) விளைவாக இருந்த தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) போன்று, இதுவும் மறைமுகமாகக் குடியுரிமையைச் சரிபார்க் கும் முயற்சியாக இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுகிறது.

இன்றைய தேர்தல் ஆணையம் பா... சார்ந்த அரசியல் அழுத்தத்திற்குள் இயங்குவதாகப் பலரும் பார்க்கின்றனர். அதனால், பா... அல்லாத கட்சிகளுக்கு வாக்களிக்கிற மக்கள்தொகையை நீக்கவே அரசியல் நோக்கம் உள்ளதாகவும் ஒரு பரவலான எண்ணம் உருவாகியுள்ளது. .தி.மு.. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மௌன ஆதரவு இச்சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது

வாக்குரிமை என்பது குடிமகனின் அடிப்படை உரிமை. எந்த மதம், சாதி, மொழி, பொருளாதார நிலை கொண்டவராக இருந்தாலும் வாக்குரிமையின் புனிதம் அனைவருக்கும் சமமானது. அந்த உரிமையைச் சுருக்கும் எந்தச் செயலும் சனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். SIR என்ற முறைமையில் பல கேள்விகள் எழுகின்றன. வாக்காளர் பட்டியலை நீக்கி புதிய பதிவு செய்யும் பணியில் அவசரம், அச்சம், சந்தேகம் நிறைந்துள்ளன. ஒருவர் வாக்காளராக இருப்பதற்கு மீண்டும் ஆதாரம் அளிக்க வேண்டிய நிலை வந்தால், அது பொதுமக்களின் நம்பிக்கையையும் சனநாயகத்தின் அடித்தளத்தையும் நசுக்கும். வாக்குரிமை என்பது அரசின் கருணையால் வழங்கப்படும் பிரிவு அல்ல; அது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதனைப் பாதுகாப்பது சனநாயகத்தின் உயிர்ச்சுவாசம்.

பாராளுமன்றம், நீதித்துறை, மக்கள் - மூன்றும் ஒருமித்த குரலில் இதனைச் சீராய்ந்து கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் இதோ வந்துவிட்டது.