“விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” (மத் 12:50). பேரொளியாம் இறைவனின் விருப்பப்படி வாழ்பவரே ஒளியின் மக்கள். அவர்களால் மட்டுமே ஒளியின் செயல்களைச் செய்யமுடியும்; பேரொளியின் சுடராக ஒளிவீச முடியும்; அவர்களின் செயல்கள் இரக்கச் செயல்களாகவே இருக்கும்.
“உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்”
(லூக் 6:36.) என்று இயேசு அறிவுறுத்துகிறார். இறைத்தந்தையின் மக்களாக வாழ்வதற்கு அடிப்படைப் பண்பு, அன்பில் இணைந்த இரக்கம்.
நம்
தந்தையாம் இறைவன் இரக்கம் நிறைந்தவர், பேரன்பு காட்டுகிறவர். நாம் இரக்கச்செயல்கள் புரிந்து, அவரை மாட்சிப்படுத்த வைகறை தோறும் தம் பேரன்பால் நம்மை நிரப்புகிறார். இரக்கம் நிறைந்த அன்பு சமத்துவச் சமுதாயத்தை
உருவாக்கும்; சகோதரத்துவ உணர்வில் மாந்தர் அனைவரையும் உடன்பிறப்புகளாக உருமாற்றும்.
பேருந்தில்
பயணம் செய்யும்போது இந்தச் சகோதரத்துவத்தை நாம் அனுபவிக்கின்றோம். வயோதிகர், ஊனமுற்றோர், கர்ப்பிணி மகளிர், குழந்தையை வைத்திருப்போர் ஆகியோரைக் கண்டதும் நன்மனமுடையோர் உடனே எழுந்து இடம் அளிப்பர். ஒருநாள் நான் பேருந்தில் ஏறி அமர
இடம் தேடும் முன்பே, ஒரு சகோதரர் எழுந்து என்னை அமரச் செய்து வசதியாகப் பயணம் செய்ய உதவினார். இறங்கி இரண்டு பைகளைத் தூக்கிகொண்டு நடந்து வந்தேன். எதிர்ப்புறம் நின்ற ஓர் ஆசிரியை உடனே வந்து, என்னுடைய பைகளைப் பெற்றுக் கொண்டு, நான் சாலையைக் கடந்து என் இல்லம் செல்ல உதவினார். இவருடைய நன்மனம் கொண்ட நற்செயல்
என்னை மகிழ்ச்சிப்படுத்தியது; மனதார அவர்களை வாழ்த்தி நன்றிகூறினேன். இத்தகையோரைப் பார்த்துதான் இயேசு இறுதிநாளில் கூறுவார், “மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40) என்று.
நம்
இரக்கச்செயல்களைக் கொண்டே நாம் இறுதித்தீர்ப்பு பெறுவோம் என்பது இயேசுவின் போதனை மட்டுமல்ல, வாக்குறுதியும் கூட. அதே நேரத்தில் இரக்கமற்றவனுக்கு இரக்கமற்றத் தீர்ப்புதான் கிடைக்கும் என்பதை மத் 25:41-46-இல் நாம் உணர்த்தப்படுகின்றோம். திருப்பாடலில் செபித்து நாம் உறுதி கூறுகின்றோம்: “ஆண்டவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்” (திபா
103:4-5). இறைப் பேரன்பை அனுபவிக்கும் நாம் இரக்கமுடையவர்களாக, வாழ்வளிக்கும் வள்ளல்களாக, வழிநடத்தும் விண்மீன்களாக வாழ்ந்து பிறரையும் வாழ்விப்போம்.
இத்தகைய
நிலையில் நாம் நடந்துசெல்லும் பாதை ஒளியின் பாதை, உண்மையின் பாதை, நன்மை நிறைந்த பாதை. அதுவே வாழ்விக்கும் இரக்கம் நிறைந்த பாதை. இத்தகைய பாதையில் நடப்பவர்கள் இடறிவிழ மாட்டார்கள். இயேசுவின் கரத்தை ‘சிக்’கெனப் பற்றிக்கொண்டு நடப்பவர்கள், நிறைவாழ்வை நோக்கித் திருப்பயணம் மேற்கொண்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக வாழ்பவர்கள், விண்ணகச் செல்வத்தை மட்டுமே சேர்க்கும் ஏழையர் உள்ளத்தோர்... இவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்து வாழும் நம்பிக்கையாளர்கள்.
தூய
ஆவியின் ஆலயமாகிய நம் உடல் ஒளியைத் தாங்கும் விளக்குதான். விளக்காகிய நம்மில் அருளாகிய எண்ணெய் ஊற்றி, சுடர்விடும் ஒளியை ஏற்றுபவர் பேரொளியாம் இறைத்தந்தையே! எனவேதான் அவரிடம் செபிக்கின்றோம்: “ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்; என் கடவுளே, நீர் என் இருளை ஒளியாக்குகின்றீர்” (திபா
18:28).